|
பதில்: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாண்டிச்சேரியில் பணி புரிந்து கொண்டிருந்த போது அங்கே நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் போபால் விஷ வாயு விபத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் பலியானதை வைத்து எழுதப் பட்டிருந்த “ஓ மத்தியப் பிரதேசமே! இன்று மரணப் பிரதேசமாகி விட்டாய் … ” என்ற கவிதையை கடுமையாகச் சாடிப் பேசினேன்.
அதன் பிறகு சில தினங்கள் கழிந்து நேரு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது என்னை ஒரு இளைஞர் பெயர் சொல்லி அழைத்து நட்புடன் கை குலுக்கினார். யார் என்று கேட்டதற்கு மேலே குறிப்பிட்ட இலக்கியக் கூட்டத்தை ஞாபகப் படுத்தி அதில் நீங்கள் திட்டினீர்களே, அந்த மத்தியப் பிரதேச கவிதையை எழுதியவன் நான் தான், பெயர் ரவிக்குமார் என்றார். அதன் பிறகு நானும் ரவிக்குமாரும் கிட்டத்தட்ட சகோதரர்களைப் போல் நெருக்கமான நண்பர்களானோம்.
சொல்லப் போனால் அவர் அளவுக்கு நான் இது வரை யாரிடமும் நெருங்கிப் பழகியதில்லை. அப்போது அவர் ஸிண்டிகேட் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தார். நான் அப்போது வசித்து வந்த தட்டாஞ்சாவடி சுப்பையா நகரிலிருந்து அவரைப் பார்க்க காலை பதினொன்றரை மணி அளவில் போய்ச் சேருவேன். நான் வருவேன் என்று எதிர்பார்த்து கேஷில் அமர்ந்திருப்பார் ரவி. பிறகு கீழே சென்று ஒரு டீ குடிப்போம்.
மதிய உணவும் ஒன்றாகவே உண்போம். அப்போதெல்லாம் அந்த ரொமெய்ந் ரோலந் லைப்ரரிக்கு வாருங்கள் என்று கிட்டத்தட்ட அடிக்காத குறையாக அவரை தினமும் அழைப்பேன். வரவே மாட்டார். அப்போது அவர் ஒரு தீவிரமான களச் செயலாளியாக இருந்தார். பின்னர், என்ன மந்திர மாயம் நடந்ததோ தெரியவில்லை; பின் நவீனத்துவம் சார்ந்த தத்துவம், உலக இலக்கியம் என்று புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.
அப்போதே அவரிடம் சொல்லுவேன், பிற்காலத்தில் நீங்கள் ஒரு எம்.எல்.ஏவாகவோ மந்திரியாகவோ வருவீர்கள் என்று. இப்போது ரவிக்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் அவருடைய கன்னிப் பேச்சு எப்படி இருந்தது தெரியுமா?
“முத்தமிழ் நாயகனே! இத்தரணி போற்றும் வித்தகனே! ”
இப்படி ஆவார் என்று நான் கண்டேனா? எனவே, கனிமொழி வந்தால் நல்லது. ஆனால் அவர் எப்படி இருப்பார் என்று என்னால் ஆரூடம் கூற முடியாது.
சென்ற கேள்வி பதிலில்தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் அசோகமித்திரன் என்று எழுதினேன். ஆனால் அப்போது அவருக்குத் தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு போட்டியாளர் இருப்பதை மறந்து போனேன்.
ஆமாம், படித்தேன். திரு. கருணாநிதியின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு நோபல் கமிட்டிக்கு அனுப்பப் பட இருப்பதாக ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் அசோகமித்திரன் இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டியதுதான். ஏனென்றால், கருணாநிதிக்குப் பிறகு ஆற்காடு வீராச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம் என்று கொடுத்து விட்டு அப்புறம் ஜெயலலிதாவுக்கும் கொடுத்து விட்டு அதற்கப்புறம்தான் அசோகமித்திரன் பக்கம் வருவார்கள் நோபல் கமிட்டியினர்.
நோபல் பரிசு என்பது இங்கே கொடுக்கப் படும் கலைமாமணி விருது என்று நினைத்து விட்டார் போலும் அந்தப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பாவம்.
***
14.7.2008.
12.10 p.m.
|