கேள்வி பதில் (தொடர்ச்சி)

 

சரி, அரசியல் பற்றிய கேள்விக்கு சீரியஸாக பதில் சொல்லி விடுகிறேன். இன்றைய நிலையில் நான் சேரக் கூடிய கட்சி மாயாவதியின் பி.எஸ்.பி. ஆகத்தான் இருக்கும். அக்கட்சியிலிருந்து எனக்கு அழைப்பும் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். காரணம், இப்போது நான் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைக்கிறேன், எழுத்து படிப்பு என்று. அரசியலில் சேர்ந்தால் இவ்வளவு நேரத்தையும் நான் அரசியலுக்காக ஒதுக்க வேண்டும். அப்படியே ஒதுக்கினாலும் அதிக பட்சம் ஒரு மத்திய மந்திரி ஆகலாம். என்ன பயன்? தேவ கௌடா மாதிரியான ஆட்கள் பிரதம மந்திரியாகவும், பிரதிபா பாட்டில் மாதிரியான நாரீமணிகள் ஜனாதிபதியாகவும் ஆக முடிகிற தேசம் இது! இப்பேர்ப்பட்ட தேசத்தில் யார் எந்தப் பதவியில் இருந்தாலும் எதுவும் செய்து விட முடியாது. உதாரணம்: அப்துல் கலாம்.

இது தவிர, அரசியலில் நுழைந்தால் இலக்கியத்தைச் சுத்தமாக மறந்து விட வேண்டும். தேவையா? மேலும், புத்தனும், இயேசுவும், நபிகள் நாயகமும், இன்னும் எண்ணற்ற ஞானிகளும், மகான்களும் திருத்த முடியாத இந்த மனிதக் கூட்டத்தை இன்னும் யாரால் திருத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?

(பத்தாண்டுகளுக்கு முன்பு ஸீரோ டிகிரி வெளியீட்டின் போது)

12. நான் தெருவோரக் கடைகளில் சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. காரணம், அங்கே பயன்படுத்தப்படும் எண்ணெய் மனித உபயோகத்துக்கு லாயக்கற்றது என்று சொல்கிறார்கள். எண்ணெயை மாற்றாமல் தொடர்ந்து அதையே பயன்படுத்துவதால் அப்படி ஆகிவிடுகிறது. மேலும், என் உணவுக்கு ஆலிவ் எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறாள் அவந்திகா.

இருந்தாலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது ஆசையாக இருக்கிறது. எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு ஜனனியைப் பார்க்கச் செல்லும் போது அந்தக் கடையில் ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

மற்றபடி கற்பகாம்பாள் மெஸ் எனக்கு மிகவும் பிடித்த இடம். மாதம் ஒரு தடவை அங்கே சென்று கீரை வடை, அடை எல்லாம் சாப்பிட்டு வருவேன். கவனியுங்கள், மாதம் ஒரு தடவைதான். ஏனென்றால், நம்முடைய தென்னிந்திய உணவு – குறிப்பாக, பிராமண உணவு அத்தனையும் கொழுப்பை அதிக அளவில் சேர்த்து இருதயத்தில் பிரச்சினை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

நாரத கான சபாவுக்கு எதிரில் உள்ள சந்தில் சிவசாயி மெஸ் என்று ஒரு மெஸ் உள்ளது. இங்கே அட்டகாசமான அய்யங்கார் தளிகை கிடைக்கும். விலை 32 ரூபாய்தான். (இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் நாராயண். இவரைப் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோணல் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.) இந்த மெஸ்ஸை நடத்துபவர்கள் இதை ஒரு உயர்ந்த சேவையாகக் கருதியே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு அருமையாக இருந்தது அந்தச் சாப்பாடு.

கரி அடுப்பிலிருந்து ஆரம்பித்து மூன்று தலைமுறையாக நடந்து வரும் ராயர் கஃபே மைலாப்பூர் அருண்டேல் தெருவில் இருக்கிறது. ராயர் கஃபே பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுத வேண்டும். அவ்வளவு பிரபலமான, தனித்தன்மை கொண்ட மெஸ்.

ஸாம்கோ ஓட்டல் மொகல் பிரியாணிக்கு நான் அடிமை. அது மட்டும் அல்ல; ராயப்பேட்டை பைலட் தியேட்டர் சிக்னலுக்கு அருகில் உள்ள சஃபாரி ஓட்டல் மூளை பிரியாணியும், மீன் பிரியாணியும் அருமை.

ஆனால், சென்னையில் ஒரு இடம் உள்ளது. இங்கே கிடைக்கும் சைவ அசைவ உணவுக்கு ஈடாக இந்த ஊரில் வேறு எந்த இடத்திலும் நான் சாப்பிட்டது இல்லை. அது பார்க் ஷெரட்டனில் உள்ள தக்ஷிண் உணவகம்.

13. கல்லூரி விழா? அதற்குத்தான் ஞாநியும் பாமரனும் இருக்கிறார்களே, நான் எதற்கு?

பின் குறிப்பு: என்னுடன் பேசுவது என்பது உங்களுக்குக் அளிக்கப் பட்ட ஒரு பரிசு. பரிசை மறுதலிப்பது நல்ல பண்பு அல்ல. மேலும், பரிசை மறுதலிப்பவர்களுக்கே மீண்டும் பரிசளிப்பது என் வழக்கமுமல்ல.

***

13.7.2008.

5.00 p.m.