கடிதம்

 

 

(சிவகுமார் என்ற நண்பருடன் )

டியர் சாரு,
 
நன்றி.  எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். உங்களுடைய எழுத்தைப் படிப்பதே நீங்கள் எனக்கு அளிக்கும் விலைமதிப்பில்லாத பரிசாகும். நான் கட்டாயம் அந்த நூலை வாங்கிப் படிக்கிறேன்.
 
ஆம். உங்கள் நூல்களின் விலை அதிகமாக இருக்கிறது. குறைந்த விலையில் விற்க, அதாவது நூறு ரூபாய்க்குள் இருந்தால் நிச்சயம் நிறைய பேர் வாங்க முன்வருவார்கள்.
 
உங்களை நான் முழுமையாகப் புரிந்துகொள்வதால்தான் தொடர்ந்து படிக்கிறேன். ஆயினும் சிலசமயம் கேள்விகள், குழப்பங்கள் எழுகின்றன. அழகிரி விஷயத்தில் நான் எண்ணியதை உங்களுக்கு எழுதினேன்.
 
உங்களுக்குப் பிடித்த நடிகை என்று நீங்கள் குறிப்பிட்டவர்கள் அனைவரும் அழகிகள்தான். நான் கேட்டது சிறந்த நடிப்பு கொண்ட இந்திய நடிகை யார் என்று? என் ஓட்டு நந்திதா தாஸூக்கு.
 
உங்களுடைய தசாவதாரம் விமர்சனம் என் எல்லா நண்பர்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது. உலக சினிமா மற்றும் மாற்று சினிமா பற்றிய ஞானம், அக்கறை இன்றி அதுபோல யாராலும் எழுதமுடியாது.
 
உங்கள் மகள் நிச்சயம் உங்களைத் தேடி வருவார். இதற்கு மேல் உங்கள் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்கவில்லை.
 
உங்களுக்கு வெகுஜனப் பத்திரிகைகள் அவசியம் கிடையாது. உங்களுடைய வாசகர்களே உங்களை எட்டு திசைக்கும் கொண்டு சென்று விடுவார்கள். குறிப்பாக சுஜாதாவுக்கு அடுத்து இளைய தலைமுறை உங்கள் எழுத்தைப் படிக்கத்தான் ஆளாய் பறப்பார்கள்.
 
உங்களுடைய எழுத்தின் பெரிய பலம் - மறுவாசிப்பு. என்னிடம் எப்போதும் கோணல் பக்கமும் ஜீரோ டிகிரியும் கைவசம் இருக்கும். எப்போது படித்தாலும் புதிதாகப் படிப்பதுபோல இருக்கும். உங்கள் அளவுக்கு சினிமா, அரசியல், இசை, இலக்கியம் ஆகிய நான்கிலும் அப்டேட்டடாக இருக்கும் எழுத்தாளர் தமிழில் யாரும் இல்லை என்று சொல்லலாம். விளையாட்டில்தான் நீங்கள் கால்பந்து தவிர வேறு எதுவும் எழுதுவதில்லை.
 
நீங்கள் ஒரு நல்ல தமிழ் படம் இயக்கவேண்டும். அதற்கான காலம் கனியும். அதுவரை நான் காத்திருப்பேன்.
 
விக்னேஷ்.