| ஆசான் சாரு நிவேதிதா,
உங்களுக்கு நீண்ட நாட்களாய் கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்து ஒருவழியாக
இப்போது எழுதியே விட்டேன்.
உத்தமத் தமிழ் எழுத்தாளனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் உங்கள் கட்டுரையில்
புதிது புதிதாய், பயனுள்ள நிறைய தகவல்களை அளிப்பதாகச்
சொல்லியிருந்தீர்கள். அது முற்றிலும் உண்மை. உங்களுடைய கட்டுரைகளில்
நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள், திரைப்படங்களைக் கொண்டே நான்
என்னுடைய இலக்கிய, சினிமா அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறேன். நீங்கள்
குறிப்பிடும் எழுத்தாளர்களுடைய புத்தகங்களை எப்படியாவது தேடிப்பிடித்துப்
படித்து விடுவேன். அதைப் போலவே நீங்கள் சுஜாதாவுக்கு எழுதிய இரங்கல்
கட்டுரையில் வோனேகட் என்ற எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அவருடைய Slaughterhouse-5 என்ற புத்தகத்தைப் படித்து அசந்து போனேன்!
இப்படிப்பட்ட முக்கியமான எழுத்தாளர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது என்
போன்ற வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படிப்பட்ட அறிமுகங்கள்
கிடைக்குமென்றால் நீங்கள் உ.த.எ-பற்றி எத்தனை வேண்டுமானாலும் திட்டி
எழுதலாம்.
தமிழில் வேறு யாரும் வோனேகட் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று
(அவநம்பிக்கையுடன்) வலை மேய்ந்து கொண்டிருந்தபோது எனக்கு
ஆச்சரியமளிக்கும் வகையில் சேதுபதி அருணாசலம் என்ற ஒருவர் வோனேகட்டின்
'சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற கட்டுரையை திண்ணையில் மொழி
பெயர்த்திருந்தார்.
(பார்க்க: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60601277&format=html)
மிக நல்ல கட்டுரை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மிக அழகான
மொழிபெயர்ப்பு. உ.த.எ போல் பல்லை உடைக்கும், தலையைச் சுற்றும்
வார்த்தைகள் இல்லாமல் மிக இயல்பான மொழியில், ஒரு அழகிய கட்டுரையை இவர்
மொழி பெயர்த்திருக்கிறார். (ஆனால் வோனேகட்டை வானகட் என்று எழுதுகிறார்.
எது சரி?) தினம் ஆயிரக்கணக்கான வாசகர்கள் படிக்கும் உங்கள் தளம் மூலம்
வோனேகட்டின் இந்த சுவையான கட்டுரை எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று
நான் அதற்கான URL-உம் தந்துள்ளேன்.
சேதுபதி அருணாசலம் வேறென்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடியபோது
பெரும்பாலும் இந்துத்துவ வாடை அடிக்கும் கட்டுரைகள் கிடைத்தன. ஆனாலும்
இயல்பான,சரளமான மொழியில் எழுதுகிறார். இவருடைய சமீபத்திய
கட்டுரையிலிருந்து இவர் எடுத்த மிக அழகான புகைப்படங்கள் பார்க்கக்
கிடைத்தன. http://www.flickr.com/photos/sethuarun/ தவற விடாமல்
பாருங்கள்.
தயவுசெய்து தொடர்ந்து நல்ல எழுத்தாளர்களையும், திரைப்படங்களையும்
அறிமுகப்படுத்துங்கள். இது என் வேண்டுகோள். (உங்கள் சமீபத்திய
கட்டுரையைப் படித்தபின் Babel சினிமா டிவிடி எங்கு கிடைக்கும் என்று தேடி
வருகிறேன்).
அன்புடன்,
ராஜேஷ்,
குனியமுத்தூர்,
கோவை.
|