கடிதம்

 

 

( கார்த்திக் - க்ரைஸ்ட் சர்ச்சின் முன்பாக மற்றும் AVON நதிக்கரையில் - நியூஸிலாந்த் )

ஹாய் சாரு,

விக்னேஷ் தனது கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாரோ அதையேதான் நானும் நினைத்தேன்.

நீங்கள் சொன்னது போல் சிலருடைய எழுத்தை ஒரு பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. இப்போதுள்ள எழுத்தாளர்கள் தங்களுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்தவே எழுதுகிறார்கள். யாருக்குமே புரியாமல் எழுதி என்ன பயன்? ஒரே ஒரு பயன், விருது கிடைக்கும். ஒரு பழமொழிதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஆடை உடுத்தாதவன் ஊரில் ஆடை உடுத்தியவன் பைத்தியக்காரன்...

ஆரம்பத்தில் உங்களைப் பற்றி நான் தவறாகவே எண்ணியிருந்தேன். (குமுதத்தில்) ரஜினி பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததால் ஏற்பட்ட விளைவு. ரஜினியின் சொந்த விஷயத்தில் இவர் ஏன் தலையிடுகிறார் என்று நினைத்தேன் அப்போது. இப்போது விகடன் மூலமாக உங்கள் இணைய தளம் பற்றித் தெரியவந்தது.

சுஜாதாவுக்குப் பிறகு உங்கள் எழுத்து மட்டுமே திரும்பத் திரும்ப படிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புதிய அர்த்தத்தைத் தருவதாக இருக்கிறது உங்கள் எழுத்து. உங்களுடைய எல்லா எழுத்தையும் நான் படிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் உங்கள் இணைய தளத்தை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் எழுத்திலுள்ள சத்தியத்தை என்னால் உணர முடிகிறது. எந்தவித gimmicks -உம் இல்லாதது உங்கள் எழுத்து.

உண்மையாக நான் உணர்ந்ததையே எழுதுகிறேன்; உங்களை இம்ப்ரெஸ் பண்ணுவதற்காக எழுதவில்லை. அவந்திகாவுக்கு என் அன்பு.

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்

எஸ். வித்யா

திருவனந்தபுரம்.

* * *