கார்த்திக் ஒரு இந்திப் பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி அல்ல. தொடர்ந்து 50 முறை கூட இடைவிடாமல் கேட்பான். அவன் கேட்டு முடித்ததும் நானும் போய் அதை மறுபடியும் போடச் சொல்வேன். இப்படி இரண்டு பேரும் பைத்தியமாய்க் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பாடல் எந்தப் படம், யார் பாடியது என்று கேட்டேன். ரஷீத் அலி பாடிய பாடல் , ஜானே து யா ஜானே நா என்ற படம் என்று தெரிந்தது.
அந்தக் காலத்தில் (1973) ஆ கலே லக் ஜா (வந்து என்னை அணைத்துக் கொள்) என்று ஒரு இந்திப் படம். சஷி கபூர், ஷர்மிளா டாகுர் நடித்தது. அதில் கிஷோர் குமார் பாடிய அருமையான பாடல் ஜானே து யா ஜானே நா. சென்னை செனடாஃப் சாலையில் உள்ள டாபா எக்ஸ்பிரஸ் என்ற டாபாவுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். சென்னையிலேயே மிகச் சிறந்த டாபா அதுதான். அதை எனக்கு அறிமுகப் படுத்திய நாராயணுக்கு நன்றி. அந்த டாபாவில் இது போன்ற பழைய இந்திப் பாடல்களைக் கேட்கலாம்.
ஜானே து யா ஜானே நா (உனக்குத் தெரியுமா, தெரியாதா) ஒரு மிக நல்ல பொழுதுபோக்குப் படம். ஜெய் (இம்ரான் கான்), அதிதி (ஜெனிலியா) இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் இருவரும் காதலர்கள் என்பதாகவே அவர்களுடன் படிக்கும் மற்ற மாணவர்கள் நினைக்கிறார்கள். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அதிதியின் பெற்றோர் ஜெய்யை அழைத்து அவர்களுடைய திருமணம் பற்றிப் பேசுகிறார்கள். அதைக் கேட்டு அதிதி அதிர்ச்சி அடைகிறாள். ”இவன் என்னுடைய நண்பன் தான்; காதலன் அல்ல” என்கிறாள்.
பிறகு அதிதிக்கு ஒரு காதலனை ஜெய்யும், ஜெய்க்கு ஒரு காதலியை அதிதியும் பார்த்துக் கொடுப்பதாக இருவரும் முடிவு செய்கிறார்கள். அதற்குப் பிறகு கதை சுவாரசியமாகப் போகிறது. இந்தி சினிமாவில் இப்படி ஒரு கதையை நான் இதுவரை பார்த்ததில்லை.
படம் முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். ஏ.ஆர். ரஹ்மான் அமர்க்களப் படுத்தியிருக்கிறார். நான் முதலில் குறிப்பிட்ட ரஷீத் அலி பாடிய கபி கபி என்ற பாடல் படத்தின் ஆரம்பத்தில் வருகிறது. அதிதி ஒரு பூனை வளர்க்கிறாள். ஒருநாள் அந்தப் பூனை இறந்து விடுகிறது. அந்த துக்கத்தில் இருக்கும் அவளைச் சிரிக்க வைக்க முயல்கிறான் ஜெய். அதுவே அந்தப் பாடல். சமீப காலத்தில் இவ்வளவு அருமையான பாடலை நான் கேட்டதில்லை. இதே போல் இந்தப் படத்தில் ரஷீத் அலி பாடிய கஹீ(ங்) தோ என்ற பாடலையும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
***
3.9.2008
10.00 p.m.