கடிதங்கள்

 

சாரு, 

குட்டிக் கதை 37 படித்தேன்...கதையின் கடைசியில் வந்த பன்ச் குபீர் சிரிப்பை வரவழைத்தது. கு. க. 38 ஐவிட அவரை பெருந்தன்மையாக விமர்சிக்க முடியாது.

அப்புறம்...வாமுகோமு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உடனே மண்பூதம் சிறுகதை தொகுப்பை வாங்கிப் படித்தேன். எங்கள் ஊரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறார் என்பதையே நீங்கள் சொன்ன பின்னர் தான் தெரிந்தது... நிலைமையை பார்த்தீர்களா? அது சரி உங்களையே பரவலாகத் தெரியாத தமிழ்ச் சமூகத்துக்கு வாமுகோமுவை எப்படித் தெரியும்? ஒரு நல்ல எழுத்தாளரை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி. அதுவும் என் ஊருக்குப் பக்கத்திலேயே. 
 
ரகுநாதன்

 

* * *

சார்,  அவந்திகாவின் கதையில் வரும் அந்த ஷ்க்ராப்பர் மூலம் சுரண்டுவதால் ஏற்பட்ட வலியை ஏன் தான் பெண்ணாகப் பிறந்தோமோ என்று இருக்கும்.... படித்துவிட்டு சிறிது நேரம் திரும்பத் திரும்ப அந்தப் பத்தியை நினைத்துப் பார்த்தேன்.  கண்ணீரே வந்துவிட்டது... கருக்கொலை செய்வோர் கவனிக்க வேண்டும். இப்போது உங்கள் மகளைப் பார்த்துவிட்டீர்களா-வைப் படித்தபோது நான் நினைத்தது சரியாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் பெரியவர்தான்... வயது, படிப்பு, அனுபவம் இதில் மட்டுமல்ல... நடைமுறையிலும், பண்பிலும் பெரியவர் எனக் கூறுகிறேன். நான் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கவில்லை.... உண்மையில் என் மனதில் பட்டதை சொல்கிறேன். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... உணர்ச்சிவசத்தால் அல்ல....

நீங்கள் புதிய புதிய  பிரெஞ்ச், ஐரோப்பிய, அராபிய  எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறீர்கள்.. அவர்கள் எழுதிய புத்தகம் எங்கு கிடைக்கும்? அவர்கள் எழுதிய சிறந்த புத்தகங்கள் எவை என்று கூறுங்கள். அதை நீயே தேடிப் படி என்று சொல்லாதீர்கள். உங்கள் வாசகனாக இருக்க எனக்குத் தகுதி தேவைப் படுகிறது. ஒரு எழுத்தாளனாக ஆகமுடியாவிட்டாலும்,..உங்களால் ஒரு நல்ல வாசகனாக உருவாக வேண்டுமென்பது என் விருப்பம்.

கறுப்புத் தொகுப்பில் புதுமைப்பித்தன் பற்றிய உங்கள் விமர்சனக் கட்டுரை படித்தபோதுதான் அவரைப் பற்றிய என்னிடம் இருந்த மாயை விலகியது. உங்களுடய சமரசமற்ற தெளிவான விமர்சனப் பார்வை, உங்கள் எழுத்தை தேடிப் படிக்க வைக்கிறது. மனோஜ் பற்றி நீங்கள் அறிமுகம் செய்த்ததாலேயே நான் புனைவின் நிழல் வாங்கிப் படித்தேன். அதற்கு முன் கடையில் பார்த்திருந்தாலும் வாங்க மனமில்லை. ஆனால் படித்தபின் தான் அதன் மகிமை புரிந்தது.
 
5, 6 வருடங்களுக்கு முன் நக்கீரன் என நினைக்கிறேன்...ஜீரோ டிகிரி எனும் நாவல் மக்கள் பதிப்பு வெறும் ரு.30 என விளம்பரம் படித்து, அனுப்பி வாங்கினேன். அவ்வளவாக செலவு செய்யமுடியாத காலம்.. ஆனால் அவ்வாறு உங்களுடய அனைத்து புத்தகங்களும் வெளிவந்தால் அதன் ரீச் பிரமாண்டமாக இருக்குமே... அத்தகைய திட்டம் எதாவது உண்டா?..புத்தக விலையே வாங்கமுடியாத அளவு இருப்பதால்தான் விகடன் குமுதம் வாங்குவோர் இலக்கியப் பக்கம் வருவதில்லை என நினைக்கிறேன். உங்கள் விமர்சனம், உங்கள் எழுத்து எல்லாரும் படிக்கபடவேண்டியவை... அதற்கு தசாவதாரம் ஒரு சோறு பதம். அந்தப் பிரதியை நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்... வெப்சைட்டயும் அறிமுகம் செய்துள்ளேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

ரகுநாதன்

கோவை

* * *