ஓம் சாந்தி ஓம்: ஒரு பின்நவீனத்துவ கலாட்டா

 

இப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அடுக்கு அடுக்கான பல அர்த் தங்கள் விரவிக் கிடக்கின்றன.

ஒரு காட்சியில் ஃபில்ம் ஃபேர் விருது வழங்கும் விழா. மேடையில் வெளிச்சம் வருவதற்கு முன்னதாக பரிசை வழங்கப்போகும் இருவர் (பிரபல தயாரிப்பாளர் சுபாஷ் கய்யும் , ரிஷிகபூரும்) யார் பரிசை வழங்குவது என்று ஒருவரை யருவர் அசிங்க அசிங்கமாகத் திட்டிக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக திரைச்சீலை விலக்கப்பட்டு விளக்குகள் எரிய ஆரம்பித்துவிடுகின்றன. அடித்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று அசடு வழிய சிரித்துக்கொண்டு பார்வையாளர்களை நோக்கி வணங்குகின்றனர். பார்வையாளர்கள் என்றால் யாரோ அல்ல. அமிதாப் பச்சன் , அபிஷேக் பச்சன் , பப்பி லஹ்ரி , ஷபானா ஆஸ்மி , பிபாஷா பாஸ §, ஃபெரோஸ்கான் , அக்ஷய் குமார் , சுங்க்கி பாண்டே , ரித்திக் ரோஷன் , ராகேஷ் ரோஷன் மற்றும் பல இந்தி சினிமா பிரபலங்களே பார்வையாளர்களாக நடித்திருக்கின்றனர். வெறும் பார்வையாளர்களாக மட்டும் அல்ல ; அமிதாப் அமிதாப்பாக , அபிஷேக் அபிஷேக்காக. அதாவது புனைவாக அல்லாமல் அவரவர் அவரவராகவே இடம் பெற்றிருக்கின்றனர். இதெல்லாம் தமிழ் சினிமாவில் இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. மேலும் அந்த ஃபிலிம் ஃபேர் விழாவில் விருது வழங்கப்படும் அறிவிப்பு தொடங்கியதும் , விருது தனக்குத்தான் என்ற நிச்சயத்தில் அபிஷேக் பச்சன் எழுந்துகொள்ளும்போது ஓமின் (ஷாருக்கான்) பெயர் அறிவிக்கப்பட , அபிஷேக் பச்சன் ஓமிடம் பெயருக்குச் சிரித்துவிட்டு அவர் நகர்ந்ததும் பற்களை நறநறவென்று கடிக்கிறார். இங்கே விஷயம் என்னவென்றால் - நிஜவாழ்விலேயே ஷாருக்கானுக்கும் அபிஷேக் பச்சானுக்கும் ஆகாது.

படத்தில் எது நிஜம் , எது சினிமா என்றே தெரியாத படி அந்த அளவுக்குப் புனைவும் நிஜமும் ஊடாடி ஊடாடிப் பனி மூட்டமாக வந்து கொண்டேயிருக்கிறது.

இதைப் புரிந்து கொள்வதற்காகவே ஃபரா கானின் வாழ்க்கையைப் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.

தான் கண்டு , கேட்டு , அனுபவித்த இந்தி சினிமா உலகையும் , தன் சொந்தக் கதையையுமே ஃபராகான் ஓம் ஷாந்தி ஓமாக எடுத்திருக்கிறார். ஃபரா கான் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது அவர் தனது 43 ஆவது வயதில் மூன்று குழந்தைகளைத் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடக்கும் வேளையில் இயல்பிலேயே உணர்ச்சி வசப்படுபவரான ஃபராகான் அடிக்கடி கோபத்தில் கொந்தளிக்கும்போது அவர் கணவர் ஷிரிஷ் “ ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ என்று சொல்லிக்கொண்டே இரு ” என்று ஆலோசனை கூறுவாராம்! ஃபெப்ருவரியில் ( 2008) குழந்தைகளை எதிர்பார்க்கும் ஃபரா கான் அவர்களுக்கு அமர் , அக்பர் , ஆண்டனி என்று பெயரிட்டியிருக்கிறார்!

படத்தில் ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ என்ற பாடல் காட்சியில் சயஃப் அலிகான் , மலைக்கா அரோரா , ஷபானா ஆஸ்மி , வித்யா பாலன் , மிதுன் சக்ரவர்த்தி , ஜுஹி சாவ்லா , ப்ரியங்கா சோப்ரா , பாபி தியோல் , தர்மேந்திரா , லாரா தத்தா , சஞ்சய் தத் , கோவிந்தா , ஜிதேந்திரா , கஜோல் , கரிஷ்மா கபூர் , துஷார் கபூர் , சல்மான்கான் , அக்ஷய் குமார் , ஊர்மிளா மதோந்கர் , ராணி முகர்ஜி , ஷில்பா ஷெட்டி , சுனில் ஷெட்டி , தபூ , ப்ரீத்தி ஸிந்தா என்று பலப்பல முன்னாள்/ இந்நாள் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடியிருக்கின்றனர். (அமிதாப்பும் , அபிஷேக்கும் இக்காட்சிக்கு வரவில்லை ; ஷாருக்கானுடன் சண்டை அதிமாகிவிட்டது போலும்!) அதாவது , 70 களின் சூப்பர் ஸ்டார்களான தர்மேந்திரா , ஜிதேந்திரா , ராஜேஷ் கன்னா போன்றவர்களோடெல்லாம் இளம் நடிகை தீபிகா நடனமாடியிருக்கிறார். கற்பனை செய்து பாருங்கள்: ஒரு இளம் தமிழ் நடிகை - ‘ கல்லூரி ’ யின் கதாநாயகி தமன்னா - எஸ்.எஸ்.ராஜேந்திரன் , நாகேஷ் , சிவகுமார் , ஸ்ரீகாந்த் போன்ற பழைய நடிகர்களோடு டூயட் பாடி ஆடுவதை!

இதே காட்சியில் ஷாருக் கான் , சல்மான் கான் , சயஃப் அலிகான் , சஞ்சய் தத் நால்வரும் தங்கள் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு ஆடுகின்றனர்.

‘ ஓம் ஷாந்தி ஓம் ’ பற்றி நிறைய எழுதிக்கொண்டே போகலாம். ஏனென்றால் ஃபரா கான் இதில் 35 ஆண்டுக்கால இந்தி சினிமாவின் வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். திடீரென்று கால இயந்திரத்தில் 35 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது போல் தெரிகிறது. இல்லை. தவறு. 35 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் 2007 க்குக் கொண்டுவரப்பட்டு நிகழ்த்தப்படுவதால் திடீரென அதுவே ஒரு பகடியாகிவிடுகிறது.

பின் நவீனத்துவத்தில் இதை Metatext என்று குறிப்பிடுவார்கள். பிரதிக்குள் பிரதி. கேலி , கிண்டல் , சுயஎள்ளல் , படைப்பாளியின் குறுக்கீடு (கேமராவின் ஊடாக படைப்பாளியே நேரடியாகப் பேசுவது) போன்றவற்றின் மூலம் ஒரு பிரதியானது பிரதி உருவாக்கம் என்பதன் செயற்கைத் தன்மையைக் கிண்டலடிப்பதே மெட்டா டெக்ஸ்ட். இதை Self – reflexiing என்றும் கூறலாம். (தமிழ் சினிமாவின் ‘ இம்சை அரசன்: 23 ஆம் புலிகேசி ’ யில் இத்தன்மை ஓரளவுக்கு உண்டு) ‘ தூம் தனா ’ என்ற பாடல் காட்சி (பிரதி) 1966- இல் வெளிவந்த சுனில் தத்-வைஜெயந்தி மாலா நடித்த அம்ரபாலி என்ற படத்தையும் , 1970 இல் வெளிவந்த ராஜேஷ் கன்னா - மும்தாஜ் நடித்த சச்சா ஜுட்டா என்ற படத்தையும் , 1977 இல் வெளிவந்த ஜிதேந்திரா -ஜெயஸ்ரீ நடித்த ஜெய்-விஜய் படத்தையும் உப பிரதிகளாகக் ( su தீ- t மீஜ் ts) கொண்டிருக்கிறது. ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ படத்தைக் குறைந்தபட்சம் 50 முறையேனும் நான் பார்க்க விரும்புகிறேன். காரணம் , கொண்டாட்டம். கொண்டாட்டம் என்ற வார்த்தையை நாம் அதன் அர்த்தத்தில் திளைக்காமலேயே வெகு சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ கொண்டாட்டத்தின் உச்சம். ஒரு காட்சியில் ஷாருக்கானும் தீபிகாவும் 70 களின் பாணியில் பேட்மின்டன் ஆடுகிறார்கள். மற்றொரு காட்சியில் ‘ குச் குச் ஹோத்தா ஹை ’ யின் புகழ்பெற்ற ஜோடிகளான ஷாருக்கும் கஜோலும் டூயட் பாடுகிறார்கள். இப்படிப் படம் நெடுகிலும் பிரதிக்குள் பிரதி ஊடுபாவிக்கொண்டேயிருப்பதால் எது ‘ நிஜம் ’ எது ‘ சினிமா ’ என்பது தெரியாத ஆச்சரியமான ஒருவித கேளிக்கை உணர்வை உண்டு பண்ணுகிறது.

பாடல் காட்சிகள் மட்டுமல்ல , படம் முழுவதுமே பார்வையாளர்களிடம் ஒரு துள்ளாட்டத்தை ஏற்படுத்தி , மனதையும் , உடலையும் கள்வெறி கொள்ளச் செய்கிறது. இதன் காரணமாகவே ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ இதுவரையிலான இந்திய சினிமா சாதனைகள் அனைத்தையும் முறியடித்திருக்கிறது. ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ பற்றிப் பேசும்போது இப்படம் வெளிவந்த அதே நேரத்தில் வெளியான சஞ்சய் லீலா பன்ஸாலியின் ‘ சாவரியா ’ பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். ‘ சாவரியா ’ வெளிவந்த வேகத்திலேயே திரும்பிவிட்டது. பன்ஸாலியின் தேவதாஸைப் போலவே இதுவும் ஒரு தோல்விப்படம். இவருடைய காதல் படங்கள் தோல்வியடைவதற்குக் காரணம் , இவர் இன்னமும் நவீனத்துவக் கால கட்டத்திலேயே இருக்கிறார் என்பதுதான். காதலின் தோல்வியைப் பகடி செய்யாமல் , அதை ஒரு சென்டிமெண்டல் விஷயமாக மாற்றிக் கண்ணீர் சிந்தும்போது பின் நவீனத்துவக் காலகட்டத்தில் வாழும் பார்வையாளர்கள் அதைப் புறக்கணித்து விடுகிறார்கள். ஒரே ஒரு உதாரணம் கூற வேண்டுமானால் - சஞ்சய் லீலா பன்ஸாலி இதே ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ - ஐ எடுத்திருந்தால் ‘ மா ஷாந்தி மா ’ ( அம்மா சாந்தி அம்மா) என்று எடுத்திருப்பார்! இதை நான் சொல்லவில்லை ; ஃபரா கான் தான் சஞ்சய் லீலா பன்ஸாலியை இப்படிக் கிண்டலடித்திருக்கிறார்.

பின் நவீனத்துவத்தில் யாரும் Classic என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் ‘ ஓம் ஷாந்தி ஓம் ’ ஒரு பின் நவீனத்துவ க்ளாஸிக் என்றே சொல்லலாம்.

பின்குறிப்பு: படத்தின் இறுதியில் ஓம் ஷாந்தி ஓமில் பங்கு பெற்ற அத்தனை பேரும் அறிமுகமாகிறார்கள். அறிமுகக்காட்சியில் ஒவ்வொருவரும் தத்தம் வாகனத்தில் வந்து இறங்குகின்றனர். அப்போது ஓம் ஷாந்தி ஓமின் வசனகர்த்தா என்று அறிமுகமாகும் மயூர் புரி ஒரு ஆட்டோவில் வந்து இறங்குகிறார். ‘ வணக்கம் ’ போடும்போது கூட ஒரு பின் நவீனத்துவ கிண்டல்!