| “ பானுவை கார்குடிக்கு அழைத்துச் செல்லும் பாவத்துக்காக அவளோடு என்னால் கமிட் ஆக முடியாது. ”
பாலுவுக்கு புரியவில்லை.
” டேய், அவளோட என்னால் தினமும் ரெண்டு மணி நேரம் மொக்கை போட முடியாதுடா... ”
“அதெல்லாம் இல்லண்ணே...அந்த பானு சொன்ன காண்டம்தான் உங்கள் பிரச்சினை... நீங்க பேசுற புர்ச்சிலாம் சும்மா ஜாலிக்குத்தான். உங்களுக்கு அண்ணி மாதிரி இருந்தாத்தான் பிடிக்குது. சரி நோ வொர்ரி...நான் ரெண்டு பேரோட வர்றேன். உங்களுக்கு ஒண்ணு... ”
அப்படியானால் கிருஷ்ணா?
” ம்ஹும். கழற்றி விட்டு விட வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஜோடியோடு வந்தால் மட்டுமே அனுமதி ” என்றான் கோபால கிருஷ்ணன்.
மொத்தம் 23 பேர். ஆட்டோ கண்ணனும், வெங்கியும் தனி ஆட்கள். இத்தனை பேரும் செல்வதற்கான ஆயத்தங்கள் - டிக்கட், மது வகையறாக்கள் – ஒவ்வொரு உருப்படிக்கும் ஒவ்வொரு விதமான சரக்கு வேண்டும் – காட்டுக்குள் செல்வதற்கான வாகன ஏற்பாடுகள், தங்குமிடம் என்று ஏராளமான விஷயங்கள் இருந்தன. டீக்கடையின் சோஃபாவின் மீது இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொண்டு, மேனேஜர் ஆறுமுகத்திடம் பேப்பர் பேனா வாங்கி ஏதோ இன்னொரு தேசத்தின் மீது போர் தொடுக்கப் போகும் ராணுவ ஜெனரலைப் போல் பயணத் திட்டங்களை சீரியஸாக எழுதிக் கொண்டிருந்தான் நிக்கி.
இந்த நிலையில், கார்குடிக்குக் கிளம்புகிற அன்று மதியம் கிருஷ்ணா பெருமாளுக்கு போன் செய்து “ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொண்டால் போதும் இல்லையா? ” என்று கேட்டதும் பெருமாள் ஒருக்கணம் ஆடிப் போனான்.
“ஏய் கிருஷ்ணா, நீ வரவில்லை என்று யாரும் உனக்குச் சொல்லவில்லையா? ”
“இல்லையே? ”
உடனே நரேனுக்கு போன் போட்டான் பெருமாள். “இதோ பார் நரேன்; கிருஷ்ணாவிடம் அவன் வராதது பற்றிச் சொல்லவே இல்லை போலிருகிறது... இந்த நிலையில் அவனை விட்டு விட்டுச் செல்வது என்பது சாத்தியமில்லை. ”
ஆனால் நரேன் சொன்னதைப் பார்த்தால் அழைத்துச் செல்வதும் சாத்தியமில்லை போல் தெரிந்தது. ஏனென்றால், கிருஷ்ணாவின் பயணச்சீட்டு ஏற்கனவே ரத்து செய்யப் பட்டிருந்தது. அது மட்டும் அல்லாமல் அவனுடைய தங்குமிடம் அது இது என்று கேயாஸ் தியரி மாதிரி எல்லாம் ரத்தாகியிருந்தன.
“சரி, அப்படியானால் நீயே அவனிடம் சொல்லி விடு நரேன் ” என்று சொல்லிவிட்டான் பெருமாள்.
ஆனால் மனம் சந்தோஷமாகவே இல்லை. ‘இது தவறு ’ என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தால் ஒருத்தன் கூட ஜோடியோடு வரவில்லை, பாலுவைத் தவிர.
பாலு மேலுக்கும் கீழுக்கும் குதித்துக் கொண்டிருந்தான். இப்படி என்று தெரிந்திருந்தால் நிக்கியும், கிருஷ்ணாவும் வந்திருப்பார்கள் அல்லவா?
” இப்படி ஒரு விபத்து நடக்கும் என்று யார் கண்டது? ” என்றான் கோபால கிருஷ்ணன், படு கேஷுவலாக. அதாவது, அவனுடைய தோழிக்கு ஏதோ விபத்து நேர்ந்து விட்டதாம். அவனைத் தொடர்ந்து அத்தனை பேரும் ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள். ஒருத்தன் “என்னுடைய தோழிக்கு ரெட் ஃப்ளாக் தொடங்கி விட்டது; அதனால்தான் அழைத்து வரவில்லை ” என்று கதை விட்டான். நரேன் மட்டும்தான் அவன் மனைவியோடு வந்திருந்தான்.
ஊட்டி சென்று அங்கிருந்து காரில் கார்குடி சென்று கொண்டிருக்கும் போது அந்த ஐந்து வாகனங்களின் – இரண்டு கேம்ரி, மூன்று ஸ்கார்ப்பியோ - பதிவு எண்களுமே ஒரே எண்ணாக இருந்ததைப் பார்த்து பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. நிக்கிக்கு தன் பிறந்த நாளின் எண்ணையே காரின் பதிவு எண்ணாக வாங்குவது ஒரு பழக்கம்.
பாலுவின் தோழி – பெயர் ப்ரியா என்று சொன்னாள் – அவள் இருக்கும் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை பெருமாள். ஒரு ஹலோ கூட சொல்லவில்லை. ஏனென்று தெரியவில்லை. அவள் மீது அவனுக்கு எந்த வித ஈர்ப்பும் ஏற்படவில்லை. தன்னுடைய காரில் கூட அவளை ஏற்றிக் கொள்ளவில்லை. நந்தினி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவளிடம் கேட்டால் “ஆத்துல திட்டுவா ” என்பாள்.
ம்...இந்த விஷயத்திற்காகத்தான் இந்தக் குட்டிக் கதையை என்னிடம் சொல்வதாகச் சொன்னான் பெருமாள். ஒரு பெண்ணின் மீதான ஈர்ப்பு அவனுக்கு இலக்கியத்தின் காரணமாகவே ஏற்படுவதாகச் சொன்னான்.
இதற்கு முந்தைய குட்டிக் கதையைப் படித்து விட்டு பெருமாள் மிகவும் விசனத்தில் இருந்தான். அதன் பொருட்டு விஷாலிடம் பெரிதாகச் சண்டை போட்டான் .
” அது எப்படி அந்த தாரிணி அப்படிக் கேட்கலாம், ‘சரீர இன்பத்திற்காக மட்டும் என்னுடன் பழகாதே ’ என்று. உனக்குத் தெரியுமா, கார்குடியில் அந்தப் பெண் ப்ரியா என்னுடைய அறையில் என்னுடைய படுக்கையில்தான் படுத்து இருந்தாள். ஆனால் அவள் மீது என்னுடைய சுண்டு விரல் கூடப் படவில்லை. சொன்னால் நம்புவாயா? ஏன்? எனக்கே ஒருக்கணம் ஆண்மையற்றவனாகப் போய் விட்டோமோ என்று சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இதைப் போய் கோபால கிருஷ்ணனிடமா சொல்லித் தொலைப்பேன். அவன் மற்ற எல்லோரிடமும் உடனே இதைச் சொல்லி விட்டுத்தான் மறு வேலை பார்த்தான். எனக்கு அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படவில்லை. வெங்கி கேட்டான் ‘ ஏன்டா பெருமாள், வெகுளியாக இருக்க வேண்டியதுதான்; அதற்காக இப்படியா? ’
இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. காதலில்தான் எனக்குக் காமம் வரும். என் எழுத்தை நேசிப்பவள் மீது மட்டுமே எனக்குக் காதல் வரும். இது ஒரு எளிதான விஷயம். இதைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது? ”
எல்லோரும் பெருமாளின் ஆண்மையின்மை பற்றியே கிசுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்குமே ப்ரியாவின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் அவள் என்னமோ பெருமாளை விட்டு நகரவே மாட்டேன் என்றாள்.
இதற்கிடையில் நடந்த இன்னொரு கூத்து பாலுவின் தோழி பூங்கொடி. பூங்கொடி பற்றிய விபரங்கள் ராஸ லீலாவில் வருகிறது. பூங்கொடி ஒரு பாலியல் தொழிலாளி. அவளைப் பெருமாளுக்கு மிகவும் பிடிக்கும். ராஸ லீலா கால கட்டத்தில் பாலு, பெருமாள், மற்றும் பூங்கொடியுமாக அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல. பூங்கொடி அப்போது கர்ப்பமாக இருந்தாள்.
” நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போது இப்படியெல்லாம் ஆட்டம் போடலாமா பூங்கொடி? ” என்று பலமுறை கேட்டிருக்கிறான் பெருமாள். அதனாலேயே அவள் அழைக்கும் போது பல முறை ‘வேலை இருக்கிறது ’ என்று சொல்லித் தவிர்த்தும் இருக்கிறான்.
ஆனால் அவளோடு குடிப்பது ஒரு சுவாரசியம். பெருமாளுக்கு புத்தகங்களைத் தவிர வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாது. வீட்டையும் பார்க் ஷெரட்டனையும் தவிர வேறு எங்குமே சென்றிராத அவனுக்கு அப்படித் தெரியாததில் ஒன்றும் ஆச்சரியும் இல்லைதானே? எனவே பூங்கொடியைப் பெருமாளுக்கு வாழ்க்கைப் பாடம் எடுத்த குரு என்று சொன்னாலும் அதில் தப்பில்லை.
அவளைப் பார்த்தே இரண்டரை ஆண்டுகள் ஆகியிருந்தன. பூங்கொடியின் மகளுக்கும் அதே வயது ஆகியிருந்தது. ஆனால் பார்ப்பதற்கு ஒரு வயதுக் குழந்தையைப் போல் நறுங்கிப் போயிருந்தது அந்தக் குழந்தை. செம அழகு. ஆனால் வாய் பேசவில்லை. மனநிலையும் சரியில்லை. மன வளர்ச்சி குன்றிய, வாய் பேசாத அந்தக் குழந்தையையும் தூக்கிக் கொண்டுதான் கார்குடி வந்திருந்தாள் பூங்கொடி.
(தொடரும்)
* * *
12.7.2008.
2.00 p.m. |