“ நீ என்னை ஹீரோவாகப் பார்க்க விரும்பினால் ஏன் எனக்கு மக்கி என்று பெயர் வைத்தாய் ? மக்கி என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒருவன் ஹீரோவாக முடியுமா ?” என்று அம்மாவிடம் கோபப்படுகிறான் மக்கி. இந்தியில் மக்கி என்றால் ஈ என்று பொருள் “ ரண்டி கே டட்டி ப்பே பியாத்னே வாலா மக்கி ” என்று இந்தியில் பிரபலமான ஒரு வசைமொழி உண்டு. பொருள்:தேவடியாளின் பீயின் மேல் உட்காரும் ஈ.
மக்கியின் கனவுக் கன்னி அன்றைய இந்தி சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான ஷாந்தி (தீபிகா படுகோனே). சாலையில் வைக்கப்பட்டிருக்கும் ஷாந்தியின் மிகப் பெரிய பேனரின் முன்னே நின்று அவள் மீதான தன் காதல் வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கிறான் மக்கி.
ஷாந்தியைப் படப்பிடிப்பில் பார்ப்பதற்காகப் பல முறை முயன்று தோற்று , ஒரு நாள் “ நான்தான் மனோஜ் குமார் ” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்துவிடுகிறான் மக்கி. 70 களில் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற ஹீரோக்களில் ஒருவராக இருந்த மனோஜ் குமாரின் பிரத்தியேக ஸ்டைல் , கை விரல்களை முகத்தில் வைத்துக்கொள்வது. அதே பாணியில் மக்கி கை விரல்களால் முகத்தை மூடிக்கொண்டு உள்ளே போய்விடுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் அங்கே வரும் நிஜ மனோஜ் குமாரை காவலாளி உள்ளே விட மறுக்கிறான். மனோஜ் குமார் தானே நிஜம் என்று வலியுறுத்தவே , அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்கிறான் காவலாளி. தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் காட்டுகிறார் மனோஜ் குமார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாஸ் போர்ட்டின் புகைப்படத்திலும் மனோஜ் குமார் தனது முகத்தைக் கை விரல்களால் மறைத்துக் கொண்டிருக்கிறார்! யாரோ ஒருவன் தன்னை ஏமாற்றப் பார்க்கிறான் என்று நினைத்து காவலாளி மனோஜ் குமாரைத் தடியால் அடிக்கிறான்.
இதுபோல் ஓம் ஷாந்தி ஓமில் 70 களின் இந்தி சினிமாவைக் கிண்டல் செய்யும் நூற்றுக்கணக்கான காட்சிகள் உண்டு. இதையெல்லாம் ரசிக்க இந்தியும் , இந்தி சினிமா அறிவும் ஒருவருக்குத் தேவை.
இந்தியில் அச்சா , ஆவோ , ஜாவோ போன்ற வார்த்தைகள் கூடத் தெரியாத பாமரன் இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிக் கண்டபடி திட்டியிருக்கிறார். அட்சரம் கூடத் தெரியாத விஷயத்தில் ஒருவர் மூக்கை நுழைக்கலாமா ? பாமரன் மூக்கை மட்டும் நுழைக்கவில்லை ; விமர்சனம் வேறு செய்திருக்கிறார். பாமரனுக்கு ஏன் இந்த வீண் வேலை ? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் சுமத்ரா , ஜாவா , கடாரம் போன்ற நாடுகளுக்குச் சென்று புலிக்கொடியை நாட்டினார்களே , அதுபோல , இலங்கை முழுவதையும் தமிழர் ஆட்சியில் கொண்டு வருவது ; சிங்கப்பூர் , மலேஷியா , பர்மா , தாய்லாந்து , இந்தோனேஷியா , லாவோஸ் , கம்போடியா , வியட்நாம் வரையிலான கிழக்காசிய நாடுகளை ஒன்றாக இணைத்து அகண்ட தமிழ் நாடாக மாற்றுவது போன்ற எத்தனை விஷயங்களை அவர் குமுதத்தில் எழுதிக் கிழிக்கலாம் ? அதை விட்டுவிட்டு அவர் ஏன் இந்த இந்தி சினிமா போன்ற ஆகாத வேலையிலெல்லாம் இறங்குகிறார் ?
சரி , கதைக்கு வருவோம். ஒரு நாள் படப்பிடிப்பின் போது ஏற்படும் தீ விபத்தில் ஷாந்தியைக் காப்பாற்றுகிறான் மக்கி. அதிலிருந்து அவர்கள் இருவரும் நண்பர்களாகின்றனர். ஷாந்தியிடம் தான் ஒரு துணை நடிகன் என்று சொல்லாமல் , ஒரு தமிழ் சினிமா ஹீரோ என்று பொய் சொல்லுகிறான். அந்தப் பொய்யை ருசுப்படுத்துவதற்காக ஒரு நாள் தமிழ் ஹீரோவைப் போலவே வேஷம் கட்டிக்கொண்டு புலியுடன் சண்டை போடுகிறான். ஷாருக்கானுக்கு தொங்கு மீசை வைத்து , 50 அடியாட்களை துவைத்து நொறுக்கி , ( அட்டை)புலியை அடித்து வீழ்த்தி ரஜினி காந்த்தை மிக அருமையாகப் பகடி செய்திருக்கிறார் ஃபரா கான். தமிழ் சினிமாவைப் பகடி செய்ய ஒரு இந்தி இயக்குனர் வரவேண்டியிருப்பது எத்தனை பெரிய துரதிர்ஷ்டம்!
பின்னர் ஓம் ஒரு துணை நடிகன் என்று தெரிந்த பிறகும் ஓம்-ஷாந்தியின் நட்பு தொடர்கிறது. இந்நிலையில் ஒரு நாள் பிரபல தயாரிப்பாளர் முகேஷ் மிஷ்ராவும் , ஷாந்தியும் பேசிக் கொண்டிருப்பதை ஓம் கேட்க நேர்கிறது. அப்பேச்சிலிருந்து முகேஷ § ம் , ஷாந்தியும் காதலர்கள் என்பதும் , ஷாந்தி முகேஷ் மூலமாக கர்ப்பமாகியிருக்கிறாள் என்பதும் தெரிகிறது. தன்னை முகேஷ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறாள் ஷாந்தி. முகேஷ் அதை மறுக்கிறான். மற்றொரு கோடீஸ்வரரின் மகளை மணப்பதே முகேஷின் திட்டமாக இருக்கிறது.
ஒரு நாள் ஷாந்தியை தன்னுடைய படமான ஓம் ஷாந்தி ஓமின் பிரம்மாண்டமான செட்டுக்கு வரவழைத்து அதிலேயே அவளை வைத்து , முழு செட்டையும் எரித்துவிடுகிறான் முகேஷ். காப்பாற்றச் செல்லும் ஓமை முகேஷின் ஆட்கள் அடித்து விரட்ட , உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடும்போது மற்றொரு பிரபல நடிகரான ராஜேஷ் கபூரின் (பெயரைக் கவனியுங்கள்) காரில் அடிபட்டு மருத்துவமனையில் இறந்துவிடுகிறான் ஓம். அதே நேரத்தில் ராஜேஷ் கபூரின் மனைவிக்கு அதே மருத்துவமனையில் ஒரு ஆண் மகவு பிறக்கிறது. இடைவேளை. அதன்பிறகு வருவது ரகளையோ ரகளை. அதாவது , இன்றைய இந்தி சினிமா பற்றிய பகடி. பாலிவுட்டின் ஆடம்பர அட்டகாசங்கள் அத்தனையையும் ஒன்று விடாமல் பகடி செய்திருக்கிறார் ஃபரா கான்.
முப்பது ஆண்டுகள் சென்று , ஓம் திரும்பவும் முப்பது வயது இளைஞனாக வருகிறான் ; ராஜேஷ் கபூரின் மகன் ஓம் கபூராக. இப்போது ஓம் ஏழ்மையில் வாடும் துணை நடிகன் அல்ல ; ஒரு பிரபலமான நடிகரின் மகன் ; ஹீரோவின் மகன் ஹீரோ என்பதாக அவனும் இந்தி சினிமாவின் பிரபலமான ஹீரோ.
ஓமுக்குக் காலை ஏழு மணிக்கு ஷ ¨ ட்டிங். ஆனால் ஓம் சாவகாசமாக 11 மணிக்கு எழுந்து 12 மணிக்கு ஷ § ட்டிங் நடக்கும் இடத்துக்கு வருகிறான். செல்போனில் தன் தோழியிடம் பேசிக்கொண்டே இயக்குனர் சொல்லும் காட்சியையும் கேட்டுக் கொள்கிறான். அவன் தன் தோழியிடம் கேட்பதைத் தன்னிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு பதில் சொல்கிறார் இயக்குனர். இரண்டு பேரிடமும் மாற்றி மாற்றி ‘ ம் ’ கொட்டிக் கொண்டே தன் வலது கையை எப்போதும் தனது ஆணுறுப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கிறான் ஓம். (மைக்கேல் ஜாக்சனை ஞாபகப்படுத்திக்கொள்ளவும்). தான் மென்றுகொண்டிருந்த சூயிங் கம்மை வாயிலிருந்து எடுத்து இயக்குனரின் கோட்டில் ஒட்டிவிட்டு , “ கதை சரியில்லை ; மாற்றி எழுதுங்கள் ” என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறான். தனது அடுத்த படத்துக்கு பழைய ஓம் ஷாந்தி ஓமில் எரிந்து போன அதே செட்டையே பயன்படுத்திக்கொள்வதென்று முடிவு செய்கிறான் ஓம். அந்த செட்டைப் பார்த்ததும் அவனுக்கு முன் ஜென்மத்து ஞாபகங்கள் வருகின்றன. தன் ‘ பழைய ’ அம்மாவையும் நண்பன் பப்புவையும் சந்திக்கிறான். முன்பு ஷாந்தியின் பேனர் இருந்த அதே இடத்தில் இப்போது ஓமின் படம்.
இப்போது முகேஷ் ஒரு பிரபலமான ஹாலிவுட் தயாரிப்பாளன். அவனைப் பழிவாங்குவதற்காக , பழைய ஓம் ஷாந்தி ஓம் படத்தை முகேஷையே மீண்டும் தயாரிக்க வைக்கிறான் ஓம்.
கதாநாயகி ஷாந்திக்காக சந்தியா என்ற பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். (அதே ஷாந்தி -அதே தீபிகா படுகோனே). சந்தியாவுக்கு ஓமைப்போல் முன் ஜென்மத்து ஞாபகங்கள் எதுவும் இல்லை. அவள் ஒரு சாதாரண மத்திய தர வர்க்கத்துப் பெண். முகேஷிடம் பழைய கதையைச் சொல்லி மிரட்டி , சந்தியாவை ஷாந்தியின் பேய் என்று சொல்லி பயமுறுத்தி அந்த பயத்திலேயே அவனைச் சாகடிக்கப் பார்க்கிறான் ஓம். ஆனால் அது பேய் அல்ல , ஒரு பெண் என்பதைக் கண்டுபிடித்துவிடும் முகேஷ் , ஓமையும் சந்தியாவையும் வைத்துப் பழையபடியே அந்த மாளிகைக்குத் தீ வைத்துவிடுகிறான் முகேஷ். ஆனால் யாரும் எதிர் பாராதபடி முகேஷ் கொலை செய்யப்பட்டு ஓமும் சாந்தியும் காப்பாற்றப்பட்டுவிடுகிறார்கள். அதைச் செய்வது ஷாந்தியின் ஆவி!
‘ ஓம் ஷாந்தி ஓம் ’ இப்படி ஒரு மசாலாக் கதையைச் சொன்னாலும் - சொல்லும் விதத்தில் அந்த மசாலா சினிமாவை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. உதாரணமாக , ஓம் தாமதமாக வீட்டுக்கு வரும்போது அவன் அம்மா அவனை “ ஏன் தாமதமாக வந்தாய் ?” என்பதை 70 களின் சினிமாப் பாணியிலேயே கேட்கும்போது “ நீ ஒரு ஃபில்மி அம்மா ” என்று செல்லமாகக் கூறுகிறான் ஓம்.
மற்றொரு காட்சியில் , ஹீரோ ஓம் எதிரிகளைத் துப்பாக்கியால் சுடுகிறான். ஆனால் துப்பாக்கி அவனுடைய கையில் இருப்பதில்லை. அது இடுப்புக்குக் கீழே கட்டப்பட்டிருக்கிறது. இது எதன் குறியீடு , எவ்வகையான பகடி என்று சொல்லத் தேவையில்லை.