நிச்சயமாக பானு ஒரு சுனாமிதான் என்று நினைத்துக் கொண்டான் நிக்கி. அவனுடைய விரிந்து பரந்த அனுபவத்தில் இப்படி ஒரு பெண்ணை அவன் கண்டதேயில்லை. முக்கியமாக அவள் பார்வை. பார்வையா அது? சுனாமி...சுனாமி...
ஒருநாள் நிக்கி, பெருமாள், அலெக்ஸ், பானு நான்கு பேரும் ‘டீக்கடை’யில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பானு நிக்கியைப் பார்த்த பார்வை இருக்கிறதே...கண்களாலேயே கற்பழித்துக் குழந்தையும் கொடுத்து விடுவார்கள் என்று சில ஆண்களைப் பற்றி அவன் கேள்விப் பட்டிருக்கிறான். ஆனால் பெண்கள் கூடவா அப்படி இருப்பார்கள்?
அந்தப் பார்வையைப் பற்றி பானுவே பெருமாளிடம் சொல்லியிருக்கிறாள். பானுவும் அவளுடைய முதல் காதலன் விக்ரமும் (அவளுக்கு மூன்று காதலர்கள் உண்டு) ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே ஒரு அழகான யுவன். சினிமாவில் வரும் ஹீரோவையும் தோற்கடிக்கும் அழகு. ஆனால் அவனுடன் இரண்டு பெண்கள். இரண்டு பேரும் அவனுடைய தோழிகளாய் இருக்க முடியாது. பார்த்தால் அப்படித் தெரியவில்லை. உறவுக்காரப் பெண்களாக இருக்கலாம். அவனுடைய பார்வை பானுவின் மீதே மொய்த்துக் கொண்டிருந்தது. சட்டென்று அவனை அவள் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையை அவன் புரிந்து கொண்டான். அவனும் பார்த்தான். அவன் பார்க்க இவளும் பார்த்தாள். இது எதுவுமே விக்ரமின் கவனத்துக்குச் செல்லாமல் மிக ரகசியமாகவே நடந்து கொண்டிருந்தது. அந்த அழகனுடன் வந்திருந்த பெண்களும் இதை கவனிக்கவில்லை.
இதற்குப் பிறகுதான் நாடகம் ஆரம்பம். இவள் திரும்பத் திரும்ப அப்படிப் பார்த்ததும் அழகன் ஆடிப் போய் விட்டான். மிகுந்த பரபரப்புக்குள்ளாகி இவளிடம் தொலைபேசி எண்ணைக் கேட்டான், சைகையிலேயே. இவளால் எப்படிக் கொடுக்க முடியும்? பக்கத்தில் விக்ரம்.
பார்வை நாடகம், சைகை நாடகம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எழுந்து கை கழுவச் சென்றான் விக்ரம். இதுதான் நல்ல தருணம். ‘டேய் அழகா, போன் நம்பரைக் கொடுடா...’ ஆனால் அந்த மடையன் அப்போது பார்த்து அந்தப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தான். சரியாக விக்ரம் வந்து உட்கார்ந்த போதுதான் அழகன் அவள் பக்கம் பார்த்தான். மீண்டும் பார்வை. மீண்டும் போன் நம்பர் கேட்டு சைகை.
போடா மடையா.
பானு எழுந்து கை கழுவ வந்தாள். இப்போதாவது அவன் அவள் பக்கம் திரும்பலாம் அல்லவா? இங்கே வந்தால் போன் நம்பரைக் கொடுக்கலாம். எட்டிப் பார்த்தாள். சரியாக இந்த நேரம் பார்த்து அந்தப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
பானு திரும்பி வந்தாள். அவளுக்கும் யோசனை ஓடியது. அவனுக்கு போன் நம்பரை எப்படிக் கொடுப்பது?
அப்போது விக்ரம் பானுவிடம் அந்த அழகனைச் சுட்டிக் காட்டி “அந்தப் பையன் ரொம்ப அழகாக இருக்கிறான் அல்லவா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று சொல்லிய பானு “அவனை இப்போது என் பக்கம் பார்க்க வைக்கிறேன், பார்க்கிறாயா?” என்றாள்.
”அப்படியா, அது எப்படி?” என்று கேட்டான் விக்ரம், வெகுளியாக.
“பார்.”
“இந்தக் கடையில் பொங்கல் நன்றாக இருக்கும், வாங்கிக் கொண்டு போகலாமா?” என்று கேட்டான் விக்ரம்.
அழகனின் தொலைபேசி எண் கிடைக்காத விரக்தியில் இருந்த பானு “வேண்டாம், கிளம்பலாம்” என்றாள். அப்போது அவன் கண்களை மீண்டும் ஊடுருவினாள் பானு. அவன் அவளைப் பார்த்தான். அதைப் பார்த்த விக்ரம் “எப்படி நீ சொன்ன மாதிரியே அவன் உன்னைப் பார்க்கிறான்?” என்று மீண்டும் வெகுளியாய்க் கேட்டான்.
”சரி, கிளம்பலாமா?” என்று கேட்ட விக்ரமிடம் “பொங்கல் வாங்கிக் கொண்டு போகலாம்” என்றாள் பானு. ஒரு கடைசி முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. விக்ரம் ஆர்டர் கொடுக்க எழுந்து போனான். அழகனைப் பார்த்தால் ஆளையே காணோம். அடப் பாவி, எங்கே போய்த் தொலைந்தாய்?
சரியாக விக்ரம் வந்து அமரும் போது அந்த நாய் டாய்லட்டிலிருந்து வருகிறான். மறுபடியும் போன் நம்பர் கேட்டு சைகை.
போடா மடையா...
வெளியே வரும்போது கூட சைகையால் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒருநாள் இது பற்றி ரொம்ப உற்சாகத்துடன் பெருமாளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பானு. உள்ளுக்குள் ஏற்பட்ட கோபத்தை மறைத்துக் கொண்டு அவளிடம் கேட்டான் பெருமாள்: “சரி, அந்த அழகனிடம் உன்னுடைய நம்பரைக் கொடுத்து விட்டாய். அவனும் பேசுகிறான். அப்புறம் அவன் உன்னை சினிமாவுக்குக் கூப்பிடுவான்; பீச்சுக்குக் கூப்பிடுவான்; கை போடுவான். இல்லையா?”
“சீ...சீ...நாம் என்ன சாக்கடையா கண்டவனும் கை போடுவதற்கு? ‘போர்’ அடித்தால் சும்மா மொக்கை போடலாம். அவ்வளவுதான்...”
***
இதே போல் ஒரு சம்பவம் பெருமாளுடனும் நடந்தது. பெருமாளும், பானுவும் செனடாஃப் ரோடிலுள்ள டாபா எக்ஸ்பிரஸில் அமர்ந்திருந்தனர். அப்போது எதிர் சாரியில் வெளிநாட்டைச் சேர்ந்த நான்கு பேர் வந்து அமர்ந்தனர். இரண்டு ஆண்கள்; இரண்டு பெண்கள். அதில் ஒரு ஆள் படு அழகாக இருந்தான். சிறிது நேரம் சென்று பானு பெருமாளிடம் சொன்னாள்: இப்போது அவன் என்னையே பார்ப்பான், பார்.
அவள் சொன்னது போலவே அவனும் அவளைப் பார்த்தான்.
எப்படி?
அன்றைய தினம் விக்ரமுக்கு ஆன கதிதான் இன்று பெருமாளுக்கு ஆகியிருக்கிறது. பார்வை நாடகம் முழுவதும் பெருமாளுக்குத் தெரியாமலேயே நடந்திருக்கிறது என்பதுதான் அவனுக்கு ஆச்சரியம்.
ஆனால் இதெல்லாம் அவளுக்கு மட்டுமே ஆன உரிமை. பெருமாள் செய்தால் கொன்று விடுவாள். ஒருநாள் பானுவும் பெருமாளும் பேசிக் கொண்டிருக்கும்போது பானுவுக்கு ரோஸ்லினிடமிருந்து போன் வந்தது. பானு பேசி விட்டு போனை பெருமாளிடம் கொடுத்தாள். பெருமாள் ரோஸ்லினிடம் ஆர்வமாகப் பேச ஆரம்பித்தான். அப்போது தன்னுடைய பேனாவை எடுத்து தன் உள்ளங்கையில் ‘கொ’ என்று எழுத ஆரம்பித்தாள் பானு. ரோஸியிடம் பேசிக் கொண்டே என்ன எழுதுகிறாள் என்று கவனித்தான். அடுத்த எழுத்து ‘ஞ்’. ‘ஓ, கொஞ்சாதே’ என்று சொல்கிறாள் போலிருக்கிறது என்று நினைத்தான். ஆனால் கடைசியில் பார்த்தால் ‘கொஞ்சமா பேசு’ என்று எழுதிக் காட்டினாள்.
நிக்கி அவளை சுனாமி என்று சொன்னது சரிதான். ஒருநாள் ‘டீக்கடை’யில் வழக்கம் போல் பெருமாள், நிக்கி, அலெக்ஸ் மற்றும் பானு. மது அருந்தும் போது நிக்கியும் பெருமாளும் எதுவும் தொட்டுக் கொள்வதில்லை. ஆனால் அலெக்ஸ் அப்படி இல்லை. ஏதோ இரண்டு மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்தவன் போல் நொறுக்குத் தீனியை நொறுக்குவான். அதனால் அவனுக்காக வடை சொல்லப் பட்டது. ஆர்டர் கொடுக்கும் போது நிக்கி பானுவிடம் நக்கலாக “பொத்தல் போட்ட வடையா? பொத்தல் போடாத வடையா?” என்று கேட்டான். அதற்கு பானு சொன்ன பதில்: “எதனால் போட்ட பொத்தல்? வாயா, விரலா?”
இப்போது சொல்லுங்கள், பானு சுனாமியா, இல்லையா?
***
10.9.2008.
9.35 p.m.