குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (46)

 

பெருமாளின் புதுக் காதலியின் பெயர் ஜெஸிந்தா. வயது 17. இளங்கலை முதல் ஆண்டு. பெருமாளின் சூன்ய வெளி நாவலைப் படித்து அவன் மீது காதல் கொண்டவள். பார்க்க அந்தக் காலத்து கிளியோபாத்ரா மாதிரி இருப்பாள். இவனுக்கு இதேதான் வேலை; பார்க்கும் பெண்களையெல்லாம் ரம்பை ஊர்வசி என்று அளந்து கொண்டிருப்பான். இப்போது கிளியோபாத்ரா என்கிறான். எல்லாம் புருடா என்று நீங்கள் நினைக்கலாம்.

சரி, விடுங்கள். ஏதாவது ஒரு இலக்கியக் கூட்டத்தில் அந்த தேவதையை பெருமாளுடன் பார்க்காமலா இருக்கப் போகிறீர்கள்? அப்படித்தான் ஒருநாள் அலெக்ஸின் அலுவலகத்தில் அலெக்ஸுடன் பெருமாளும், பானுவும் பேசிக் கொண்டிருந்த போது அங்கே எதேச்சையாக வந்து சேர்ந்தார் எஸ். ராமகிருஷ்ணன். ஜெஸிந்தாவைப் பார்க்க அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று நான் வணங்கும் மாதவப் பெருமாளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

போதையூட்டும் கண்கள். தொட்டால் கன்றி விடும் என்று சொல்லத்தக்க நிறம். பளிங்குக் கன்னம். துள்ளிக் குதிக்கும் முயல் குட்டிகளை ஒத்த முலைகள்.

தேவதை...தேவதை...

நேற்று அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பெருமாள் எடுக்கவில்லை. எடுக்க முடியாத சூழ்நிலை. மீண்டும் மீண்டும் அழைக்கிறாள். மீண்டும் மீண்டும் துண்டிக்கிறான்.

உடனே ஒரு குறுஞ்செய்தி வருகிறது. “நான் இப்போது மின்சார ரயிலில் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். வாசலில் நிற்கிறேன். நீங்கள் இப்படிச் செய்தால் ரயிலிலிருந்து குதித்து விடுவேன்.”

***

1.9.2008.

11.30 a.m.