குட்டிக்கதைகள் நூற்றியெட்டு (43) தொடர்ச்சி

 

பெயர் பூரணியாம். பூங்கொடிக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஒரு மகள் உண்டு.

” இப்போது இந்தக் குழந்தை தேவையா உனக்கு? ” என்று அவளைக் கேட்டான் பெருமாள்.

ஒரே ஒரு கணம் கணவன் மீது ஆசை மிகுதி ஆயிற்றாம். பெற்றுக் கொண்டாளாம். வயிற்றில் குழந்தையைக் கொடுத்து விட்டு அவன் போய் விட்டான். நன்றாகத் தண்ணி அடித்து விட்டு, போதையில் தடுமாறி விழுந்த போது மண்டையில் அடிபட்டு விட்டதாம்.

“ குழந்தைகளைப் பிடிக்காது என்று அடிக்கடி எழுதுகிறாய்; அந்த முடிச்சை இந்த 108 கதைகளுக்குள் அவிழ்த்து விடு ” என்று பெருமாளிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணா.

இப்போது அந்தத் தருணம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

பூரணியைத் தூக்கினால் அவள் தன்னைத் தூக்கியவர்களின் முகத்தில் இருக்கும் கண்ணாடியைப் பிடுங்கி உடைத்துப் போடுகிறாள். இரண்டு மூன்று பேரின் கண்ணாடி அப்படி உடைந்து போனதும் பெருமாள் ஜாக்கிரதை ஆனான். அவனுடைய கண்ணாடி Hugo Boss ப்ராண்ட். அதிக விலை.

கார்குடியைப் போய்ச் சேர்ந்ததுமே பூரணிக்கு லூஸ் மோஷன் ஆகத் தொடங்கியது. இது வேலைக்கு ஆகாது என்று மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து பூங்கொடியையும், பூராணியையும் ஊருக்கு அனுப்பி வைத்தான் பாலு. குழந்தை என்பது ஒரு costly affair என்பது பெருமாளுக்கு மீண்டும் ருசுவாகியது.

திடீரென்று பெருமாளுக்குத் தோன்றியது, ப்ரியா என்ற இந்தப் பெண்ணுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று. இவளால்தானே எல்லோரும் தன்னைப் பற்றி கழிவிரக்கத்தோடு பார்க்கும் படி நேர்ந்தது என்ற எரிச்சல் வேறு.

அன்றைய தினம் பெருமாள் குளியலை முடித்து விட்டு வெளியே உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த நானா விதமான பசைகளையும் எடுத்து வைத்துக் கொண்டு தடவிக் கொண்டிருந்தான். முகத்துக்கு மட்டும் மூன்று வித பசைகள், கை விரல் நகங்களுக்கு ஒரு பசை, விரல் இடுக்குகளுக்கு ஒரு பசை, கைக்கு ஒரு பசை, பாதங்களுக்கும் பாத விரல்களுக்கும் வெவ்வேறு பசை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் “இப்படி பார்ட் பார்ட்டாக பசை கொண்டு வந்தவன் ‘அந்த ’ முக்கியமான பார்ட்டுக்கும் ஏதாவது பசை கொண்டு வந்திருந்தால் இப்போது உன்னையே நம்பியிருக்கும் ப்ரியாவுக்கு ஒரு வாழ்வு கொடுத்திருக்கலாம் அல்லவா? ” என்று கேட்டு விட்டு, இந்தப் பசைக் கதையை எல்லோரிடமும் வேறு பரப்பி விட்டான்.

பெருமாள் அவனுக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னால் புரியாது; ஃக்யூவில் நின்று வேசியிடம் செல்லும் பயல்களுக்கு பெருமாளின் உளவியல் சிக்கலெல்லாம் புரிவதற்கு வாய்ப்பில்லை.

பசைக் கதையைக் கேட்டு விட்டு பெருமாளிடம் வந்த வெங்கி “உனக்கு ஒன்று தெரியுமா? திருமணமானதும் நிறைய பேர் ஊட்டி, காஷ்மீர், ஸ்விட்ஸர்லாந்த் என்று ஹனி மூன் போகிறார்களே, அவர்களில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் இப்படித்தான் உன்னைப் போல் ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பி விடுகிறார்கள். அவர்களெல்லாம் ஒம்போது என்று அர்த்தமா? எல்லாம் குளிர் செய்யும் வேலை; நீ ஒன்றும் கவலையே படாதே ” என்று ஒரு பாதிரியார் பாணியில் ஆறுதல் சொன்னான்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்த பெருமாள் நேராக பாலுவிடம் வந்து அன்றைய தினமே ப்ரியாவை ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான்.

***

கார்குடிக் காட்டில் யாரும் துணையில்லாமல் தனியாகப் போகக் கூடாது என்பது விதி. ஏதாவது வன மிருகங்கள் அடித்து விடும். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் பாலுவின் பேச்சைக் கேட்டு அவனுடன் வனத்துக்குள் புகுந்து விட்டான் பெருமாள். இருவரும் மூன்று கரடிகளிடம் மாட்டிக் கொண்டார்கள். நல்ல வேளை, கரடிகள் இவர்களை ஒன்றும் செய்யாமல் போய் விட்டன. பங்களாவுக்குத் திரும்பியதும்தான் தெரிந்தது, சென்ற வாரம்தான் அவர்களுடைய வழிகாட்டி குமாரை ஒரு கரடி அடித்து அவர் உடம்பெல்லாம் காயமாகி இருந்தது.

இனிமேல் பாலு பேச்சைக் கேட்டு எதிலும் இறங்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான் பெருமாள்.

முக்கியமான விஷயம் விடுபட்டு விட்டது பாருங்கள். அதைச் சொல்வதற்காகத்தான் இந்தப் பயணம் பற்றியே எழுத ஆரம்பித்தது.

ஊட்டியிலிருந்து கார்குடி சென்று கொண்டிருக்கும் போது பெருமாளுக்கு போன் செய்தாள் நந்தினி. ஸ்கார்ப்பியோவை நரேன் ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அவன் மனைவி தர்ஷிணி. தர்ஷிணியை பெருமாளுக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். நிக்கியின் மகளை விட தர்ஷிணிக்கு வயது கம்மி. பெருமாள் நந்தினியிடம் சொன்ன ஏதோ ஒரு விஷயத்திற்காக கலகலவென சிரித்தாள் தர்ஷிணி.

“யாரது பெண் குரல் பக்கத்தில்? ” என்றது நந்தினியின் குரல்.

“நரேனின் மனைவி. ”

“என்னை நம்பச் சொல்கிறீர்கள்? ”

இந்தக் கேள்விதான் இந்தக் குட்டிக் கதையின் ஆதாரம். ஏனென்றால், உண்மையை விட பொய் வசீகரமானது.

***

12.7.2008.

10.30 p.m.