போலிப் புலம்பல் - 2

 

பெயர் என்ன சொன்னேன் ? ஆங்...ரம்யா.

" புதன் கிழமை சந்திக்கலாமா ?" என்று கேட்டாள் ரம்யா. அலெக்ஸ ¤ ம் நானும் ரம்யாவும் பார்க் ஓட்டலில் மதியம் பனிரண்டு மணிக்குச் சந்திக்கலாம் என்று ஏற்பாடு.

விஷால் நானும் வருகிறேனே என்றான். விஷாலும் வரலாமா ? என்று ரம்யாவிடம் கேட்டேன். சம்மதம் கிடைத்தது. ஒன்பது மணியளவில் எனக்கு போன் செய்த அலெக்ஸ் மதியம் ஒரு வேலை இருப்பதாகவும் , மாலையோ அல்லது நாளையோ சந்திக்கலாமா என்றும் கேட்டான். அன்றைய தினம் என்னுடைய மகள் ஜனனி என் வீட்டுக்கு வருவதாக இருந்தது. அவளை நான் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க இருந்தேன். இடையில் ஒரு திருமண வைபவத்தில் பார்த்தது ஓரிரு நிமிடங்களே. அவளிடம் கூட "இன்று எனக்கு வேலை இருக்கிறது ; நாளை பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தேன். மேலும் , ஒரு சந்திப்புக்கு ஒருவர் வர முடியவில்லையெனில் அதற்காக அந்தச் சந்திப்பையே ஒத்திப் போடுவதெல்லாம் என் வாழ்வில் எனக்குப் பழக்கமே இல்லாதது. யாரால் சந்திப்புக்கு வர முடியவில்லையோ அவர் அந்த நபரை வேறோர் முறை சந்தித்துக் கொள்ள வேண்டியது என்பதுதான் இதில் உள்ள எழுதப் படாத விதி. அப்படித்தான் நிக்கியை கடந்த 15 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன் , வாரம் ஒரு முறை. எந்தச் சந்திப்பின் போதும் இப்படிப் பட்ட குழப்பங்கள் நேர்ந்ததில்லை.

திங்கள் கிழமை மதியம் பார்க் ஷெரட்டன் டீக்கடையில் ஆஜராகி விடுவேன். பனிரண்டரை மணியிலிருந்து ஒரு மணிக்குள். சரியாக ஒரு மணிக்கு நிக்கி வந்து சேர்ந்து விடுவான். இரண்டு மணிக்கு அலெக்ஸ் வருவான். அதற்குள் நாங்கள் மூன்று சுற்று முடித்திருப்போம். ' யாருக்காகவும் எதற்காகவும் நிக்கியின் கோப்பை காத்திருக்காது ' என்று அவ்வப்போது ஆங்கிலத்தில் சொல்வது நிக்கியின் வழக்கம்.

இதே சட்டம்தானே ரம்யாவின் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் ? பெண் என்பதால் தனிச் சட்டமா என்ன ? பிறகு மாலை நான்கு மணிக்குச் சந்திக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது. ரம்யா அன்றைய தினம் மதியத்தை ஒதுக்கி வைத்திருந்ததால் அதற்கு அடுத்து அவளுக்குக் கிடைத்த நேரம் மாலை நான்கு மணியாகவே இருந்தது. நான் வியாழன் சந்திக்கலாமே என்று கேட்டுப் பார்த்தேன். வியாழன் சந்திக்கலாம் என்று ஒத்துக் கொண்டால் அன்றைய தினம் போன் செய்து ' எனக்கு ஒரு அவசர வேலை வந்து விட்டது ; நீங்கள் சந்தியுங்கள் ; நாம் அடுத்த முறை நீ சென்னை வரும்போது சந்தித்துக் கொள்ளலாம் ' என்று சொல்லி விடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஏனென்றால் மறுநாளும் நான் ஜனனியை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் இல்லாமல் மாலை நான்கு மணிக்கு சந்திப்புக்கு நேரம் குறித்தாயிற்று.

ஏற்கனவே நான் மதியத்திற்கு சமைக்க வேண்டாம் என்று அவந்திகாவிடம் சொல்லிவிட்ட படியால் மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஏற்பட்டது. என்னுடைய வேலைப்பளுவுக்கு இடையே நான் சமைப்பது என்பது சாத்தியமில்லை. வெளியில் சாப்பிட்டு விடலாம் என்று பணத்தைத் தேடினேன். 150 ரூ. தான் கிடைத்தது. அந்த வேகாத வெயிலில் வங்கிக்குச் சென்றேன். ஆறு ரூபாய் இருந்தது. ' அட பிச்சைக்கார நாயே ' என்று திட்டி விட்டு (என்னைத்தான்) என்ன செய்யலாம் என்று வங்கியின் வாசலிலேயே நின்று யோசித்தேன். ஷெரட்டனுக்குச் செல்லலாம் என்றால் அங்கே பாலுவோ பானுவோ இருக்கலாம். இப்போது அவர்களைச் சந்திக்க நேரம் இல்லை.

அடுத்து என் ஞாபகத்துக்கு வந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ' ஒரு சோறு ' என்ற உணவு விடுதி. அந்தக் காலத்து இந்தி நடிகை வஹீதா ரஹ்மானின் உணவு விடுதி அது. சென்னையிலேயே மிகச் சிறந்த பிரியாணி கிடைக்கும் இடம் அது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே போகலாமா என்று யோசித்தேன். ம்ஹூம்...முடியாது. அங்கே பிரியாணி விலை 300 ரூ.

அதற்கு அடுத்தபடியாக மத்திய தர விலையில் அருமையான அசைவ உணவு கிடைக்கும் இடம் ராயப்பேட்டையில் உள்ள சஃபாரி விடுதி. அங்கே சென்று வர ஆட்டோவுக்கும் சேர்த்து இந்த 150 ரூ. போதாது. கமல்ஹாசனுக்குப் பிடித்த samco வுக்குப் போகலாம். ஆழ்வார்ப்பேட்டை. அதற்கும் கூட இந்தப் பணம் இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று இருக்கும். கடைசியில் லஸ் முனையில் உள்ள ஒரு பாடாவதி ஓட்டலுக்குச் சென்றேன். ஒரு சிக்கன் பிரியாணியும் , ஒரு துண்டு மீனும். அப்படியே எண்ணெய் கொட்டியது. பயந்து கொண்டே சாப்பிட்டு வைத்தேன். இதற்குத்தான் இந்த மாதிரி டப்பா ஓட்டல்களில் சாப்பிடுவதில்லை என்று மீண்டும் ஒருமுறை நினைத்துக் கொண்டேன். அலெக்ஸின் நினைவு வந்தது. ம்ஹூம். தப்பு என்னுடையது. எப்போதுமே மூன்று பேராகச் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கினால் இப்படித்தான் முடியும். ஆனால் கதை இன்னும் முடியவில்லை.

பில் வந்ததும் தூக்கிவாரிப் போட்டது. 130 ரூ. அந்தக் கொடுமையான பிரியாணி 80 ரூ. மீன் 50 ரூ. அவசர அவசரமாக பாக்கெட்டைத் துழாவினேன். ஏனென்றால் , வீட்டிலிருந்து வருவதற்கு ஆட்டோவுக்கு 20 ரூபாயைக் கொடுத்திருந்தேன். அப்பாடா , பாக்கெட்டில் சரியாக 130 ரூ. இருந்தது. குறைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருந்தது. என் உடம்பில் ஆபரணம் ஏதும் இல்லை. விரலில் பைசா பெறாத ஒரு வெள்ளி மோதிரம் இருந்தது. கைத்தொலைபேசியும் வீட்டில் இருந்தது. கையில் இருந்தாலும் அதைக் கொடுக்க முடியாது. அது ஒரு டப்பா போன். நான் வைத்திருந்த மொபைல் பழுதாகி கடையில் இருந்தது. 130 ரூபாயைக் கொடுத்து விட்டு லஸ் முனையிலிருந்து வீடு வரை நடந்தே வந்தேன். அந்த வெய்யிலில் அந்த ஒரு கிலோ மீட்டர் தூரம் 10 கிலோ மீட்டராகத் தெரிந்தது.

வீட்டுக்கு வந்து ரம்யாவை போனில் அழைத்து "உன்னிடம் ராஸ லீலா மட்டும்தானே இருக்கிறது ; மற்ற என்னுடைய புத்தகங்களை எடுத்து வருகிறேன்" என்றேன்.

" உனக்கு எதற்கு சிரமம் ? நான் உயிர்மையில் வாங்கிக் கொள்கிறேனே ?"

" இதில் என்ன சிரமம் ? நீ ஊருக்குக் கிளம்புகிற அவசரத்தில் உன்னால் வாங்க முடியாமல் கூடப் போய் விடலாம்..."

"அதெல்லாம் வாங்கி விடலாம். நீ ஏன் அனாவசியமாக எனக்கு ஃப்ரீயாகக் கொடுக்க வேண்டும்? நான் உயிர்மையில் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறேனே?"

" ஓ அப்படியா ? அப்படியானால் நிச்சயம் எடுத்து வருகிறேன். உன்னிடமிருந்து புத்தகங்களுக்கான பணத்தை பெற்றுக் கொள்கிறேன்."

இது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டும்.

நான் ஒரு பிச்சைக்காரன்தான். ஆனால் அதற்காக என்னுடன் நெருங்கிப் பழகும் நண்பர் ஒருவர் என்னைப் பிச்சைக்காரன் என்றே 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

நிக்கியும் வெங்கியும் என்னைத் தமக்குச் சமமாக நினைத்துப் பழகுவதை நான் பார்த்திருக்கிறேன். நிக்கி மிகவும் சுவாதீனமாக என் போனை எடுத்து ஒரு மணி நேரத்துக்கு யாருடனோ பேசிக் கொண்டிருப்பான். நான் ஒரு பிச்சைக்காரன் என்றே அவனுக்குத் தோன்றாது. மறுநாள் என் போனில் பைசா இல்லாதிருந்தால் அவனிடமே கேட்டு வாங்கிக் கொள்வேன். ஆனால் என் போனை எடுத்துப் பேசும் போது அவனுக்கு எதுவும் வித்தியாசமாகத் தோன்றாது என்பதுதான் முக்கியம்.

ரம்யா நினைக்கலாம். என்ன இது , நான் நல்லதாக நினைப்பதெல்லாம் இவனுக்குத் தப்பிதமாகத் தோன்றுகிறது என்று. ஒரு நண்பனின் பலஹீனத்தையும் ஏழ்மையையும் பற்றி நினைப்பது மனிதாபிமானம் அல்ல ; ஃபாஸிஸம். சந்தேகம் இருந்தால் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தைப் பாருங்கள் , புரியும்.

என்னுடைய ஏழ்மை என்பது எனக்கு ஒரு உடல் ஊனம் மாதிரி. காலையில் ஏழு மணிக்கு எனக்கு அலெக்ஸிடமிருந்து போன் வந்தால் அவன் பெஸன்ட் நகரில் உள்ள எட்வர்ட் எல்லியட்ஸ் பீச்சில் இருக்கிறான் என்று அர்த்தம். அப்போது அவன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கும். எனக்கு அங்கே போக வேண்டுமானால் ஆட்டோவுக்கு அறுபதும் அறுபதும் 120 ரூ. வேண்டும். இதுவரை ஒருநாள் கூட அங்கே அந்தக் காலை நேரத்தில் நான் சென்றதில்லை.

ஆக , என்னுடைய இந்த ஏழ்மையை நீங்கள் 24 மணி நேரமும் ஞாபகம் வைத்திருந்து என்னை அந்தப்படியே நடத்திக் கொண்டிருப்பது என்பது கொடூரமான ஒரு வன்முறை. நான் சொல்வது புரியவில்லை என்றால் அடுத்து வரப்போகும் இரண்டு குட்டிக் கதைகளை வாசியுங்கள். நிச்சயமாகப் புரியும்.

மேலும் , அல்ப விஷயங்களுக்காக ' நான் பணம் கொடுத்து விடுகிறேன் ' என்று சொல்கிறார்கள் பலரும். என்னுடைய புத்தகத்தின் விலை 100 ரூ. இந்த நூறு ரூபாயை வைத்துக் கொண்டு இந்தியாவில் ஒரு லஞ்ச் கூட சாப்பிட முடியவில்லை. நூறு ரூபாயில் பல் குச்சியோ , ear buds ஓ தான் வாங்கலாம். இப்படி மனிதாபமானத்துடன் நடந்து கொள்வதே மற்றவரை அவமானப் படுத்தும் செயல் என்பது பலருக்கும் புரிவதில்லை. ரம்யாவிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட அவ்வளவு புத்தகங்களுக்கும் விலை என்ன ? அதை விடுங்கள்...என்னுடைய எழுத்தை , என்னுடைய பல மணி நேர உழைப்பை ரம்யா படிக்கிறாளே , அதற்கு விலை என்ன ? இது எல்லாமே ரம்யா பயன்படுத்திய அந்த வார்த்தையின் படி 'ஃப்ரீ' தானே ?

***

இன்னொரு கொடுமை , ' நானே வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் ' என்று அலெக்ஸ் சொன்னது. அலெக்ஸுக்கும் காலத்துக்கும் உள்ள உறவை நினைத்தாலே எனக்கு ஜூரம் வந்து விடும். நானோ நேரம் தவறாமை என்பதை ஒரு மத வெறியனைப் போல் கடைப்பிடித்து வருபவன். அலெக்ஸைப் பற்றி நன்கு தெரிந்தும் அவன் சொன்னதும் சரி என்று சொல்லிவிட்டேன். மூன்றே முக்கால் ஆகியும் ஆளைக் காணோம். எனக்கு ஜன்னியே வந்து விடும் போல் ஆகியது. கிளம்பி ஆட்டோவில் போய் விடலாமா என்று தோன்றியது. அவனுக்கு போட்டு அதைச் சொன்னேன். "இல்லை , இல்லை ; இதோ கிளம்பி விட்டேன். நீ அங்கேயே இரு..." என்று அவனிடமிருந்து பதற்றமாக பதில் வந்தது. ஏன் இவ்வளவு பதற்றம் என்று புரியவில்லை. ஆனால் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. மீண்டும் மீண்டும் நிக்கியின் ஞாபகம் வந்தது. நிக்கியைச் சந்திக்கச் சென்ற போது இந்தப் பதினைந்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட இப்படி ஆனதில்லையே என்று திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்தது.

ரம்யாவுக்கு போன் செய்து "நாங்கள் வர ரொம்பவும் தாமதமாகும்" என்றேன்.

அலெக்ஸ் என் வீட்டுக்கு நான்கு மணிக்கு வந்தான். நாங்கள் பார்க்கை அடைந்த போது நாலரை. "இதுதான் இந்திய பங்க்சுவாலிட்டியா , நீ போன் செய்த போதே நான் இங்கே வந்து விட்டேன். லௌஞ்சில் தனியாக அமர்ந்திருக்க என்னவோ போல் இருந்தது" என்றாள் ரம்யா.

அக்வா விடுதிக்குச் சென்றோம். இரவு எட்டு மணிக்கு மேல் சொர்க்க லோகம் போல் தென்படும் அந்த விடுதி நாங்கள் சென்ற நேரத்தில் ஒரு சாதாரண சாப்பாட்டுக் கடையைப் போல் தோற்றமளித்தது. எங்கள் நான்கு பேரைத் தவிர அந்த இடத்தில் ஈ காக்கை கிடையாது. இரவில் அங்கே live band இருக்கும். வித விதமான பாடகர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். நடுவே நீச்சல் குளம். குளத்தைச் சுற்றி குறைந்த உயரமுள்ள கட்டில்களும் திண்டுகளும் போட்டிருக்கும். அங்கே படுத்துக் கொண்டும் , புரண்டு கொண்டும் குடித்துக் கொண்டிருக்கலாம். ஏராளமாய் சங்கீதம் , மிகச் சிறந்த மொகலாய உணவு என்று அதகளப் படும் அந்த இடம் அப்போது பாலைவனத்தைப் போல் இருந்தது. அந்த இடத்தில் நாங்கள் சென்ற நேரத்தில் வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

விடுங்கள். தப்பு பூராவும் என்னுடையது. நீங்கள் சிறு பத்திரிகைக்காரனுடன் சேர்ந்து டாஸ்மாக் போகலாம் ; மற்றொரு சிறு பத்திரிகை நடத்தலாம் ; ஏன் , தாசி வீட்டுக்குக் கூடப் போகலாம். ஆனால் எந்தக் காலத்திலும் மேல் தட்டுக் கலாச்சாரப் பிராந்தியத்துக்குள் அவர்களோடு சேர்ந்து நுழைந்து விடவே கூடாது. சொர்க்கத்தையே நரகமாக்கி விடுவார்கள் என்று அந்த அக்வா உணவு விடுதியின் பரிதாபகரமான தோற்றத்தைப் பார்த்த போது எனக்குப் புரிந்தது.

***

பின் குறிப்பு:

1. இதை நான் குட்டிக் கதைகளோடுதான் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் சுய இரக்கம் தோன்றும் கதைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பதால் இதை அதில் சேர்க்கவில்லை.

2. நீங்கள் தாஜ் மஹாலை ஆயிரம் புகைப்படங்களில் பார்த்தாலும் அதை நேரில் பார்க்கும் அழகுக்கு ஈடு செய்யவே முடியாது. ஏழு அதிசயமெல்லாம் ஒன்றுமில்லை ; தாஜ் மஹாலின் அற்புதத்திற்கு எதுவுமே கிட்டத்தில் நெருங்க முடியாது. அதே போல் , ராஸ லீலாவில் வரும் அஞ்சல் பொருள் கிடங்கு என்ற இடத்தின் இருள்மையை நான் எத்தனை வார்த்தை கொண்டு எழுதினாலும் அதை நீங்கள் நேரில் பார்ப்பது போல் ஆகாது. அந்த இடத்தை அவசியம் பார்த்து விட வேண்டும் என்று வரிந்து வரிந்து எழுதிய ரம்யா இன்னும் இந்த நிமிஷம் வரை அது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை ; பேசவும் மாட்டாள்...

3. இதற்கெல்லாம் ரம்யாவிடம் பதில் இருக்காது என்றா நினைக்கிறீர்கள் ? நிச்சயமாக இருக்கும். என்றாவது ஒரு வலைப் பக்கம் துவங்கி என்னை எப்படிக் கிழிக்கப் போகிறாள் .

பாருங்கள்...

***

26.6.2008.

11.35 p.m.