| குட்டிக் கதைகள் என்ற பெயரை மாற்றி விடு என்றான் வி .
ஏன் , ஏற்கனவேதான் ஒருத்தர் ஜட்டிக் கதைகள் என்று எழுதிக் கொண்டிருக்கிறாரே , இன்னும் எப்படி மாற்றுவது என்று கேட்டான் எக்ஸ் .
கிண்டல் பண்ணாதே , நானே ரொம்பப் பிரச்சினையில் இருக்கிறேன் . பேசாமல் குட்டிக் கதைகள் என்பதை புரோக்கர் கதைகள் என்று மாற்றி விடு .
ஏன் ? சரி , அதையெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாமே ; நீ வேறு அமெரிக்காவில் இருந்து கொண்டு போன் செலவு அநியாயமாக ஆகும் .
இல்லை இல்லை , ஏற்கனவே அவளோடு இரண்டு மணி நேரம் இங்கிருந்து பேசியதில் கொண்டு வந்த காசில் பாதி காலி. உன்னை உன்னுடைய நண்பர்கள் எல்லோரும் புரோக்கர் மாதிரி பயன்படுத்துவதைப் போல் என்னையும் என்னுடைய நண்பர்களும் , நண்பிகளும் , காதலிகளும் புரோக்கர் மாதிரி பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.
ஏன் , என்ன ஆயிற்று ?
நேற்று ஸீ என்னை அவளுக்கு போன் பண்ணச் சொன்னாள். பண்ணினேன்.

( சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நாகூர் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது)
( என்னடா வி , உன்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே சரியான தில்லாலங்கடியா இருக்கானுங்க ? காலைல அந்த பி போன் பண்ணினான். எப்படிப் பண்ணினான் தெரியுமா ? அவன் ஆஃபீஸ் நம்பர்லேர்ந்து பண்ணினான். அவன் ஆஃபீஸ் நம்பர் எனக்குத் தெரியாது. அதனால் யார்னு தெரியாமலே எடுத்தேன். பார்த்தா ரீட்டா பாஸ்கர் இருக்காங்களான்னு பி குரல் கேட்குது. கேட்ட உடனே அது பி தான்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அவன்கிட்ட என் நம்பர் இருக்கு. அவனோட மொபைல் நம்பர் என் கிட்ட இருக்கு. இருந்தும் திருட்டுத்தனமா ஆஃபீஸ் போன்லேர்ந்து பண்ணி ரீட்டா பாஸ்கர் இருக்காங்களான்னு பீலா வுடுறான். நான் உடனே என்ன பி தானேன்னு கேட்டதும் சுதாரிச்சுக்கிட்டு ஓ நீங்களான்னு சமாளிக்கிறான். பிறகு , நான் நீடாமங்கலத்துக்கு ஒரு பர்ஸனல் விஷயமா வந்திருக்கேன் , உங்களைப் பார்க்கலாமான்னு கேக்குறான். அதெல்லாம் முடியாதுன்னுட்டேன்.
அடப்பாவி , கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே எனக்கு போன் பண்ணி , அடுத்த வாரம் நான் ஒரு வேலையா நீடாமங்கலம் போறேன் , நீங்களும் அதுக்குள்ள யூவெஸ்லேர்ந்து திரும்பிடுவீங்க , ரெண்டு பேரும் போய் ஸீயைப் பார்த்துட்டு வரலாமான்னு கேட்டான். கார்லேயே போய்டலாம் , நீடாமங்கலத்துல எங்க பெரியப்பா வீடு இருக்கு , பெரிய பங்களா , அங்கேயே தங்கிக்கலாம்னு என்னென்னவோ கதை அளந்தானே ? நான் கூட ஒரு நிமிஷம் போய்ட்டு வந்துடலாமான்னு நினைச்சுட்டேன்.
கதையக் கேளு. நான் முடியாதுன்னு சொன்னதும் , நான் பேசினதை அண்ணன்ட்ட சொல்லிடாதீங்கன்னு சொல்லி போனை வச்சுட்டான். சரி அது போகட்டும்னு பார்த்தா அப்புறம் அந்த ஒய் போன் பண்ணி நான் தஞ்சாவூருக்கு வந்துருக்கேன் , இங்கேர்ந்து நீடாமங்கலம் பக்கம்தானே , பார்க்க வரலாமான்னு கேக்குறான். நான் , எங்க வீட்ல திட்டுவாங்க , அது முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா , பார்க்கலாம் பார்க்கலாம்னு ரொம்ப கம்பெல் பண்றா மாதிரி பேசினான். ரொம்பவே பயந்துட்டேன்.
ஏன்டி , அறிவு கெட்ட முண்டம் , அவனை நான் உனக்கு அறிமுகம் செஞ்சு வைக்கும்போதே என்ன சொன்னேன் ? இவன் ஒரு உலக மகா ஸெட்யூஸர் , இவன்ட்ட மட்டும் உன் போன் நம்பரைக் கொடுத்துடாதே , அப்புறம் நீ என்னை விட்டுட்டு அவன் பக்கம் சாஞ்சுடுவேன்னு அவனையும் வச்சுக்கிட்டுத்தானடி சொன்னேன் ? நீ என்ன பண்ணினே ? நான் சொல்லி வாய மூடுறதுக்குள்ளயே அவனோட போன் நம்பரைக் கேட்டு மிஸ்டு காலும் கொடுத்திட்டே...
அய்யய்யோ , நீ வெளையாட்டுக்கு சொல்றேன்ல நினைச்சு அப்படிப் பண்ணுனேன் ?
என்னத்த மயிரு வெளையாட்டு ? வெளையாட்டுன்னு நினைச்சீல்ல ? இப்போ படு... ம்... அப்புறம் என்ன நடந்துச்சு ?
ஸாரிடா... நான் எந்தத் தப்பும் பண்ணினதா எனக்குத் தோணல...
என்னது , தோணலையா ? நீதானடீ சொன்னே , நேத்து நீ அவனுக்கு போன் பண்ணினேன்னு ? ஏன் பண்ணினே ? அதனாலதான் அவன் இன்னிக்கு வந்து உன்னைப் பார்க்குறேங்கிறான்.
இப்படியாகும்னு எனக்குத் தெரியுமா ? நீ வேற என்னை விட்டுட்டு யூவெஸ் போய்ட்டே... இங்கே காலேஜும் இன்னும் திறக்கலே... எனக்கு போர் அடிக்காதா ? நீதானே சொன்னே , ஒய்தான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு ? அதனாலதான் அவனுக்கு பண்ணினேன். அவன் மேல எனக்குத் தனி மதிப்பு வந்ததுக்குக் காரணமே நீ அவனைப் பத்தி அப்படிச் சொன்னதுனாலதான். இப்போ நான் என்ன பண்ணணும்ங்கிறே ? இனிமே நான் அவனை கால் பண்ணல போ. எனக்கு நீதான் முக்கியம் , எல்லாரையும் விட.)
அவள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு செம கடுப்பு. ஏன்னா , நானே இன்னம் அவளை சரியா பார்க்கல. ஏதோ ரயில்வே ஸ்டேஷன்ல வழி அனுப்ப வந்தவங்கள அவசர அவசரமா பார்த்த மாதிரிதான் இருக்கு. இன்னும் அவ முகம் கூட எனக்கு சரியா ஞாபகம் வர மாட்டேங்குது. இந்த லட்சணத்துல இவன் எப்படி அவளைப் போய்ப் பார்க்கலாம் ? அதுவும் அவ வர வேணாம்னு சொல்லியும் வற்புறுத்துனானாம்ல ? என்னாங்கடா இது , வாழ்க்கை பூராவுமாடா ஒருத்தனை புரோக்கரா பயன்படுத்துவானுங்க ?
சரி , அப்போ நீ என்ன மயிருக்கு எல்லா மயிராண்டிங்களையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி விடுறே ?
ம்ம்ம்... எல்லாம் என்னோட தாழ்வு மனப்பான்மைதான்னு நினைக்கிறேன். அதுகூட இப்போதான் நீ கேட்ட பிறகு அப்படித் தோணுது. இல்லேன்னா ஒருவேளை இப்படியும் இருக்கலாம். என்னோட exhibinitionsim. சீனி கம்ல 64 - 36 தானே ? இப்போ பாருங்க 55 - 17 ன்னு என் நண்பர்கள் மத்தியில காமிச்சுக்க நினைச்சு இருக்கலாம். எப்படியோ ரொம்ப அப்செட் ஆகி ஒய்க்கு ஒரு எஸ்ஸெம்மெஸ் பண்ணினேன். இந்த மாதிரி ஸீ வந்து என்னோட லவ்வர் ; எங்க லவ் மேட்டர்ல நீ ஏன் குறுக்கே வர்றே ; நான் இதனால ரொம்ப பதற்றமா இருக்கேன் ; அவ என்னடான்னா உன்னையும் பி-யையும் கம்பேர் பண்ணி பேசுறா ; ஏன்னா , நீ கேட்ட மாதிரியே அவனும் கேட்டு இருக்கான் ; நான் நீடாமங்கலத்துல இருக்கேன் , உன்னைப் பார்க்க வர்லாமான்னு...ஆமா , என்னதான் நடந்துக் கிட்டுருக்கு ? இப்படின்னு கேட்டு எஸ்ஸெம்மெஸ் குடுத்தேன் ஒய்க்கு. உடனே அவன் நான் எதிர்பார்த்த மாதிரியே பதில் அனுப்பினான். என்னடா ஒரேயடியா குதிக்கிறே ? எனக்கு பி பத்தியெல்லாம் எதுவும் தெரியாது ; நான் இப்போ உன் ஆளை என்னா பண்ணிட்டேன் ? அவதான் என்னைக் கூப்பிட்டுக் கிட்டே இருந்தா ; நானும் விளையாட்டா ஏதோ பேசினேன் ; இதில என்ன தப்பு ? இதுதான் ஒய் எனக்கு அனுப்புன எஸ்ஸெம்மெஸ்.
( இதோ பார் , எனக்கும் பி பத்தி எதுவும் தெரியாது. அவன் ஒரு கற்காலத்து மனிதன். அவனோட லவ்வரை அடுத்தவனோட பகிர்ந்துக்குவான். அதே மாதிரி அடுத்தவனோட லவ்வரையும் இவன் பகிர்ந்துக்க கேட்பான். அதனால எனக்கு அவனைப் பத்தி எந்தக் கவலையும் இல்ல. அவனை எப்படி ஹேன்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியும். ஆனா நீ எப்படி அவளை அப்படிக் கேக்கலாம் ?)
ஒய்யிடமிருந்து எனக்கு ஒரு வார்த்தையில் பதில் வந்தது , இனிமேல் அவள் போன் செய்தால் எடுக்க மாட்டேன்னு. இவ்வளவு பிரச்சினையும் உன்னாலதானடி வந்ததுன்னு சொல்லி ஒய் சொன்னதை அவளிடம் சொன்னேன். அவள் , ஒய்க்கு தான் ஒரே ஒரு தடவை போன் போட்டதைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் , ஒய் சொல்வது பச்சைப் பொய் என்றும் , ஒய்தான் அவளை வந்து சந்திக்கிறேன் என்று பலமுறை சொன்னதாகவும் சொன்னாள்.
( இதோ பார் , இந்தப் பொய் உண்மைங்கிற விஷயமெல்லாம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். பி கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன் , இனிமேற்கொண்டு அவ கிட்ட பேசினே , உன்னைக் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போய்டுவேன்ட்டு. அவனும் பண்ண மாட்டான். ஆனா ஒய் ? அவன் என்னோட · ப்ரெண்டுடீ... இப்படி உன்னால எங்க ஃப்ரெண்ட்ஷிப்லெ பிரச்சினை உண்டாயிடுச்சே ? அவன் மட்டும் உன்னை வந்து பார்த்து இருந்தான்னு வச்சுக்க... அதோட உன்னைத் தொலச்சுத் தலை முழுகி இருப்பேன். அவ்ளோதான்.
அப்படி மட்டும் நீ பண்ணியிருந்தேன்னு வச்சுக்க , என் லைஃப்ல இனிமே காதலுக்கே இடமில்லாம போயிருக்கும். அவ்ளோதான். பேசாம எங்க வீட்ல காமிக்கிற சேங்கான் எவனையாவது கட்டிக்கிட்டு குழந்தையப் பெத்துத் தள்ளிக்கிட்டு இருந்திருப்பேன்.
இதோ பார் , செல்லம்... நீ ஒன்னும் எனக்கு அடிமை இல்லை... நீ எவன் கிட்ட வேணும்னாலும் பேசிக்க , பழகிக்க... ஆனா அது எனக்குத் தெரியாம பாத்துக்க.
அடப்பாவி... நீ இப்படி சொல்றதுதான்டா எனக்கு வலிக்குது... என் மேல உனக்குக் கொஞ்சம் கூட பொஸஸிவ்னஸே இல்லியாடா வி ?)
எப்படி இருக்கும் எக்ஸ் ? நீயே சொல்லு... ஏற்கனவே அவளுக்கு ரெண்டு லவ்வர்ஸ்... ஒருத்தன் நிஜ லவ்வர். அவன் பேர் ஜீன்னு வச்சுக்குவோம். இன்னோருத்தன் இவளோட சொந்தக்காரன். அவன் பேர் ஹெச். இந்த ஹெச் இருக்கானே , இவன் ஒரு பணக்காரன்... லண்டன்ல இகனாமிக்ஸ் படிக்கிறான். அவன் இவளை ஒரு வீட்டு ஃபங்ஷன்ல பார்த்துட்டு இவ மேல லவ்வாயிட்டான். நேரா இவ படிக்கிற ஸ்கூலுக்கு வந்து
என்னது ஸ்கூலா ?
இது என்னடா இது , கதையப் பூரா கேட்டுட்டு இப்போ வந்து ஸ்கூலான்னு கேக்குற ? இப்போதானே அவ காலேஜ்லயே என்ட்டர் ஆவுறா ? நீ கதையைக் கேளு...இவ படிக்கிற ஸ்கூலுக்கு வந்து இவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணியிருக்கான். இவ ஏற்கனவே தனக்கு ஒரு லவ்வர் இருக்கிறதை சொல்லியிருக்கா. அதுக்கும் அவன் அசரல. அடமா இருந்திருக்கான்.
( நான் கொஞ்சம் பார்க்கிறதுக்கு கிராமத்துப் பொண்ணா குடும்பப் பாங்கா இருக்கேனா , அதைப் பார்த்துத்தான் மயங்கிட்டான் பையன். அவனுக்கு நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் ; இந்தப் பக்கத்துக் கிராமங்கள்ள என்னை மாதிரி உனக்கு நூறு பொண்ணுங்க கிடைப்பாங்கன்னு. ம்ஹூம். அவன் எதையும் கேட்கிற மாதிரி இல்லை. சரின்னு நானும் இணங்கிட்டேன்.)
ராத்திரி பூரா மொக்க போடுவானாம் போன்ல... லண்டன்ல படிக்கிற பையன்ங்கிறதுனால வீட்லயும் அவனையே அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. ஆக , காதலுக்கு ஒரு ஜி. கல்யாணத்துக்கு ஒரு ஹெச்.
( நான் ஜீயைக் கல்யாணம் செய்து கொள்வதென்பது மட்டும் சாத்தியமே இல்லை வி. ஜீயோடு வாழ்வதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். ஆனால் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவன் வேறு ஜாதி ; நான் வேறு ஜாதி. அவனோடு கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே நான்கைந்து கொலைதான் விழும். அந்த அளவுக்கு எங்கள் ஜாதிக்கும் அவன் ஜாதிக்கும் பகை. ஆனா , அந்த ஹெச்சோட காதல் என்னாச்சுன்னா , பையன் ராத்திரி பூரா மொக்க போட்டு மொக்க போட்டு , லீவு முடிஞ்சு லண்டனுக்குத் திரும்பல. இப்போ அதுனால அவனுக்கு ஒரு வருஷம் வேஸ்ட். அடுத்த வருஷம்தான் போக முடியும். அதனால் பையன் இப்போ ரொம்ப ஆடிப் போய்ட்டான். முன்ன மாதிரி பெசறது இல்ல. ஒருநாள் நான் சீரியஸாவே கேட்டேன் ' டேய் , நீ என்னை லவ் பண்றியா இல்லியா ' ன்னு. என்ன பதில் சொன்னான் தெரியுமா ? கதையில கூட அப்படி வராது. அப்படியா , அப்படி என்ன சொன்னான் ?
ஒன்னுமே பதில் சொல்லாம யோசிச்சுக்கிட்டு இருக்கான். எனக்குச் சப்புன்னு போயிடுச்சு. இனிமேல் நீ ஆமான்னு சொல்றதுக்கும் இல்லேன்னு சொல்றதுக்கும் ஒரே அர்த்தம்தான்டான்னு சொல்லி போனை கட் பண்ணிட்டேன்...என்ன சொல்றே வி ?
ஆமாண்டி செல்லம் , சந்தேகமே இல்லை.
பாரேன் , நீயெல்லாம் எவ்ளோ பேஷனேட்டா லவ் பண்றே , ஆனா அந்தப் பய என்னடான்னா யோசிக்கிறான். இப்போல்லாம் தம்பி எப்பவாச்சும்தான் பேசுறான். அது கூட ஒண்ணு ரெண்டு வார்த்தைதான். இந்தச் சமயத்துலதான் நீ வந்தே...ஆனா அவன் இப்படி வந்துட்டுப் போனதுலயும் ஒரு லாபம் இருக்கு , தெரியுமா ?
என்ன , பொருளாதாரம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டியா ?
அடச்சே இடியட்... நீ இப்போ மொக்க போடுறீல்ல , அதெல்லாம் எங்க வீட்ல ஹெச்சுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க.)

இதில் இன்னோர் விசேஷம் என்ன தெரியுமா எக்ஸ் ? அவளோட லவ்வர் இருக்கிறானே ஜீ , அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் எஸ். நம்முடைய ஸீயை விட வயதில் ரொம்ப மூத்தவள் ; வேலையில் இருக்கிறாள். ஆனால் , எல்லாம் ஒரே ஊர். ஜீயும் எஸ்ஸும் வீட்டின் உள்ளே ' ஒன்றாக ' இருக்கும் போது யாரும் வந்து விடாமல் வீட்டு வாசலில் காவல் காத்துக் கொண்டிருப்பாளாம் ஸீ.
( அவனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன்டா வி...இப்பவும்தான்...
ஓ...
என்னடா , ஒரு மாதிரியா ஓங்கிறே ? ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ...எல்லாரையும் விட எனக்கு நீதான் முக்கியம். புரியுதா ?
புரியுது சொல்லு.
நீயே சொல்லு...இந்த உலகத்துலெயே எந்தப் பொண்ணாவது தன்னோட லவ்வரை இன்னோரு பொண்ணோட படுத்துக்கச் சொல்லிட்டு காவல் காத்துக்கிட்டு இருப்பாளா ? அவளுக்குமே தெரியும் , எங்க ரெண்டு பேருக்கும் லவ் இருக்குன்னு. அப்படிப் பட்ட என்னைப் பார்த்து நீ எனக்காக என்ன பண்ணிருக்கேன்னு கேட்டுட்டான் ஜீ...ம்...தட்ஸ் லைஃப்...உன் கிட்ட எனக்குப் பிடிச்சது என்னன்னா நீ என் மேல கோபப்படுறதே இல்ல...எப்பவுமே இப்படியே இருடா செல்லம்...)
இந்தக் கதையில இதுவரைக்கும் சொல்லாத கேரக்டர்ஸ் நிறைய இருக்கு எக்ஸ்...அதில் முக்கியமா எஸ்ஸோட இன்னோரு லவ்வர். அவன் பேர் தெரியல...நாம் இதுவரைக்கும் முக்கோணக்காதல் பற்றித்தானே கேள்விப் பட்டிருக்கோம்...இது பலகோணக் காதல்...அதனாலதான் நம்ம ஒய் தானும் ஒரு கோணமா உள்ள பூந்துடலாம்னு நினைச்சுட்டானோ என்னமோ...
( அது சரி...அது என்ன , ஒய் என்ன வந்து பார்த்திருந்தா என்ன கட் பண்ணிருப்பேன்னு சொல்றே ? ஏன் , ஒய்யைக் கட் பண்ண வேண்டியதுதானே ?
ம்ஹூம் , சான்ஸே இல்லை.
ஏன் ?
எனக்கு எல்லா மனித உறவுகளையும் விட வேற ஒண்ணு முக்கியம். அதுதான் அவனையும் என்னையும் பிணைக்கிறது.)
டேய் நிறுத்துடா விஷால்...ஏ பி சி டி எக்ஸ் ஒய் ஸீன்னு ரீடர்ஸை ஏமாத்தினது போதும். எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம் இருக்கு. நீ இப்போ சொல்ற ஸீ பேர் சாதனாதானே ? அவள்தானே குட்டிக் கதை- 17 இல் வர்றவ ? அவள் வயசு பத்தொம்போதுன்ல அப்போ சொன்னே ? இப்போ ஸீ வயசு பதினேழுங்கிறியடா... இடிக்குதே ?
இடியட்...எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தேன் ? ஆட்ட விதிகளை ஒரே வரியில் மீறி விட்டாயே ? ஒரு ஆட்டம் ஆடினோம்னா ஆட்டம் முடியுமட்டும் விதிகளை மீறக் கூடாது... Jumanjee படம் பார்த்து இருக்கீல்ல ? சரி தொலை...நீதான் ரைட்டர் என்பதால் நீ என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஓகே...உன் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறேன்...அந்த சாதனா வேறு , இந்த ஸீ வேறு... சாதனா பற்றிய கதை பெரிய கதை... அதை எப்படியும் நீ இந்த 108 கதையையும் முடிப்பதற்குள் சொல்லி விடுகிறேன்...
***
8.7.2008.
11.30 a.m.
|