இதை நான் பெங்களூரிலிருந்து டைப் செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சம் ஹிட்ஸைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடலாம் என்று பெங்களூருக்கு வந்தேன். காரில் வர பயம் என்று சீனிவாசனைத் தனியாக அனுப்பி விட்டு பஸ்ஸில் வந்தேன். ரயிலில் டிக்கட் கிடைக்கவில்லை.
பஸ் பயணம் நரகம். டாய்லட் இல்லாத வாகனங்களில் பயணம் செய்யும் நரக அனுபவத்தை ஏற்கனவே பலமுறை அனுபவித்து இனிமேல் பஸ்ஸிலேயே செல்வதில்லை என்று தீர்மானமெல்லாம் செய்திருக்கிறேன். ஒருமுறை கேரளாவில் ஒரு அன்பர் பஸ்ஸில் அழைத்துச் சென்று விட்டார். எனக்கோ அவசரம். இன்னும் நாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு அரை மணி நேரம் தான் பயணம் செய்ய வேண்டும். நண்பரிடம் பிரச்சினையைச் சொன்னேன். இறங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு வேறொரு பஸ்ஸில் செல்லலாம் என்றேன். நண்பர் அரை மனதுடன் கண்டக்டரிடம் சொல்ல கண்டக்டர் வேறொரு ஆலோசனை சொன்னார். என் நண்பரை கண்டக்டர் நன்கு அறிந்திருந்தார். தினமும் நண்பர் அந்த பஸ்ஸில்தான் ஒரு மணி நேரம் பயணம் செய்து அலுவலகம் செல்வாராம். அந்த வகையில் கண்டக்டர் செய்த உபகாரம், பஸ்ஸை ஏதோ ஒரு ஊரின் பஸ் ஸ்டாண்டின் அருகே ஒரு ஓரத்தில் நிறுத்தி “சென்று வாருங்கள்” என்றார்.
முழு பஸ்ஸும் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது எங்கே வரும்? சும்மாவே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்து விட்டு வந்து விட்டேன்.
அதே போன்ற அனுபவம்தான் பெங்களூர் பஸ்ஸிலும். ஒரு இடத்தில் கொண்டு வ்ந்து நிறுத்தி விட்டு “சென்று வாருங்கள்” என்பார் ஓட்டுநர். ஹெட் லைட் வெளிச்சத்தில் என்ன வரும்? அதுவும் பஸ்ஸிலிருந்து ஒருத்தர் கூட இறங்கி வர மாட்டார்கள்.
கொடுமை.
நல்ல வேளை. இந்தப் பிரச்சினையை எதிர்பார்த்துத்தான் ஏஸி பஸ்ஸில் டிக்கட் எடுக்கவில்லை.
மும்பை சூர்யா, சீனிவாசன், கோபால கிருஷ்ணன் மூன்று பேர். விரைவில் முகுந்த் நாகராஜும் வந்து இணைந்து கொள்ளலாம்.
***
1.9.2008.
10.15 a.m.