குட்டிக்கதைகள் நூற்றியெட்டு (43)

 

நிக்கியின் பிறந்த நாளை கார்குடியில் உள்ள காட்டு பங்களாவில் கொண்டாடலாம் என்று ஆலோசனை சொன்னான் பெருமாள். ‘ சரி போகலாம்; ஆனால் எல்லோரும் அவரவர் ஜோடியோடுதான் வர வேண்டும் ’ என்றான் கோபால கிருஷ்ணன். ‘ இந்த கோபால கிருஷ்ணன் இருந்தாலே பிரச்சினைதான் ’ என்று சலித்துக் கொண்டான் பெருமாள்.

கோபால கிருஷ்ணனுக்குத் தோழிகள் பலர் உண்டு. எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத வேலை. ஸ்போர்ட்ஸ்மேன் என்ற படியால் அலுவலகம் செல்ல வேண்டிய கவலையும் இல்லை. அதனால் காலையில் ப்ராக்டிஸ் முடித்து விட்டு மீதி நேரமெல்லாம் தோழிகளோடு கடலை – இல்லை, அது பழைய வார்த்தை – மொக்கை போட்டுக் கொண்டிருக்கலாம். பெருமாளுக்கு அப்படியா? பானுவை அழைத்துச் செல்லலாம் என்றால் அவளோடு தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது மொக்கை போட வேண்டும். இப்போதெல்லாம் பெண்களோடு பழக காசு கூடத் தேவையில்லை போலிருக்கிறது; நேரம்தான் வேண்டும்.

யோசனையைக் கேட்டவுடனேயே ஜகா வாங்கி விட்டான் நிக்கி. ‘ என் பிறந்த நாளை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள்; நான் வரவில்லை ’ என்று சொல்லிவிட்டான். பணம் இருந்து என்ன பிரயோஜனம்? பணம் வரும் போதே சில தொந்தரவுகளையும் ஜோடி சேர்த்துக் கொண்டு வந்து விடுகிறதே? அவனுடைய விரோதிகள் சிலர் அவனை ஏதாவது சிக்கலில் மாட்ட வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவன் தனியாக வந்தாலும், பெருமாள் அண்ட் கோ ஜோடியாக வருவதால் புகைப்படம் வெளியே போய் விடும். கூட வருபவர்கள் ஒன்றும் அவனுடைய விரோதிகள் அல்ல என்றாலும், எவனாவது ஒருவன் அஜாக்கிரதையாக இருந்தாலும் போதும்; புகைப்படம் அது சேரக் கூடாத இடத்தைச் சென்று சேர்ந்து விடும்.

” அப்படியானால் ஒரு ஐடியா; யாரும் கேமரா உள்ள மொபைலை எடுத்து வரக் கூடாது. எடுத்து வந்தால் அதை ஒரு பையில் போட்டு கட்டி வைத்து விட்டு, கிளம்பும் போது கொடுத்து விடலாம் ” என்றான் பெருமாள்.

” ஓ...அப்படியானால் நான் என் சட்டைப் பொத்தானிலேயே இன்விஸிபிள் கேமராவைப் பொருத்திக் கொண்டு வருவேனே? ” என்றான் கோபால கிருஷ்ணன்.

அதற்குப் பெருமாள் ” நாயை ஏன் அடிக்க வேண்டும்; நாய்ப் பீயை ஏன் அள்ள வேண்டும்? ” என்று கேட்டான். அதாவது, ‘ அப்படி ரிஸ்க் எடுத்து கோபால கிருஷ்ணனை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? ’ என்று அர்த்தம்.

கடைசியில் நிக்கி இல்லாமலேயே கிளம்பலாம் என்று முடிவாயிற்று. செலவு எல்லாம் நிக்கியினுடையது.

ஊட்டியிலிருந்து இன்னும் உள்ளே போய் மசினிக் குடியைத் தாண்டி ஆனைமலைக் காடுகளின் ஊடாகப் போனால் வரும் இடம் கார்குடி. புலி, கரடி, யானை, மான், காட்டெருமை, காட்டுப் பன்றி என்று நானாவிதமான வன விலங்குகளின் வாழ்விடம்.

பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே பெருமாளும், கிருஷ்ணாவும் கழற்றி விடப் பட்டார்கள். காரணம், இருவருக்கும் ஜோடி இல்லை. “ நான் வருகிறேன் பெருமாளுக்கு ஜோடியாக ” என்று ஆர்வமாக உள்ளே புகுந்தாள் பானு. “ அய்யய்யோ வேண்டாம் ” என்று அலறினான் பெருமாள்.

பானு பார்ப்பதற்கு நடிகை ஜெனிலியா மாதிரி இருப்பாள். ” அதுவுமல்லாமல் அத்தனை பேர் முன்னிலையில் உங்களுக்கு பிரியாணி ஊட்டி விட்டிருக்கிறாள். அப்புறம் என்ன? ” என்று கேட்டான் பாலு.

” உனக்கு ஒன்றும் தெரியாது பாலு; நீ பேசாமல் இரு. ”

“சரி, தெரிந்தவர் நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்டுக் கொள்கிறேன். ”

“ஒருநாள் பானு ‘ அவசரமாக உன்னைச் சந்திக்க வேண்டும்; ஒரு பிரச்சினை ’ என்றாள். சந்தித்தேன். என்ன சொன்னாள் தெரியுமா? அவள் வீட்டுக்கு அவளிடம் சொல்லாமலேயே திடீரென்று வந்து விட்டராம் அவளுடைய சித்தப்பா. அப்பா இல்லாத அவள் குடும்பத்துக்கு அவர்தான் எல்லாம். வீட்டுக்குள் நுழைந்தவருக்கு அவர் வாழ்நாளில் கண்டிராத அதிர்ச்சி. வீடு பூராவும் சிகரெட் துண்டுகள்... காலியான பிராந்தி விஸ்கி பியர் போத்தல்கள்... அவளுடைய பாய் ஃப்ரெண்டின் கிதார்... இவ்வளவும் போதாதென்று கொடியில் தொங்கிய ஆண்களின் ஜட்டிகள்... ‘ பெரும் சண்டையாகி விட்டது...இவரை யார் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வரச் சொன்னது? ’ என்றாள் பானு. எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்லை... ஒன்றும் பேசாமல் அவள் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று ஞாபகம் வந்தவளாய் ‘அடடா... அந்த காண்டம் பாக்கெட்டுகளை எடுத்துப் போடாமல் வந்து விட்டேனே...நான்கைந்து பாக்கெட்டுகள் கிடந்ததே... ’ என்று சீரியஸாகவே வருத்தப் பட்டாள். ஆனால் பாலு, எனக்கு இதெல்லாம் கூடப் பிரச்சினையில்லை... ”

“பிறகு? ”

***

11.7.2008.

12.15 p.m.