தசாவதாரம் - வாசகர் கடிதம்

 

தசாவதாரம் பற்றிய என்னுடைய விமர்சனம் ஜூலை மூன்றாம் தேதி வெளிவரும். அதற்கு முன் இந்த வாசகர் கடிதம்.

 

அன்புள்ள சாருவிற்கு,

இந்தக் குட்டிக்கதையை(!) ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். மேல்நாட்டு மன்னன் ஒருவனை ஏமாற்றி உலகத்திலேயே அழகான உடை தைத்துத் தருகிறேன் என்று சொல்லி நிறையப் பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டானாம் ஒரு தையல் தொழிலாளி. அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. இந்த உடை உண்மை பேசுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று " பிட்டை" பரப்பிவிட்டான். நகர்வல நாளும் வந்தது. உடைமாட்டிவிடுகிறேன் என்று சும்மாக்காச்சும் பாவனை காட்டினான். நிர்வாண மன்னனைக் கண்டு அலங்கார உடுப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடையாது என்று இன்னொரு " பிட்".மன்னனுக்கு தனது நிர்வாணத்தைக் கண்டு நாணம். இருந்தாலும் எங்கே தான் பொய் சொன்னதால் தான் தனக்கு இந்த உடை தெரிவதில்லை என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் "ஆஹா அற்புதம்" என்று வெமகுமதியளித்தான்.

குறிப்பாக ராணியிடம் சொன்ன பொய்கள். ராணியின் பாராட்டோ உண்மை போலவே இருந்தது. ரெம்ப நல்லா இருக்கு என்றால் பலருக்கும் பொதுப்படையாக இருக்குதே என்று சந்தேகம் வரும். இந்த 5 தங்க பொத்தான்களும் காலரின் சரிகைக்கு ஏற்றவாறு இருக்கின்றது என்று ராணி சொன்னால் பொய்போலவா இருக்கிறது. ராணிக்கும் தன் பொய்கள் குறித்துப் பயம். பின்னே அரசனுக்கு தினம் ஒருத்தி என்பதால் ராணி காயமுடியுமா ?  தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினிதான் என்று நம்பும் பிற கணவன்களைப் போலவே ராணியின் சொல் நம்பி மகிழ்ச்சியுடன் நகர்வலம் சென்றான். மந்திரிகளும் , அடிப்பொடிகளும் உடைகளைப் புகழ்ந்த விதம் கவித கவித. அருவி மாரிக் கொட்டுச்சு. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த சிறுவன் " ஐயே! ராஜா அம்மணமா வர்ராறு என்று போட்டு உடைத்துவிட்டான்.

வெட்கப்பட்ட ராஸா வீட்டுக்குள் ஓடினாராம். தசாவதாரம் படமும் உலகப்புகழ் பெற்ற உடை போலத்தான் இருக்கிறது. இருக்கிறது. கருணாநிதி முதல் மனோரமா வரை இப்படித்தான் புகழ்ந்து தள்ளினார்கள். அனேகமாகக் கருணாநிதி "கண்ணம்மாவை" ஒப்பிட்டுப் புகழ்ந்திருப்பாரோ என்ற ஐயமும் நிலவுகிறது. உண்மையிலேயே உலகத்தரமாக இருந்து விடுமோ என்ற நப்பாசையெல்லாம் படம் பார்க்கப் போவதற்கு முன்பே எனக்கு இல்லை. பாபாவானாலும் சரி போக்கிரியானாலும் சரி 5 தடவையாவது பார்த்துவிடும் நண்பனுடன் இந்தப்படத்தை பார்த்ததே ஒரு சுகானுபவம். குழந்தைகள் சிரிக்காத கட்டங்களில் கூடச் சிரித்தான். 40 இருக்கைகளாவது நிரம்பும் என்ற உத்தரவாதம் இருந்தால்தான் தமிழ்ப்படம் ஓட்டப்படும் புனேவில் , 2 வருடங்களாகத் தமிழ்ப்படம் ஏதும் பார்க்காத ஏக்கத்தில் , படம் பார்க்கப்போனேன். இன்னொரு காரணம் தமிழ்ப்படங்கள் பார்க்காததால் வார இதழ் "கிசுகிசுக்கள்" யாரைப்பற்றி என்று புரிவதேயில்லை.

அன்பே சிவம்? :  முதலில் சொல்லப் பட்ட சைவ – வைணவ மோதல் விஸ்தீரணமாகத் தமிழர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய வரலாறு. நல்ல தங்காள் கதை அளவுக்கு கூட இம் மோதல்கள் தெரிந்திராமைக்கு சமூகத்தின் கீழ்அடுக்கு மக்களுக்கும் மேல் அடுக்கு மக்களுக்கும் இடையே இருந்து வந்த பெரும்பிளவே காரணம். போற்றிப் புகழப்படும் ராஜராஜசோழனின் சைவ வெறி மட்டுமல்ல. எந்த நோயால்( ?) அவன் இறந்தான் என்பதும் கூட மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதே. அவனால் விரட்டப்பட்ட ராமானூஜரை அரவணைத்தது கன்னட மண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தவிர இந்தக் கதை மறுபிறப்பு என்ற மூட நம்பிக்கையைப் புகுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அசினுக்கு ஒரு நற்செய்தி அவரும் 2 வேடங்களில் தோன்றிவிட்டார்.

அய்யய்யோ சவம்:- கிட்டத்தட்ட வில்லன் வேடம் சவம் முகமூடி போட்டுக்கொண்டு வந்த மாதிரித்தான் இருக்கிறது. சில சமயங்களில் முகமூடி போட்டுக்கொள்ளாமல் வந்த மாதிரியும் வெளிறிப்போய் இருக்கிறது.

மதச்சார்பற்ற கமல்கள் : நான் சிறுவனாக இருந்த போது தெரு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு. அன்று மாலை நாடகம் என்று கேள்விப்பட்டு பக்கத்து வீட்டுப்பாட்டியைக் கூப்பிட்டேன். போடா நான் வரலை. அதல்லாம் குடும்பக் கட்டுப்பாட்டு நாடகங்கள் என்றார். பிரச்சாரத் தன்மை வாய்ந்த எல்லா நாடகங்களுக்கும் அவர் வைத்த பெயர் அதுதான். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருக்கிறது கிறித்தவ , முஸ்லீம் கமல்கள். விஜயகாந்த் கொல்லப்பட்ட முஸ்லீம் இறுதி ஊர்வலத்தில் "மய்யத்தை" தூக்கி வந்து மதச்சார்பின்மையை நிலைநாட்டுவது போலத்தான்   பிறமதக் கமல்கள். பல படங்களில் அம்மனாக அருள்பாலித்த கே.ஆர்.விஜயா-நகேசின் பீவியாக வந்து மயங்கி விழும்போதும் புன்னகைக்கிறார். என்று தான் தமிழ்முஸ்லீம்களின் கலாச்சாரக் கூறுகளுடன் ஒரு படம் வரும் என்று தெரியவில்லை. கவனிக்க அமீர்.

பாட்டி கமல் : ஆண்டாள் பக்தியில்-காதலில் கசிந்துருகிப் பாடிய பாடல்கள் தண்ணீர் மேலிருந்து பாய்வது போல இயல்பான பாடல்கள். மேல்மடைப் பாடல்கள் . பிற ஆழ்வார்களின் பாடல்கள் கீழ்மடைப் பாடல்கள். கீழிருந்து தண்ணீர் மேலே பாய எப்படிச்சுணக்கம் காட்டுமோ அது போல ஆண்டாள் பாடல்களை விட மார்க் கம்மிதான் என்பர் வைணவர். மை.ம.காமராசனில் எஸ்.என்.லட்சுமி பண்ணிய ரகளையை நினைத்துப் பாருங்கள். எது மேல்மடை என்று புரியும்.

குல்டி கமல்: வேறந்த வேடத்தையும் விட சுவாரஸ்யமான வேடம். நன்றாகப் பண்ணியிருக்கிறார். வாழ்த்துக்கள். அரசாங்கத்தின் சிவப்புநாடாத்தனம் அங்கதமாக மிளிர்கிறது.

புஷ் கமல் : "புஸ்" கமல். இந்திய குடியரசுத் தலைவரை இப்படிக் கிண்டல் பண்ண முடியுமா ?

ஜப்பான் கமல்: எங்கே என் தங்கை கல்யாணி ரேஞ்சுக்குப் போய்விடுமோ என்று பயந்தேன். நல்ல காலம். ஆயினும் சற்றேனும் கண்டுபிடிக்க முடியாத வேடப்பொருத்தம்.

பஞ்சாபி கமல்: எந்த வகையிலும் கதையில் சேராத கமல். 10 வேடங்களை எண்ணிப்( count) பார்க்கையில் ஞாபகத்திற்கு வராத வேடம். தனிக் காமெடி ட்ராக் போல, தனி சோக ட்ராக். பஞ்சாபிப் பாடல்கள் எத்தனை துள்ளல் இசைத்தன்மை வாய்ந்தன. கேன்சரோடு பஞ்சாபிப் பாட்டா ?

விஞ்ஞானி கமல்: உண்மையான கமல். ஒன்றும் புரியவில்லை. ஆக சத்திய அரிச்சந்திரா மயான காண்டத்தில் பஃபூனே , லோகிதாசனின் நண்பனாக வருகையில் தன் பெயரை 4 தடவையாவது உரக்கக்ககூறுவான் பழைய வேடத்தை மறக்கடிக்க. பின் அரிச்சந்திரனின் நண்பனாகவும் வரும்போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய குறைந்த பட்ச முயற்சிகள் கூட இல்லாது முகமூடி மாட்டி உலகத்தரம் என்று சொல்லும்போது நாமும் மன்னனைக் கண்ட சிறுவனைப்போலத் தானே சிரித்துக் கத்துகிறோம்.

பூபதி

பூனே

* * *