சமீபத்தில் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியைப் பலரும் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கலாம். அவர் ஒரு சினிமாத் தயாரிப்பாளர். ‘ நகைக் கடை ’ என்று நண்பர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு 40,50 பவுன் நகைகளை அணிந்து கொண்டு வலம் வந்தவர். இப்போது தங்குவதற்கு ஒரு வீடு இல் லாமல் நடைபாதையில் அனாதையாகப் படுத்துக் கிடக்கிறார். ஜீ.வி. என்று பலராலும் அறியப்பட்ட , இந்தியா முழுதும் பிரபலமான தயாரிப்பாளர் - மணிரத்னத்தின் மூத்த சகோதரர் - சில ஆண்டுகளுக்கு முன் கடன் தொல்லை தாங்காமல் தூக்கில் தொங்கியதும் நம் மனதை விட்டு மறையாத ஒரு செய்தி: இதுபோல் பல கதைகள் உண்டு. அறுபதுகளின் இந்தி சினிமா உலகில் கம்ரான் கான் என்று ஒரு மசாலாப் படத் தயாரிப்பாளர் இருந்தார். வெற்றிகரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவரின் வாழ்வில் 1973- இல் ஒரு புயல் வீசியது. அந்த ஆண்டில் அவர் தயாரித்த ‘ ஐஸா பி ஹோத்தா ஹே ’ ( இப்படிக் கூட நடக்கும்) என்ற படம் படுதோல்வி யடைந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய பங்களாக்களும் கார்களும் செல்வமும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை விட்டு மறைந்தன. குடிக்கு அடிமையானார் கம்ரான் கான். குடித்துக் குடித்தே 1987- ஆம் ஆண்டு இறந்து போனார்.
தமிழிலும் இந்தியிலும் இப்படி நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் இருக்க , கம்ரான் கானிடம் மட்டும் அப்படி என்ன விசேஷம் என்றால் , அவருக்கு ஃபராகான் என்ற , கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட ஒரு மகள் இருந்தாள் என்பதுதான். ஃபராவின் தந்தை மட்டுமல்லாமல் , அவளுடைய உறவுக்காரர்கள் பலரும் சினிமாக்காரர்களாக இருந்தனர். ஃபராவின் அம்மாவின் சகோதரிகளான ஹனி மற்றும் டெய்ஸி இரானி இருவரும் அந்நாளைய குழந்தை நட்சத்திரங்களாய் இருந்தவர்கள்.
ஃபராவுக்குச் சிறுமியாக இருக்கும்போதே நடனம் நன்கு வந்தது. உறவினர்களும் , சிநேகிதர்களும் ஃபராவை Prodigy என்று கூறி வியந்தனர். “ ஃபராவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே ‘ ரூப் தேரா மஸ் தானா ’ வுக்கு அவள் ஆடிப் பாடியதை சஞ்சீவ் குமார் போன்ற நடிகர்கள் ரசித்துப் பாராட்டினார்கள் ” என்கிறார் ஃபராவின் தயார் மேனகா.
1973- இல் குடும்பத்தில் நடந்த சூறாவளிக்குப் பிறகு மேனகா குடிக்கு அடிமையாகிவிட்ட கணவரைப் பிரிந்து தனது எட்டு வயது மகள் ஃபராவையும் , அவள் தம்பி ஸஜீத்தையும் அழைத்துக்கொண்டு ஒரு சிறிய வீட்டுக்குக் குடியேறினார். 200 சதுர அடியுள்ள அந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு ஓட்டல்களில் பாத்திரம் தேய்த்துத் தன் குழந்தைகளைப் படிக்க வைத்தார். அக்கால கட்டத்தைப் பற்றிப் பின்னாளில் ஃபரா இவ்வாறு கூறுகிறார்: “ ஒரு நாள் எங்கள் வீட்டு பார்ட்டியில் இந்தி சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டு நடனமாடினார்கள் ; அப்பாவின் சினிமா தோல்வியடைந்ததும் அடுத்த நாளே அத்தனை பேரும் காணாமல் போனார்கள். ”
இந்த மாற்றத்தை ஃபரா தாங்கிக்கொண்டாலும் , அவருடைய தம்பி ஸஜீத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னிடமிருந்து திடீரெனப் பறிக்கப்பட்ட அந்த ஆடம்பர உலகத்தை உடனடியாக மீட்டாக வேண்டுமென அவனுக்குத் தோன்றியது. அதற்கு அந்த இளம் வயதில் அவனுக்குத் தெரிந்த ஒரே வழி திருட்டு. ஸஜீத் நல்ல பணக்காரப் பள்ளியில் படித்தபடியே திருடிக்கொண்டிருந்தபோது , ஃபரா ஒரு சாதாரணப் பள்ளியில் படித்துக்கொண்டு மிதுன் சக்ரவர்த்தியின் மகனுக்கு மைக்கேல் ஜாக்ஸனின் நடன அசைவுகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஃபராகான் வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண்ணே வாங்கிக்கொண்டிருந்ததாகவும் , அதற்குக் காரணம் முதல் மதிப்பெண் எடுத்தால்தான் சினிமாவுக்குப் போக அம்மாவின் அனுமதி கிடைக்கும் என்றும் கூறுகிறார் ஃபரா.
இக்கால கட்டத்தைப் பற்றி நினைவுகூரும் ஸஜீத் “ ஜெயிலுக்குப் போகாமல் தப்பியது என் அதிர்ஷ்டம்தான் ” என்கிறார். ஜெயிலுக்கு பதிலாக அவர் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். (இப்போது ஸஜீத் தொலைக்காட்சியில் பிரபலமான சிரிப்பு நடிகராகப் பெயர் பெற்று விளங்குகிறார்.) வாழ்க்கை இப்படியே சென்று கொண்டிருந்த போது 1992- இல் ஃபரா கானுக்கு ‘ ஜோ ஜீத்தா வொஹி சிக்கந்தர் ’ என்ற படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அப்படத்தின் நடன இயக்குனராக இருந்த சரோஜ் கான் திடீரென்று அதிலிருந்து விலகி விடவே அந்த வாய்ப்பும் ஃபரா கானுக்குக் கிடைத்தது. அது ஒரு மசாலாப் படம்தான் என்றாலும் , அதில் இடம்பெற்ற ‘ பெஹ்லா நஷா ’ என்ற இனிமையான பாடலையும் , அதற்கான நடனத்தையும் இந்தி சினிமா ரசிகர்கள் இன்றளவும் மறந்திருக்க முடியாது. நடனத்தில் முறையான பயிற்சி இல்லாதிருந்த போதும் 1942 A Love Story , தில் ஸே , குச் குச் ஹோத்தா ஹை , தில் வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே , மான்ஸ § ன் வெட்டிங் போன்ற படங்களுக்கு ஃபரா கான் அமைத்திருந்த நடனம் ( Choreography ) உலகம் முழுவதும் பிரபலமாகி சிலாகிக்கப்பட்டது. இதுவரை ஃபரா கான் 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். சினிமாவில் இடம்பெறும் நடனத்தை ஒரு கலை அனுபவமாக மாற்றியவர் ஃபரா கான். தமிழ் சினிமாவில் சந்திரபாபுவைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஜென்டில் மேனில் ‘ சிக்கு புக்கு ரயிலு ’ என்ற பாடலிலும் , பின்னர் காதலன் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ஆடிய போதும் (காதலிக்கும் பெண்கள் கைகள் தொட்டு நீட்டினால்) வெகுவாக எதிர்பார்க்க வைத்த பிரபு தேவாகூட அதற்குப் பிறகு தமிழ் சினிமாவின் ‘ ஒளிவட்ட ’ த்தில் காணாமல் போய்விட்டார். தமிழ் சினிமாவில் நடனம் என்பது ஒரு ஆபாச வெளிப்பாடாகவே இருந்து வருகிறது (சந்தேகமிருப்பவர்கள் பார்க்கவும்: அழகிய தமிழ் மகன்).
ஃபரா கானைப் பற்றி எதுவும் தெரியாமலேயே மேற்கண்ட படங்களை அவற்றின் நடனத்திற்காகவே திரும்பத் திரும்பச் சென்று பார்த்தது எனக்கு ஞாபகம் வருகிறது. 1942, எ லவ் ஸ்டோரியை மட்டும் அதன் கொரியாக்ராஃபிக்காக ஒரு டஜன் தடவைகள் பார்த்திருக்கிறேன்.
இவ்வளவுக்குப் பிறகும் 2001 வரை ஃபரா கான் தன் தாயார் மற்றும் தம்பி ஸஜீத்துடன் 500 சதுர அடியுள்ள ஒரு சிறிய வீட்டில்தான் குடியிருந்தார். ஏழ்மை என்பதன் அர்த்தம் தெரிந்தவராதலால் சினிமா நடனக்காரர்களுக்கு அது வரை அளிக்கப்பட்டு வந்த தினக் கூலியான ரூ. 250/- ஐ ரூ. 1000/- ஆக மாற்றினார். “ அது இப்போது இன்னும் உயர்ந்து ஐந்தாயிரம் , பத்தாயிரம் என்று ஆகிவிட்டது ” என்கிறார் ஃபராகான்.
இந்த நிலையில் 2002 இல் ஃபராகான் தனது நெருங்கிய நண்பரான ஷாருக்கானிடம் ஒரு கதையைக் கூறி , அதைத்தானே இயக்க விரும்புவதாகக் கூறுகிறார். கதையைக் கேட்ட ஷாருக் , கதையைத் தானே தயாரித்து நடிப்பதாகக் கூற , ‘ மே(ங்) ஹ § நா (ங்) ’ என்ற அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெறுகிறது.
‘ மே(ங்) ஹ § நா(ங்) ’ வின் படத் தயாரிப்பின் போது ஃபரா கானுக்கும் , அதன் படத்தொகுப்பாளரான ஷிரிஷ § க்கும் காதல் ஏற்பட்டு 2004 இல் இருவரும் மணம் முடித்துக்கொள்கிறார்கள். அப்போது ஃபராவின் வயது 39. ஷிரிஷின் வயது 31.
இதன் பிறகு ஃபரா கானின் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம்தான் ‘ ஓம் ஷாந்தி ஓம். ’
கதை 1977 இல் துவங்குகிறது. மும்பை சினிமாவின் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களில் ஒருவன் ஓம் பிரகாஷ் மக்கி (ஷாருக்கான்). தந்தையை இழந்தவன். ஓமின் தாய் , துணை நடிகையாய் வாழ்ந்து ஓய்வு பெற்றவள். அவளுக்கு ஓமை ஒரு ஹீரோவாகப் பார்த்துவிட வேண்டுமென்று ஆசை. ஓமின் நண்பன் பப்பு. அவனும் ஓம் பிரகாஷ் மக்கியைப் போலவே ஒரு துணை நடிகன்.