அழகர்சாமி என்று ஒரு மனிதர். எல்லா ஆண்களையும் போலவே , அல்லது பெரும்பாலான ஆண்களைப் போல் அவருக்கும் ஸ்த்ரீகளின் மீது மோகம் அதிகம். இதுவே ஒரு பணக்காரராக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் அவர் ஒரு விளிம்பு நிலை மனிதர். அவருடைய தொடுப்பாக இருந்த பெண் அழகர்சாமியின் வீட்டுக்கு வந்து மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து இறந்து விடுகிறாள். இறக்கும் தறுவாயில் அவள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அழகர்சாமி இப்போது ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறார். அழகர்சாமியின் மனைவி லக்ஷ்மியும் அவரது மகன் சரவணக்குமாரும் தங்கள் வாழ்க்கைக்காகப் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்தச் சம்பவம் நம்முடைய நீதிமுறையில் இருக்கும் போதாமைகளையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுகிறது. அந்தப் பெண் இறந்து போனதால் யாருக்கு தண்டனை ? தற்கொலை செய்து கொள்வதே குற்றம். அப்படியானால் அழகர்சாமி வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணே ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளி சொன்ன வார்த்தைகளை வைத்து ஒரு மனிதருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கலாமா ?
தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காகவே ஒருவர் அந்த நபரின் வீட்டுக்கு வந்து தீக்குளித்துச் சாகலாமே ?
இம்மாதிரி கேள்விகள் ஒரு பக்கம் இருக்க , அழகர்சாமியின் மகன் சரவணக்குமார் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக எழுதுகிறார். இந்தத் தகவலை பின்வரும் வலைப்பதிவில் அறிந்து கொண்டேன்.
http://nagulan.wordpress.com/author/pandiiidurai/
***
28.6.2008.
9.45 a.m.