வேலி முட்டியும் வாரிசுகளும்
 

( சும்மா எதுகை மோனைக்காக இப்படித் தலைப்பு கொடுத்திருக்கிறேன். மற்றபடி சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்).

வா.மு. கோமு , மனோஜ் இருவரையும் எனது எழுத்துலக வாரிசுகளாக முன்பே அறிவித்திருந்தேன். வா.மு. கோமு இளைஞர் என்றாலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். எங்கோ ஈரோட்டுக்குப் பக்கத்தில் வாய்ப்பாடி என்ற சிறு கிராமத்தில் வாழ்பவர் என்பதால் கணினி அறிமுகமெல்லாம் இல்லை. ஆனால் இன்றைய தமிழில் என்னை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் என்றால் வா.மு. கோமுதான். அவருடைய பல சிறுகதைத் தொகுப்புகள் , கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு சிறுகதைத் தொகுப்பும் , ஒரு நாவலும் உயிர்மை வெளியீடாகவும் வந்துள்ளது. ஏராளமாக எழுதுபவர். தமிழில் அடியேனுக்கு அடுத்த படியாக தணிக்கை செய்யாமல் எழுதும் ஒரே எழுத்தாளர் வா.மு. கோமு மட்டும் தான் என்பது என் கருத்து. (உடனே , ' குட்டிக் கதைகளில் தணிக்கை செய்யப் பட்டது என்று போட்டிருக்கிறாயே ? என்று கேட்கக் கூடாது. இந்த இணைய தளத்தை குழந்தைகளும் படிக்கிறார்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டி வந்தது. குட்டிக் கதைகள் புத்தகமாக வரும் போது எந்தத் தணிக்கையும் இருக்காது). ஆனால் வா.மு. கோமுவின் ' கள்ளி ' என்ற நாவல் எனக்குப் பிடிக்கவில்லை.

( நாவல் என்ற வடிவம் அவ்வளவு சுலபமானது அல்ல ; சிறுகதைகளில் சாதனை படைத்திருப்பவர்கள் கூட நாவலில் தோற்று விடுகிறார்கள். உடனடியாக நினைவுக்கு வருவது ஷோபா சக்தி. அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் தமிழின் பொக்கிஷம் ; ஆனால் நாவல் இரண்டுமே தேறாது).

அடுத்து , மனோஜ். எப்போதாவதுதான் எழுதுவார். நாவல் எழுதவில்லை. சிறுகதைகளும் கட்டுரைகளும்தான். இவருடைய சிறுகதைகளை தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் பாடமாகப் பயில வேண்டும் என்று சொல்லுவேன். வா.மு. கோமு , ஷோபா சக்தி , மனோஜ் என்ற இந்த மூவரின் சிறுகதைகளும் உலகத்தரமானவை. ஆனால் இப்போது பல்வேறு வலைப்பதிவுகளையும் பார்க்க்கும் போது எனக்கு வா.மு. கோமு , மனோஜ் தவிரவும் ஏராளமான வாரிசுகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து பூரித்துப் போனேன். அப்படி சமீபத்தில் பூரித்தது கென்னின் எழுத்துக்களைப் படித்து.

தீராத வாழ்தலின் ருசி

தனித்திருப்பவனோடு

சேர்த்து வைக்கிறது

சில நினைவுகளை

சில முத்தங்களை

 

தாய்மையின் முலைக்காம்புகளில் பூசப்படும்

வேம்பின் கசப்பு தெரிவதில்லை

பால்குடி மறக்கவியலா மழலைக்கு

எதை மேற்கோள் காட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு நல்ல கவிதைகள். ' தொலைத்த சாவியும் குந்தர் க்ராஸும் ' என்று ஒரு அருமையான கவிதை.

அதற்கடுத்த கவிதையை என்னால் முழுசாக மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை. அந்தக் கவிதை இதோ:

பெண்ணின் உடல் வேண்டும்

வெறி பிடித்த குருட்டு வேட்டைநாயின்

வேட்கையாய் இருக்கிறது

தேகத்தின் தகிப்பில் கிடைத்த

முத்தங்கள் அணைப்புகள் போதுமானதாயில்லை

இரவின் தீராத கண்களில்

ஊறும் காமம் யோசிக்கும் பெண்களையெல்லாம்

புணர்ந்து வெட்கிக் கூச்சமடைகிறது

 

புரட்டும் பக்கங்களில் நெளியும்

வார்த்தைகள் பாம்பின் விஷமென

பரவி மரணிக்கிறது

வெறும் உடல் வேண்டும் பெண்ணின்

உடல் வேண்டும்

எப்படி ஆரம்பிக்கலாம்

காதலிப்பதாய் சொன்னால் ஒப்புக்கொள்வார்களா

முத்தங்களுக்கும் முலைகளுக்கும்

கவிதைகள் மட்டுமன்றி சிறுகதைகளும் எழுதுகிறார் அண்ணன். ' பிணத்தின் தீயில் பீடிக்கு நெருப்பெடுத்தவன் ' என்று ஒரு கதை. தமிழின் முக்கியமான கதைகளில் இதைத் தயக்கமின்றிச் சேர்க்கலாம்.

' நித்யாவும் நானும் ' - இந்தக் கதையைப் படித்து ' நாமெல்லாம் என்ன குட்டிக் கதை எழுதுகிறோம் , சே ' என்று ஒருக்கணம் மலைப்பாக இருந்தது. பிறகு , எதுவுமே செய்ய முடியாமல் நீண்ட நேரம் சும்மாவே அமர்ந்திருந்தேன். அந்த அளவுக்கு என் மனதை அள்ளிக் கொண்டு சென்ற கதை இது.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் , ' வேலி முட்டி , குரங்கு சூப் , பாக்கெட்டு , பட்டர்ஃப்ளை ' என்ற கதையைப் படிக்கும் வரை இவர் எங்கள் ஊர்க்காரர் என்று எனக்குத் தெரியாது. எங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்தெல்லாம் யாருமே உருப்படியாகத் தேறி வர மாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தேன். இந்த நண்பர் அந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டார். "கலை இலக்கியத் துறையில் யாரைப் பார்த்தாலும் மதுரை , திருநெல்வேலி என்றுதான் சொல்கிறார்களே தவிர நாகூர் , நாகப்பட்டினம் , காரைக்கால் என்று ஒரு ஆளைக்கூட காணோமே ?" என்று வசந்த பாலன் , அமீர் போன்ற நண்பர்களிடம் கூட ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருப்பேன். ஏனென்றால் , அவர்கள் மதுரைப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

' ஏன் , நாகூர் அனீஃபா இருக்கிறாரே ?" என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறார். ஆனால் எந்த வித அங்கீகாரமும் இல்லாமல் ஏதோ ஒரு தெருப் பாடகன் என்ற அளவில்தானே இருக்கிறார் ? அவரைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது. நாகூர் அனீஃபாவுக்கு இணையாக வேறு யாரையுமே சொல்ல முடியாது. அவர் ஒரு unique ஆன பாடகர். அவருக்கு முன்னும் பின்னும் அவரைப் போன்று பாடக் கூடிய ஒரு கலைஞன் இல்லை. அவரைப் பற்றி நான் தனியாகவே எழுத இருப்பதால் இப்போது வேண்டாம்.

எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ' நாஸ்டால்ஜிக் ' உணர்வு வந்து குந்திக் கொள்கிறது. வேலி முட்டி பற்றி என்னுடைய ' எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் ' நாவலில் எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போதுதான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கிறேன். வேலி முட்டி என்பது எங்கள் ஊர்ப்பக்கத்தில் கிடைக்கும் ஒருவித சாராயம். அது ஒரு காரணப் பெயரும் கூட. அதைக் குடிப்பவர்கள் வேலிப் பக்கத்தில் போய் முட்டிக் கொண்டு கிடப்பார்கள். இப்போதும் வேலி முட்டி கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

இதை முடிக்கும் முன் கென்னின் அத்தனை எழுத்தையும் படித்து விட்டேன். இப்போது எவ்விதத் தயக்கமும் இன்றி கென்- ஐ என்னுடைய மூன்றாவது வாரிசாக அறிவிக்கிறேன்.

அவருடைய வலைப்பக்க முகவரி: http://www.thiruvilaiyattam.com/

***

28.6.2008.

2.10 p.m.