கேள்வி பதில்

 


 

என் வாழ்வில் வாராது வந்த மாமணி அவந்திகாவுடன்.  1997-இல் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த திருமணத்தின் போது.  காலஞ்சென்ற எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் ஆசி கூறுகிறார்.  என் திருமணத்துக்கு வந்திருந்த ஒரே எழுத்தாளரும் அவர்தான்.  மிகவும் பதற்றமான சூழலில் நடந்த அத்திருமணத்தை முன்னின்று நடத்திக் கொடுத்த நண்பர் தினமலர் ரமேஷ்.

கேத்தி ஆக்கரும் கருணாநிதியும்
=========================

ஹாய் சாரு ,

மீண்டும் விக்னேஷ்.
 
ஆரம்பத்தில் நான் உங்களுக்கு மின்னஞ்சல் கூட அனுப்பக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் உங்களிடம் கேட்கவேண்டும் என்று என்னிடம் வண்டி வண்டியாகக் கேள்விகள் இருக்கின்றன. அதனால்தான் மின்னஞ்ச லில் உங்களைச் சந்திக்க ஆசைப்பட்டேன். உங்களுடைய எழுத்துதான் எனக்குக் கிடைத்த பெரிய பரிசு. உங்களை நான் உங்கள் எழுத்து மூலமாகவே சந்திக்க ஆசைப்படுகிறேன். கடவுளிடம் பக்தன் பேசிக்கொண்டா இருக்கிறான் ?
 
உங்களுடைய எழுத்தை நான் சிறந்த நண்பனாகவும் எண்ணுகிறேன். எவை சிறந்த படங்கள் , சிறந்த புத்தகங்கள் , சிறந்த பாடல்கள் என்று நீங்கள் சொல்லிய பிறகுதான் தெரிந்தது. என் கதவுக்கு அப்பால் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை அடிக்கடி உணர வைக்கிறீர்கள்.  
 
வசீகர மான குரலும் ஞானமும் உள்ள நீங்கள் கல்லூரிகளுக்குச் சென்று பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம். எந்தக் கல்லூரி முதல்வர் முந்திக்கொள்ளப் போகிறார் என்று.
 
கனிமொழி மீது அதிக நம்பிக்கை வைக்கிறீர்களோ என்று எண்ணுகிறேன். அடுத்த முதல்வராக கனிமொழியை முன்மொழிய வேண்டும் என்கிற உங்களுடைய உயிர்மை கட்டுரையைச் சொல்கிறேன். தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை அவர் கட்டாயம் நிரூபிக்கப்போகிறார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. காக்கைக் கூட்டிலிருந்து குயிலை எதிர்பார்க்க முடியாது.  
 
நீங்கள் சொன்னபிறகு நானும் இனி டிவியை டைவர்ஸ் செய்துவிடலாமா என்று எண்ணுகிறேன். யோசித்துப் பார்த்தால் அந்தச் சமயத்தில் ஆயிரம் உருப்படியான காரியங்கள் செய்யலாம். என் வீட்டில் எல்லோரும் ராதிகா நாடகங்களை விழுந்தடித்துப் பார்ப்பதைப் பார்த்து எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது. இவர்களை எப்படி என் உலகத்துக்கு அழைத்து வருவது என்று தெரியவில்லை. இப்படி நம் சமூகம் ரசனையின்றி இருப்பது ஏன் ? யார் செய்த தவறு இது ? அறிவை மேம்படுத்திக் கொள்ளாத மக்களா அல்லது குனியக் குனியக் குட்டும் ராதிகா மாதிரியான சீரியல் தயாரிப்பாளர்களா ?
 
மலையாளத்தில் எப்படி எழுத ஆரம்பித்தீர்கள்? எனக்கு இது ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களுடைய கோணல் பக்கங்களை சுடச்சுட மலையாளத்திலும் தருகிறீர்களா?
 
தமிழ் சினிமா பழைய நடிகர்கள் பற்றி புத்தகம் எழுதுவதாகச் சொன்னீர்களே? வேலை நடக்கிறதா? அல்லது உயிர்மையில் வந்த கட்டுரையோடு அவை முற்றுப் பெறுகின்றனவா?
 
நீங்கள் கமல் படத்தைப் பாராட்டினால் உடனே அவர் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறார். தசாவதாரத்துக்கு கமலிடமிருந்து எதிர்வினை ஏதும் வந்ததா?
 
உளியின் ஓசை பார்த்தீர்களா? :-) சுஜாதா இறந்தபிறகு கலைஞர் வசனங்களுக்கு ஒரு மவுசு வந்துள்ளதை கவனித்தீரா?
 
அப்புறம் கலைஞருக்கு நோபல் பரிசு கிடைக்க ஒரு குழு அமைக்கப்படுள்ளது என்கிற செய்தியைப் பார்த்தீர்கள்தானே. கேத்தி ஆக்கருக்கு சமமாக கலைஞரும் நோபல் வாங்குவாரா? ( இந்தச் செய்தியைப் பார்த்தபோது ஜீன்ஸ் படத்தை ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைத்தது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது).

தொடரும்...............