போலிப் புலம்பல் - 1

 

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒருவேளை போலியாக இருப்பதால் இருக்கலாம். பல அன்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். ' நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறீர்கள் , சாப்பிடுகிறீர்கள் ; ஆனால் கையில் காசு இல்லை என்கிறீர்கள் ; முரண்பாடாக இருக்கிறதே ?' இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பல முறை எழுதி விட்டேன். இப்போது மீண்டும் எழுதுகிறேன். என் நண்பர்கள் செல்வந்தர்கள். அவர்களை நான் ' டாஸ்மாக்கில் தண்ணி அடிக்கலாம் , கையேந்தி பவனில் சாப்பிடலாம் , வாருங்கள் ' என்று அழைக்க முடியாது. என் வறுமைக்குக் காரணம் , உங்களுக்கே தெரியும். பாரதி பட்ட அதே கஷ்டம்தான். பாரதிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியிலிருந்து , போலீஸ் கமிஷனர் வரை பல நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். ஆனால் அவர் வீட்டில் சாப்பாட்டுக்கு அரிசி இருக்காது.

' இதை மாற்றி விடலாம் , வாருங்கள் ' என்று சொல்லி தங்கவேல் ஸீரோ டிகிரி இ-புக் விற்பனையை ஆரம்பித்தார். ' குறைந்தது ஆயிரம் பேர் வாங்குவார்கள் ; உங்கள் பிரச்சினை தீர்ந்தது ' என்றார். "இம்மாதிரி பேசினீர்கள் என்றால் எனக்குக் கெட்ட கோபம் வரும்" என்று அவரைத் திட்டினேன். அவருக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும் ; ' நல்லது செய்தால் இந்த ஆள் ஏன் இப்படித் திட்டுகிறான் ? இவனைப் பற்றி மற்றவர்கள் சொல்வது உண்மைதான் போல ' என்றெல்லாம் கூட நினைத்திருக்கலாம். ஏன் திட்டினேன் தெரியுமா ? இது வரை மூன்று பேர்தான் ஸீரோ டிகிரி இ புக்கை வாங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால்தான் திட்டினேன். அதிக பட்சம் இன்னும் ஏழு பேர் வாங்குவார்கள். அதனால்தான் அப்போதே ' எப்படியும் பத்து பேர் வாங்கி விடுவார்கள் என்று நம்புகிறேன் ' என்று எழுதினேன்.

இதற்கிடையில் ஒரு பிராது. ICICI வங்கிக் கணக்கில் 10 டாலரெல்லாம் அமெரிக்காவில் இருந்து அனுப்ப முடியவில்லை என்று. ஆனாலும் அதே அமெரிக்காவிலிருந்து வேறோர் நண்பர் அதே வங்கி மூலமாக 10 டாலர் அனுப்பி ஸீரோ டிகிரி இ-புக்கை வாங்கினார். இந்த இரண்டு பேர் சொல்வதும் உண்மைதான். ஒரு ஊரில் முடிந்திருக்கும். இன்னோர் ஊரில் முடியாது என்று சொல்லியிருப்பார்கள். அவ்வளவுதான் விஷயம். இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால் , மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான். விருப்பம் இருந்தால் எந்த வழியிலாவது இ-புக்கை வாங்கி விடலாம். ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் அந்த மூன்று என்ற எண்ணிக்கையில்தான் இருக்கிறது. எத்தனையோ லட்சம் என்.ஆர்.ஐ. தமிழர்களில் வெறும் மூன்று பேர்தான் ஐயா இ-புக் வாங்க முன் வந்திருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க , இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தாள் என் தோழி ரம்யா. ராஸ லீலாவை மொழி பெயர்க்கக் கிளம்பிய படையில் முதலில் நிற்கும் பெண் ரம்யா. அமெரிக்காவில் இருக்கும் போது அந்த நாவலில் விவரிக்கப் படும் மனிதர்களைக் கூட வேண்டாம் ; அந்த இடங்களையாவது பார்த்து விட வேண்டும் என்று ஒரு இரண்டு டஜன் மெயில்களாவது அனுப்பி இருப்பாள். ஆனால் இங்கே சென்னையில் வந்து இறங்கிய பிறகு அதைப் பற்றிய பேச்சே இல்லை. எனக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எதுவும் இல்லை. ஆர்வம் இருந்து அது நடக்காமல் போனால் ஏமாற்றமே மிஞ்சும். மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக இது விஷயத்தில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. எனவே இந்த முறை எனக்கு சந்திப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. ' ஆனால் ரம்யா எனக்கு வெறும் தோழி மட்டும் அல்லவே ? ராஸ லீலாவை மொழி பெயர்க்கப் போகும் பெண்ணாயிற்றே ?' என்ற வகையில் மட்டும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

வந்ததும் குறுஞ்செய்தி வந்தது. குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்புவதையும் , chat செய்வதையும் நிறுத்தி ஆண்டுகள் பல ஆகி விட்டன. இப்போதைய நிலையில் எனக்கு அது சாத்தியமும் இல்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனக்கு சற்று குற்ற உணர்ச்சி மேலிட்டது. ஆனால் வேலையோ தலைக்கு மேல் இருந்தது. ஆனால் அவள் பேசினால் எல்லா வேலையையும் விட்டு விட்டுப் பேசி விடலாம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. திடீரென்று "ஏன் குறுஞ்செய்திகளுக்கு பதிலே இல்லை ?" என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. இது என்னைக் கோபப்படுத்தியது. ஏனென்றால் , மாத்ரு பூமியிலிருந்து "ஓனம் பண்டிகையிலிருந்து தமிழ் சினிமா பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா ?" என்று கேட்டிருந்தார்கள். அதன் பொருட்டு நான் ராப்பகலாகக் கண் விழித்து எம்ஜியார் பற்றிய என் முதல் கட்டுரையை அனுப்பி வைத்திருந்தேன். மாத்ரு பூமி ஒரு வாரப் பத்திரிகை என்ற படியால் அடுத்த கட்டுரையையும் உடனடியாக அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம். ரம்யாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்த அன்று நான் நடுநிசி இரண்டு மணியிலிருந்து டைப் செய்து கொண்டிருந்தேன். அன்றைய தினம் தியானமும் செய்யவில்லை ; வாக்கிங்கும் போகவில்லை. மாத்ரு பூமிக்கு என் அடுத்த கட்டுரை தமிழ் சினிமா பாடல்களின் வரலாறு பற்றியது. ஒரே வாரத்தில் முடிந்து விடாமல் மூன்று வாரம் வரும் அளவுக்கு ஆய்வு செய்து எழுதப் பட வேண்டிய நீண்ட கட்டுரை. சபா நாடகங்களிலிருந்து தொடங்கி இன்றைய ' கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ?' வரை கொண்டு வர வேண்டும். அந்த நேரத்தில்தான் ரம்யாவிடமிருந்து காலை வணக்கமும் , இன்ன பிற விசாரிப்புகளும் வந்தன.

உண்மையில் இதற்கு நான் ரம்யாவுக்கு வாழ்நாள் பூராவும் கடமைப் பட்டிருக்க வேண்டும். ஒருவர் காலையில் எழுந்து "காலை வணக்கம் ; இப்பொழுது நான் வேளுக்குடி கிருஷ்ணனைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று எனக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமானால் அதற்கு நான் எந்த அளவுக்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் ? உங்களுக்குத் தெரியுமா ? ஸீரோ டிகிரி நாவலை எழுதிக் கொண்டிருந்த போது நானும் என் நண்பன் ஒருவனும் திடீரென்று ஒரு நாள் அனாதைகளாக ஆனோம். அவனுடைய இளம் மனைவியும் , அவனுடைய உயிருக்குயிரான அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். அவனுடைய வேலையும் போயிற்று. ஆனாலும் பணக்காரன் ஆனதால் எப்படியோ சமாளித்தான். என்னிடமோ அந்தப் பணமும் கிடையாது. விந்து வங்கியில் என் விந்தை விற்று வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டம். அப்போது ஒரு நாள் அவனுடைய வீட்டில் அமர்ந்து அந்த ஓல்ட் மாங்க் கருமத்தைக் குடித்துக் கொண்டிருந்த போது "நமக்கு ஒரு குட் நைட் சொல்லக் கூட நம் வாழ்வில் ஒரு பெண் இல்லாமல் போய் விட்டாளே ?" என்று விசனத்துடன் சொன்னான் அந்த நண்பன். இப்போது அவன் கோடிகள் புரளும் ஒரு நிறுவனத்தின் CEO. புதிய மனைவி , புதிய தோழிகள் , குழந்தைகள் என்று ஏராளமான பரிவாரங்களுடன் ஒரு சுல்தானைப் போல் வாழ்கிறான். என்னுடன் பேச்சு வார்த்தை இல்லை. நான் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்தத் தனிமையான இரவில் அவன் சொன்ன வார்த்தைகள்...

இன்று இதோ இந்த ரம்யாவின் குறுஞ்செய்தி. இவளுடன் பேசுவது எனக்கு சந்தோஷமான விஷயம். அதுவும் வேளுக்குடி பற்றி. ஆனால் பத்திரிகைக்கு அடுத்த கட்டுரையை அனுப்ப வேண்டுமே ? ' உனக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லை ' என்று கோபமாக ஒரு மறுசெய்தி அனுப்பினேன். "ஆமாம் ; நான் ஒன்றும் அப்படிச் சொல்லிக் கொள்ள வில்லையே ?" என்று அவளிடமிருந்து பதில் வந்தது. அந்தக் காலை நேரத்தில் எக்கச்சக்கமாக சூடாகிப் போனேன். ' மற்றவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை என்றால்பாதகமில்லை ; அது அவசியமும் இல்லை. ஆனால் என்னுடைய நாவலை மொழிபெயர்க்க வேண்டிய ஒருவருக்கு என்னைப் பற்றித் தெரிய வேண்டாமா ?' என்பதால் ஏற்பட்ட கோபம் அது. பிறகு அவளே தொலைபேசியில் அழைத்தாள். என்னுடைய நிலையை விளக்கினேன். சமரசம் ஏற்பட்டது. ஆக , என்னுடைய சொந்த வாழ்க்கையின் சிறு சிறு சந்தோஷங்களையெல்லாம் இழந்துதான் இதையெல்லாம் நான் டைப் செய்து கொண்டிருக்கிறேன் என்பது இதன் உள்குத்து.

பிறகு அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். (அதற்கு மேலும் குறுஞ்செய்தி அனுப்ப அவள் என்ன பைத்தியமா ?) இதற்கிடையில் அவள் அமெரிக்காவிலிருந்து வரும்போது ஒரு ஐ பாட் -உம் , ஒரு டிஜிட்டல் ரெக்கார்டரும் வாங்கி வருமாறு சொல்லியிருந்தேன். மேலே நான் குறிப்பிட்ட தமிழ் சினிமா பாடல் பற்றிய கட்டுரையைக் கூட நான் பாடல்களைக் கேட்காமலேயே என் நினைவில் இருந்ததை மட்டுமே வைத்து எழுதித் தொலைக்க வேண்டியிருந்தது. கடந்த ஏழு வருடங்களாக என் நெருங்கிய நண்பர்கள் அமெரிக்காவிலிருந்து வரும் போதெல்லாம் இந்த இரண்டு தளவாடங்களையும் வாங்கி வரச் சொல்லி எழுதுகிறேன். இன்னும் வந்து கொண்டிருக்கிறது. ஒருவருக்கு இதை வாங்கக் கிளம்பும் போதுதான் பாஸ்போர்ட்டும் வீஸாவும் தொலைந்து போய் விட்டது. பாவம் , அவர் அதைத் தேடுவாரா ? அல்லது , எனக்காக ஐ பாட் வாங்கப் போவாரா ? இப்படி ஒவ்வொரு நண்பருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ரம்யாவுக்கு ஷாப்பிங் கிளம்பச் செல்லும் போதுதான் அவளுடைய கணவருக்கு ஜூரம். கிளம்புவதே சந்தேகம் என்று ஆகி விட்டது. "சே சே , என்ன ரம்யா , இதற்கெல்லாம் ஸாரி சொல்லிக் கொண்டு ?" என்று பதில் சொன்னேன். ரம்யாவுக்கு நான் நிரம்ப நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். எனக்கு எந்தப் புத்தகம் தேவை என்றாலும் ஒரே வாரத்தில் வாங்கி அனுப்பி வைக்கக் கூடியவள். மற்ற நண்பர்களும் கூட அப்படித்தான். என்னவோ தெரியவில்லை , இந்த ஐ பாட் க்கும் எனக்கும்தான் ராசிப் பொருத்தம் சரியில்லை போலும்!

ஆனால் நான் ரம்யாவிடம் சொல்லாத விஷயம் ஒன்று உண்டு. என்னவென்றால் , இங்கே என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள லஸ் முனையில் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய அதே ஐ பாட் அதே விலையில் கிடைக்கிறது. நகல் அல்ல ; ஒரிஜினல்.

பிரச்சினை இதுதான். நான் ஏதோ ஜாலி பண்ணுவதற்காக இதைக் கேட்கவில்லை. ஐ பாட் இருந்தால் அந்த சினிமாப் பாடல் கட்டுரையை இன்னும் செறிவாக எழுதியிருக்கலாம். அதோடு , வாரம் ஒருமுறையாவது மாதவப் பெருமாள் கோவிலில் வேளுக்குடி கிருஷ்ணனின் உபந்யாசத்தைக் கேட்டு விடுகிறேன். ஆனால் என் ஞாபக சக்தி குறைவு என்றபடியால் எல்லாம் கலைந்து போய் விடுகிறது. ஒரு டிஜிடல் ரெக்கார்டர் இருந்தால் அதையெல்லாம் பதிவு செய்து என் எழுத்துக்குப் பயன்படுத்திக் கொள்வேன். இதனால் யாருக்கு லாபம் ? எனக்கா , அல்லது சமூகத்துக்கா ?

ஒரு வழக்கமான உதாரணம்தான் ஞாபகம் வருகிறது.

இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அவருக்குத் தேவையான உபகரணங்களைக் கொடுக்காமல் கையாலேயே நோண்டி நோண்டி அறுவை சிகிச்சையை முடித்து விடுங்கள் என்று மருத்துவ மனை நிர்வாகம் சொன்னால் எப்படியிருக்கும் ? அந்தக் கதைதான் என்னுடைய கதையும். பாடல்களைக் கேட்காமலேயே பாடல்கள் பற்றிய கட்டுரை! என்னய்யா வாழ்க்கை இது! இந்த லட்சணத்தில் நான் என்னுடைய போலிப் புலம்பல்களைச் சொல்லி காசு சம்பாதிப்பதாகச் சொல்கிறார் கோடிகளில் புரளும் அந்தப் பிரபலமான பத்திரிகையாளர்...

( இருக்கிறது இன்னும் புலம்பல்...)

***

26.6.2008.

7.39 p.m.