கிழக்கு பதிப்பகம் நடத்தும் மொட்டைமாடிக் கூட்டத்துக்கு 20.9.2008 அன்று சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்த போது சாரு நிவேதிதா பேசிய உரையின் முழு வடிவம் :
எழுத்து எப்படி ஒரு கலையோ அதேபோல் பேச்சும் ஒரு கலை. எனக்கு எழுத்தில் சுவாதீனமாக இருக்கமுடியும். எழுத்தில் அடித்துத் திருத்தியெல்லாம் எழுதலாம். எழுதுவதை நிறுத்திவிட்டு அதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் பேச்சில் அப்படி எதுவும் முடியாது. வைரமுத்து போன்றவர்கள் வெள்ளம் மாதிரி பொழிந்து தள்ளுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனும்கூட. எங்கிருந்து வார்த்தைகள் கொட்டுகின்றன என்று தெரியவில்லை.
பிரபஞ்சனுடைய பேச்சும் எனக்குப் பிடிக்கும். நடிப்பைப் போல் பேச்சும் ஒரு கலை. இன்னொன்று , என்னுடைய எழுத்துக்கும் மற்றவர்களுடைய எழுத்துக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்திருக்கும். நான் பேசுவது போலத்தான் எழுதுவேன். புரிகிற எழுத்தைப் புரியாமல் செய்கிற வித்தை எனக்குத் தெரியாது.
இன்று இணைய தளங்களில் நிறைய பேர் எழுதுகிறார்கள். எழுத்து என்பது Democra tize ஆகியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை எழுத வைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னவென்றால் - எந்த விஷயத்தில் ஈடுபட வேண்டுமானாலும் அதில் ஓர் உழைப்பு தேவைப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இரண்டு வருட காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் , ஏழு மணி நேரம் உழைத்தால்தான் அந்த மொழியில் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும். அதே மாதிரிதான் இசையும். பல மணி நேரப் பயிற்சி அதற்குத் தேவை. இதையெல்லாம் விட அசாதாரண விஷயம் , மொழி. அப்படிப்பட்ட மொழி என்ற வடிவம் கைக்கெட்டிய தூரத்தில் கிடைத்தவுடன் ஏதோ ஒன்றைக் கடகடவெனத் தட்டி அதை Blog- ல் போடுவதென்பது ரொம்பவும் பொறுப்பில்லாத ஒரு விஷயமாகத் தோன்றுகிறது.
உரைநடையில் நகுலன், ப.சிங்காரம் , அசோகமித்திரன் , ஆதவன் என இருபத்தைந்து முப்பது பேர் இருக்கிறார்கள். இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளாமல், இவர்களைப் படிக்காமல் சிறுகதை ஒன்றை எழுதி அதை எனக்கும் அனுப்பி ’ எப்படி இருக்கிறது? ’ என்று கேட்கிறார்கள். பதிலுக்கு ’ நீங்கள் இதுவரை என்னென்ன படித்திருக்கிறீர்கள்? ’ என்றுதான் கேட்பேன். அதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவர்களுடைய சிறுகதையை என்னால் படிக்கவே முடியும். சிறுகதையாவது பரவாயில்லை. மூன்று நான்கு பக்கம் எழுத வேண்டும். கவிதை? சொடுக்குப் போடும் நேரத்தில் ஒரு மரத்தைப் பற்றியோ அல்லது அதைப் போல் எதையாவது பற்றி ஒரு கவிதையை எழுதி விடுகிறார்கள்.
ஒருநாளைக்கு மட்டும் எனக்கு இருபது பேர் கவிதை அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். எவ்வளவு துன்பம் பாருங்கள். ஆத்மாநாம் படித்திருக்கிறீர்களா ? ஆத்மாநாம் என்ன? நான் ஆண்டாளுக்கும் போவேன். ஆண்டாள் தெரியாமல் எப்படி கவிதை எழுதுவீர்கள் ? நான் ஒரு கவிஞன் அல்ல. ஆனாலும் தினமும் ஆண்டாளை எடுத்து வைத்துக் கொண்டு சொக்கிப் போகிறேன். சரி , இவ்வளவு கூட வேண்டாம். பாரதியையாவது படிக்கவேண்டும் அல்லவா? பாரதிக்குப் பிறகு சமகாலத்தில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று ஒரு கவிஞன் தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஆத்மாநாமைப் படிக்கலாம். மனுஷ்யபுத்திரனைப் படிக்கலாம். தருமு சிவராமைப் படிக்கலாம்.. தருமு சிவராமுவின் பெயரே இங்கு யாருக்கும் தெரியவில்லை. அவருடைய மொத்தத் தொகுப்புகளையும் பதிப்பிக்கவேண்டும். ஒவ்வொன்றும் எங்கெங்கோ சிதறிக் கிடக்கின்றன. பாரதிக்குப் பிறகு என்னை மிகவும் impress செய்தவர். அவர் ஒரு பெர்சானலிடி. சிந்தனையாளர். அவருடன் எனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மிக முக்கியமானவர். தேவதச்சன் , தேவதேவன் , பிரம்மராஜன் இப்படி ஏகப்பட்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் படிக்காமல் கவிதை என்று எதையோ ஒன்றை எழுதி அதை blog- ல் போட்டு , ஒருமாதிரி பொறுப்பற்ற முறையில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில்தான் ராமகிருஷ்ணன் , ஜெயமோகன் எல்லாம் வலுவாக இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களை நன்றாகத் தயார் கொண்டிருக்கிறார்கள். அசோகமித்திரனைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம். பொதுவாக ஆங்கிலம் தெரிந்த தமிழ் எழுத்தாளர்களான அசோகமித்திரன் , தருமுசிவராமு எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆங்கிலத்தில் எழுதவில்லை. எழுதியிருந்தால் ஓரான் பாமுக் அளவுக்கு உலக அளவில் அவர்களின் பெயர் தெரிய வந்திருக்கும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக் கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இளைஞர்கள். அவர்கள் ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு தமிழையும் கற்றுக் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இது என்னுடைய பெரிய ஆதங்கமாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது.
சமீபத்தில் நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன். தெஹல்கா பத்திரிகையிலிருந்து ஒரு இளைஞி என்னைப் பேட்டி எடுத்தார். ஆங்கிலத்தில். அவருடைய உச்சரிப்பைப் பார்த்து மலையாளி என்று புரிந்துகொண்டேன். உங்களுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்றார். சுவாதீனமாக இருவரும் பிறகு தமிழில் பேசிக்கொண்டோம். அது தெஹல்காவில் வெளிவந்தது.
அதன்பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து ஒரு பெண் என்னிடம் பேசினார். நாலு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விரிவாகப் படித்திருந்தார் அவர். ப்யூகோவஸ்கிக்கும் உங்களுக்கும் ஒற்றுமையைப் பார்த்தேன் என்றெல்லாம் சொன்னார். ” என்னுடைய இணைய தளத்தைப் படிக்கிறீர்களா? ” என்று கேட்டேன். ” இல்லை , எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. நான் ஒரு மலையாளி ” என்றார். பிறகு என் புத்தகத்துக்கு விமரிசனம் எழுதினார்.
அடுத்து, டெக்கான் கிரானிகிள் நாளிதழில் இருந்து ஓர் இளைஞர் அழைத்தார். God and I என்றொரு கட்டுரைப் பகுதிக்காக. அதைப் படிப்பீர்களா என்று கேட்டார். ” படிப்பேன். எனக்குப் பிடித்தக் கட்டுரைப் பகுதி அது ” என்று கூறினேன். பிறகு ” நீங்கள் யார் , என்னை எப்படித் தெரியும்? ” என்று கேட்டதற்கு ” நான் ஒரு மலையாளி ” என்று கூறினார். என் எழுத்தைப் பல வருடங்களாக மலையாளப் பத்திரிகைகளில் படித்து வருவதாகவும் சொன்னார்.
எனில் ஏன் இங்குள்ள ஆங்கிலப் பத்திரிகை நிருபர்களுக்கு தமிழ் எழுத்தாளர்களைத் தெரிவதில்லை. தமிழ் எழுத்தாளர்கள் என்றால் உடனே கோயம்புத்தூர் சென்று ராஜேஷ்குமாரைச் சந்திக்கிறார்கள். அசோகமித்திரன் மகன்கூட ஹிந்துவில்தான் வேலை பார்க்கிறார். ஆனால் என்ன பிரயோஜனம் ? ஆனால் அந்த மலையாளப் பெண் நிருபர் அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார்.
நாடகம் என்றால் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒய்.ஜி.மகேந்திரனைப் பேட்டி எடுத்து எழுதுகிறார்கள். ஏன் அவர்கள் கூத்துப்பட்டறை முத்துசாமியையோ அல்லது இந்திரா பார்த்தசாரதியையோ கூப்பிடுவதில்லை ? இதையெல்லாம் நான் வெளியே சொன்னால் ஹிந்துவில் என் புத்தகத்தைப் பற்றிய விமரிசனம் வராது. பரவாயில்லை. ஐ டோண்ட் கேர்.
கமல்ஹாசன் பற்றி நான் விமரிசனம் செய்யாவிட்டால் அவருடைய உள்வட்டத்துக்குள் நான் இருந்திருக்கமுடியும். 15 வருடத்துக்கு முன்பு நான் குருதிபுனலை கிழிகிழி என்று கிழித்ததில் அவர் மனம் புண்ணாகி என்னை அவருடைய நட்பு வட்டத்துக்குள் சேர்க்கவில்லை. பரவாயில்லை. இதனால் எனக்கு எந்த இழப்பும் கிடையாது.
முக்கியமான இரண்டு விஷயங்கள்: பணம் மற்றும் புகழ். இரண்டும் எனக்கு வேண்டாம் என்கிறேன். சமரசம் செய்துகொண்டு குருதிப்புனலை காவியம் என்று சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கமலுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கு உண்டு. இருந்தாலும் அவருடைய தசாவதாரத்தை கிழிகிழி என்று கிழித்துத் தோரணம் கட்டியதில் அவர் வருத்தப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஸீரோ டிகிரியை கிழிகிழி என்று கிழியுங்கள். அதுபற்றி நான் கவலைப் பட மாட்டேன். நட்பு வேறு ; விமரிசனம் வேறு. ஆனால் சினிமாக்காரர்கள் அதுபோல் எடுத்துக் கொள்வதில்லை.
எனக்குப் புகழ் தேவையில்லை. புகழ் என்பது ஒரு கொடுமையான சுமை. அமெரிக்காவில் கமல் கெளதமியோடு சென்றதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினார்கள். அடப்பாவிங்களா , அமெரிக்காவில்கூட இவரை விடமாட்டேன் என்கிறீர்களே என்று எண்ணிக்கொண்டேன். ரஜினியெல்லாம் ஒரு பொது இடத்துக்கு சுதந்திரமாகச் செல்ல வேண்டும் , ஷாப்பிங் செய்யவேண்டும் என்றால் சந்திர மண்டலத்துக்குத்தான் போக வேண்டும் என்று நினைக்கிறேன்.
எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் குசேலனுக்காக கட் அவுட் வைத்தார்கள். தியேட்டரில் டிக்கெட்டைக் கிழித்துத் தூக்கிப் போட்டதால் அவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அமெரிக்கா சென்றாலும் தமிழர்கள் தங்களுக்குப் பழக்கமான வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
புகழ் என்பதே பிரச்சினையான ஒன்றுதான். அதனால் எந்தப் பயனும் கிடையாது. அதனால் புகழ் , பணம் இரண்டு விஷயங்களுக்கும் நான் மயங்குவது கிடையாது. எனக்குப் பணம் வேண்டும்தான். 50 லட்சம் இருந்தால் லத்தீன் அமெரிக்கா முழுக்க சுற்றிக் கொண்டு வரலாம். ஆனால் அதற்கு என்ன விலை கொடுக்கிறேன் என்று இருக்கிறது! இதற்காக நான் தசாவதாரத்தைப் பாராட்டிக்கொண்டு, அதனால் வருகிற பணமெல்லாம் எனக்குத் தேவையில்லை.
கேரளாவில் என்னிடம் சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன என்று கேட்டால் நான் தமிழில் நான்கு ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் இருக்கிறது என்று சொல்வேன். ஜெயமோகன் , கோணங்கி , எஸ்.ராமகிருஷ்ணன் , சாரு நிவேதிதா என்று நான்கு ஸ்கூல்ஸ். ஆனால் ஜெயமோகனிடம் கேட்டால் என்ன சொல்லுவார் தெரியுமா? ” தமிழ்நாட்டில் எதுவும் நடக்கறதில்லைங்க. நான் மட்டும்தான் எழுதிகிட்டு இருக்கேன். விஷ்ணுபுரம் நாவலை தமிழின் ஆகச் சிறந்த படைப்பாகச் சொல்லலாம் ” என்று சொல்லிவிட்டு வந்துவிடுவார். இதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. ஜெயமோகனை நான் குறை சொல்லவில்லை. ஆனால் நாம் வெளியில் போய் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கக் கூடாது. அந்த ஸ்கூல் ஆஃப் தாட்டுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது உள்நாட்டு யுத்தம். அதற்காக வெளியில் போய் போட்டுக் கொடுக்கக் கூடாது. பிறகு நண்டு கதை மாதிரிதான் இருக்கும். நடிகர் விவேக் சொல்லும் தமிழ் நண்டு கதை மாதிரி ஆகிவிடக்கூடாது.
தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்வதற்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும். நல்ல தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். மொழிபெயர்ப்பில் உள்ள பெரிய சோகம் என்னவென்றால் கள்ளை ஒயின் என்று மொழிபெயர்க்கிறார்கள். சா.கந்தசாமியின் நாவல் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பில் ஒரு பக்கத்துக்கு இருபது பிழைகள் உள்ளன.
ஹிந்து பத்திரிகையைக் கூர்ந்து கவனியுங்கள். அதில் வருகிற இலக்கியவாதிகள் அத்தனை பேரும் மலையாளிகளாக இருப்பார்கள். சமீபத்தில் பிரியநந்தனன் என்கிற கேரள இயக்குநரைப் பற்றிப் பெரியக் குறிப்பு ஒன்று ஹிந்துவில் வந்திருந்தது. இப்படியே தொடர்ந்து மலையாள இலக்கியவாதிகள் , மலையாள சினிமாக்காரர்கள் , மலையாள கலைஞர்களைப் பற்றியே சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. இதைக் கவனியுங்கள். ஏன் தமிழில் உள்ளவர்களைப் பற்றி இவர்கள் எழுதுவதில்லை ?