| கேள்வி : ஹாய் சாரு, விக்னேஷ். என் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்ததற்கு மிக்க நன்றி. சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறந்துவிட்டீர்களே!
1. உங்களுக்குப் பிடித்த நூறு படங்கள் , பாடல்கள் , புத்தகங்கள் ? பட்டியல் நீளும் என்றால் 25?
2. அஞ்சாதே பற்றி விரிவாக எழுதவில்லையே என்று கேட்டிருந்தேன்.
3. உங்களிடம் கேட்க , சண்டைபோட நிறைய கேள்விகளும் விஷயங்களும் இருக்கின்றன. எனக்கு அத்தனையையும் கேட்டுவிட ஆசையாக இருக்கிறது. குட்டிக் கதைகள் , கடவுளும் நானும் மாதிரி எனக்காக ஒரு தனிப்பகுதி ஆரம்பித்துவிடுங்களேன்! (என்னுடைய பெயரை விக்னேஷ் என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் மறந்துவிடுவீர்கள். சுருக்கமாக ‘ வி ' போதும்.)
4. தலைவா, சென்ற மாதம் நடந்த யூரோ கால்பந்து பற்றி மூச்சு விடவில்லையே? இந்தியர்கள்தான் உலகக் கோப்பை நடக்கும் போது மட்டும் கால்பந்து மீது ஆர்வம் காட்டுவார்கள். நீங்களும் அப்படியா ?
5. டென்னிஸ் பிடிக்குமா ? ஏற்கனவே எழுதிவிட்டேன் என்று என்னை வைய்யாதீர்கள். பிடிக்கும் என்றால் ஃபெடரர் வெர்ஸஸ் நடால் ஆட்டம் பற்றி. (டென்னிஸ் ஆட்டம் பிடிக்காது என்றால் இந்தக் கேள்வி செல்லாது.)
6. ஏன் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு மட்டும் கலைத்தாகம் சுத்தமாக இல்லை? எல்லோரும் கோடி கோடியாய் சம்பாதிக்க மட்டுமே ஆசைப்படுவது ஏன்? தமிழ் எழுத்தாளர்களைப் போல ஏன் அவர்களும் வறுமையில் வாடி உலகத்தரமான படைப்பை அளிக்கக்கூடாது ? சரி , தமிழ்சினிமாவில் உங்களுக்கு அலர்ஜியான இயக்குநர்கள் யார் யார் ? எனக்கு பி.வாசு மற்றும் சரண். அதுவும் இந்த பி.வாசு படங்க்ளைப் பார்த்தால் எனக்கு வயதுக்கு மீறிய கோபம் ஏற்படும். அவர் பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறார்.
7. நீங்கள் ஏன் நேரடியாக அரசியலுக்குள் இறங்கக்கூடாது? அரசியலை குற்றம் சொல்வதைவிட அதை ஒருமுறை அனுபவித்துத்தான் பாருங்களேன்.
8. சரி, இந்த முத்தம் பற்றி தனியாக ஏதும் எழுதியிருக்கிறீரா ? அல்லது எழுதுவீரா ?
9. அசோகமித்திரனை அவ்வப்போது நீங்கள் பாராட்டி வருவது அறிந்ததே. ஓர் ஆய்வு மாதிரியான கட்டுரை ஏதும் எழுத உத்தேசம் உண்டா ? அவர் உயிரோடு இருக்கும்போதே எழுதினால் அவருடைய எழுத்தை நீங்கள் மேலும் கெளரவித்த மாதிரி இருக்குமே! அவருடைய எளிமையான எழுத்தை எப்படி தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளாமல் விட்டது ? அவருடைய ' விழா மாலைப் பொழுதில் ' குறுநாவலும் ' மானசரோவர் ' புதினமும் எவரையும் கவருவதறகான தகுதிகள் கொண்டதே!
10. யூடியூபில் நான் அடிக்கடி வெளிநாட்டு பாடகர்களின் லைவ் ஷோவைப் பார்ப்பதுண்டு. ஷகீரா , மைக்கேல் ஜாக்சன் , பான் ஜோவி , செலின் தியோன் ஆகியோர் தங்கள் பாடலை பத்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் முன்பு பாடும்போது அது ஓர் ஆனந்தப் பேரின்பமாகவும், கொண்டாட்ட வெளியாகவும் உள்ளது. ஏன் இப்படியொரு கொண்டாட்டமான கலாச்சாரம் இங்கு இல்லை? நம் பாடகர்கள் கச்சேரிகளில் மரத்துப்போய் நின்றபடி பாடி ரசிகர்களை மேலும் மரத்துப்போகச் செய்கிறார்கள். ஏன் நாம் மட்டும் வெளிநாட்டினர் அனுபவிக்கும் விஷயங்களைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை ?
11. உங்கள் புத்தகங்கள் அதிக அளவில் விற்க ஏதாவது முயற்சி எடுத்துள்ளீர்களா ? ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பு எப்படி உள்ளது ?
12. மந்தைவெளியில் வசிக்கிறீர்கள். எஸ்.ஐ.ஈ.டி கல்லூரிக்கு சற்று அருகே , எதிரே உள்ள சிறிய கடையில் வெஜிடபிள் ப்ரட் ஆம்லேட் சாப்பிட்டதுண்டா ? சாம்கோ ஓட்டல் மொகல் பிரியாணி ? கற்பகாம்பாள் மெஸ்ஸின் காபி ?
13. தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி விழாக்களுக்கு உங்களை அழைக்கிறார்களா ?
பி.கு - பாஸ் , நாம பொறவு ஒருநாள் போன்ல பேசலாமே ? நான் உங்கள் எழுத்தைப் படிப்பதன் மூலமாக உங்களோடு பேசுகிறேன். நீங்கள் என்னோடு பேச விரும்புவதை மெயிலில் கேட்கலாமே!

(இமயமலையில்)
பதில்:
1. நூறு படங்கள், நூறு புத்தகங்கள் பட்டியல் விரைவில் தருகிறேன். அதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் கிடக்கின்றன.
2. அஞ்சாதே: சினிமா அரங்குகளுக்குப் படம் பார்க்கச் செல்வது என்பது பெரும் கொடுமையான அனுபவமாக இருக்கிறது. நான்கு காட்சிகள் என்று போடுகிறார்கள். ஆனால் நேரம் என்ன என்று தெரியவில்லை. ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு நேரம். அஞ்சாதே படம் பார்ப்பதற்காக மூன்று முறை சினிமா அரங்குகளுக்குச் சென்று நுழைவுச் சீட்டு கிடைக்காமல் திரும்பும்படி ஆயிற்று. ஒவ்வொரு தடவையும் ஹவுஸ்ஃபுல். திங்கட்கிழமை மதியக் காட்சிக்கு யார் வரப் போகிறார்கள் என்று நினைத்து போய்ப் பார்ப்பேன். அப்போதும் ஹவுஸ்ஃபுல் போர்ட் போட்டிருக்கும். இப்படி அலைந்ததில் ஆட்டோவுக்கே 450 ரூ தண்டச் செலவு ஆயிற்று. அப்புறம் அந்தப் படம் 100 நாட்களைத் தாண்டிய பிறகே போய்ப் பார்த்தேன். படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் 100 நாட்களுக்குப் பிறகு எப்படி எழுதுவது விமர்சனம்?
அதே போல் ‘ பொல்லாதவன் ’ . நேற்றுதான் குறுந்தகட்டில் பார்க்கக் கிடைத்தது. வட சென்னையின் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை அதிலுள்ள வலியுடனும், வேதனையுடனும் சொல்லியிருந்தார் இயக்குனர் வெற்றி மாறன். அது சரி, ‘ சீனி கம் ’ படத்தையே தொலைக்காட்சியில் பார்த்துத்தானே விமர்சனம் எழுதினேன்?
இரண்டு தினங்களுக்கு முன்பு கூட ‘ சுப்ரமணியபுரம் ’ படத்திற்குச் சென்று ஹவுஸ்ஃபுல் போர்ட் பார்த்துவிட்டுத் திரும்பியதில் 150 ரூ. கரி. பிறகு ஒரு நண்பர் டிக்கட் வாங்கிக் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். படம் க்ளாஸிக். ஆகஸ்ட் மூன்றாம் தேதி நம் இணைய தளத்தில் விமர்சனம் வெளி வரும். இந்தப் படத்தை விட்டு விடாமல் அவசியம் பாருங்கள்.
3. ‘வி ’ என்று சொன்னால் மட்டும் ஞாபகம் இருக்குமாக்கும். எனக்கு என்னவோ ஒரு விதமான அம்னீஷியா இருக்கிறது. ஆண்கள் பெயர் மறந்து விடுகிறது. பெண்கள் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது.
4. யூரோ கால்பந்துப் போட்டி நடந்ததா? நான் செய்தித்தாள் படித்தே பல மாதங்கள் ஆகின்றன. தொலைக்காட்சியும் சுத்தமாகப் பார்ப்பதில்லை. எந்நேரமும் டைப்பிங் தான். எனவே இப்போதைக்கு விளையாட்டு, காதல், செக்ஸ் போன்ற லக்ஷுரிகளுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறேன்.
5. டென்னிஸா? வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்கள். எங்கள் ஊரில் கிட்டிப்புல் தான் விளையாடுவார்கள். அதில் கூட நான் கலந்து கொண்டதில்லை; உடம்பில் அடி கிடி பட்டு விடும் என்று பயந்து கொண்டு.
பள்ளி, கல்லூரிப் பருவத்தில் டென்னிஸ் பற்றிக் கேள்வி கூடப் பட்டதில்லை. எங்கள் மாவட்டத்தில் கிரிக்கெட் கூட கிடையாது. சுத்தமாக, கால்பந்துதான்.
மேலும், டென்னிஸ் என்பது நாமே இறங்கி ஆட வேண்டிய ஆட்டம். கடுமையான உடல் வலிமையும், மன ஒருங்கிணைவும் வேண்டும். டென்னிஸ் அளவுக்கு உடல், மன உறுதியை வேண்டி நிற்கும் விளையாட்டு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அப்படிப் பட்ட ஒரு விளையாட்டை தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே உட்கார்ந்து கொண்டு நான்கு ஐந்து மணி நேரம் பார்ப்பதெல்லாம் அந்த விளையாட்டையே அவமானப் படுத்துவது போல் இருக்கிறது.
டென்னிஸ் மட்டை விலையே ஐந்தாயிரம், பத்தாயிரம் என்கிறார்கள்; என்னைப் போன்ற ஒரு ஏழைத் தமிழ் எழுத்தாளன் என்ன செய்ய முடியும்?
ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு ஆட்டங்கள் கால்ஃப் மற்றும் பில்லியர்ட்ஸ். கால்ஃப் க்ளப்பில் சேர்வதற்கே லட்சக் கணக்கில் பணம் வேண்டும். வாழ்நாளில் ஏதாவது டப்ளின் விருது போன்ற ஏதாவது விருது கிடைத்து பணம் வந்தால் முதலில் கால்ஃப் க்ளப்பில்தான் சேரலாம் என்று இருக்கிறேன். பார்ப்போம்.

6. தமிழ் சினிமா இயக்குனர்கள் அவ்வளவு பேரையும் நீங்கள் அப்படி ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டி விட முடியாது. வசந்த பாலன், ‘ சுப்ரமணியபுரம் ’ இயக்குனர் சசிகுமார் போன்றவர்களின் கதைகளைக் கேட்டால் உங்களுக்கு ரத்தக் கண்ணீர் வரும். தமிழ் சினிமா கோடிகளில் புரள்வதற்குத் தமிழ்ச் சமூகமே காரணம். சினிமாக்காரர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது.
அலர்ஜியான இயக்குனரா? பெரிய பட்டியலே இருக்கிறது. So called ஆர்ட் ஃபில்ம்வாலாக்கள்தான் எனக்கு அலர்ஜி. உதாரணம், தங்கர் பச்சான். கமர்ஷியல் சினிமாவில் பேரரசுவின் லொள்ளுவுக்கு முன்னால் பி. வாசுவெல்லாம் எம்மாத்திரம்? விரைவில் பேரரசுவுக்கும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்; இதுவரை கொடுக்கப் படாதிருந்தால்.
7. அரசியலில்தானே? நிச்சயமாக இறங்குவேன். சரத் குமார் கட்சியில் சேரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?
8. முத்தம் பற்றி: ‘ குட்டிக் கதைகள் நூற்றியெட்டு ’ நாவலின் நூற்றியெட்டாவது கதையை ஏற்கனவே எழுதி முடித்து விட்டேன். என்னுடைய வேகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த நாவல் முடிந்து விடும். வாசக அன்பர்கள் விக்னேஷின் இந்தக் கேள்வியை ஞாபகம் வைத்திருந்து அந்த நூற்றியெட்டாவது கதையைப் படித்துப் பாருங்கள். அதில் விக்னேஷின் கேள்விக்குப் பதில் இருக்கிறது.
9. அசோகமித்திரனைப் பற்றி எதில் எழுதுவது? உயிர்மையில் எழுதினால் உயிர்மையின் வாசகர்களுக்கு ஏற்கனவே அவரைப் பற்றித் தெரியும். அவரைப் பற்றி எழுதினால் பெரும் பத்திரிகைகளில் எழுத வேண்டும். பெரும் பத்திரிகைகளில் எழுத வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் அவரைப் பற்றி எழுதுவேன்.
ஆனால் ஆய்வுக் கட்டுரை போல் எல்லாம் எழுத எனக்கு அவகாசம் இல்லை. ஏனென்றால், சிறுகதையில் என்னையே தாண்டிப் போய் விட்டார் என்று நினைத்து நான் பொறாமை கொள்ளும் வா.மு. கோமு பற்றித்தான் எழுதி எல்லோருக்கும் அறிமுகப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அது என் கடமையும் கூட. ஏனென்றால், நான் எழுதாவிட்டால் அவரைப் பற்றி வேறு யாரும் எழுத மாட்டார்கள். அந்த வேலையே இரண்டு ஆண்டுகளாக முடிக்கப் படாமல் காத்துக் கிடக்கும் போது நான் வேறு எழுத்தாளர்களைப் பற்றி யோசிக்கவும் முடியாது.
ஆனால் ஒன்று, தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன். அதில் சந்தேகமே இல்லை.
10. உங்கள் கருத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எல்லா சமூகங்களுமே தங்களுக்கான கொண்டாட்டங்களைத் தேடி அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது. கொண்டாட்டங்கள் இல்லையெனில் அந்தச் சமூகம் அழிந்து போகும். ஐரோப்பாவில் மஸாக்கிஸ்ட் க்ளப்புகள் உண்டு. பணம் கொடுத்து உள்ளே போனால் அங்கே நம்மைக் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பார்கள். நிர்வாணமாகக் குப்புறப் போட்டு பிரம்பால் அடிப்பார்கள். பெண்களாக இருந்தால் அதற்குப் பல விதமான ஆக்கினைகள் உண்டு. சித்ரவதை செய்வதற்கான ஆயுதங்கள், கயிறுகள் என்று அதற்கே பல கடைகள். நம்மூர் ஹார்ட்வேர் ஷாப் மாதிரி ஒரே ஆணிகளும் தளவாடங்களுமாக இருக்கும்.
ஏதோ ஒரு க்ளிப் மாதிரி இருந்தது. ” இது எதற்கு? ” என்று என்னோடு வந்த தோழியைக் கேட்டேன். ” முலைக் காம்புகளில் மாட்டி ஆக்கினை செய்ய ” என்றாள்.
இதே மாதிரி மஸாக்கிஸ்ட் க்ளப்புகள் நம் ஊரிலும் உண்டு, தெரியுமா?
நேர்த்திக் கடன் என்று சொல்லி மண்ணைத் தின்பார்கள்; பெண்கள் குப்புறப் படுத்துக் கொள்ள அவர்கள் மீது பூசார் ஆணிச் செருப்பு அணிந்து நடப்பார். இப்படிப் பல உண்டு.
நம்மூர் கோவில் விழாக்கள் எல்லாமே நீங்கள் சொல்லும் அந்த இசை விழாக்களில் காணும் கொண்டாட்டம்தான். சந்தேகமிருந்தால் மதுரை அழகர் சித்திரைத் திருவிழாவைச் சென்று பாருங்கள்.
இந்தக் கொண்டாட்டங்களில் செக்ஸுக்கும் பெரும் இடம் உண்டு. மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் இரவில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த நமீதா டான்ஸ் எல்லாம் அங்கே பிச்சை வாங்கும். அப்படிப் போட்டுக் குத்துவார்கள் குத்து.
எல்லாவற்றையும் விடுங்கள்...சவ ஊர்வலத்தின் போது பறையை அடித்துக் கொண்டு ஒரு ஆட்டம் போடுவார்களே....அட்டா...
11. ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பு: பதிப்பாளரே ஆர்வம் காட்ட மாட்டேன் என்கிறார்; நான் என்ன செய்ய? கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய நண்பர்களுக்கு அமெரிக்க இலக்கியச் சூழலில் அதிக பரிச்சயம் இல்லை. இருந்தாலும் நந்தினி முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பார்ப்போம்.
என்னுடைய தமிழ்ப் புத்தகங்கள் அதிக விலையாக உள்ளன என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது. ஆனால், ஒரு கிலோ வஞ்சிரம் மீனை 400 ரூ. கொடுத்து எந்தப் புகாரும் இல்லாமல் வாங்குகிறோம்; ஆனால் ராஸ லீலா 400 ரூ. என்றால் அடி வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இது என்ன தர்க்கம் என்றே புரியவில்லை. காகிதம், அச்சு போன்ற செலவுகள் கற்பனை செய்ய முடியாத உயரத்தில் போய் நின்று கொண்டிருக்கின்றன.
நான்தான் சொன்னேனே, சுஜாதாவின் புத்தகங்களே 1000 பிரதிகள்தான் விற்கின்றன என்கிற போது என்னுடைய புத்தகங்களைப் பற்றி என்ன சொல்வது?
தமிழர்களுக்குப் புத்தகங்கள் வாங்கிப் பழக்கமில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே புலவர்களையெல்லாம் ராஜாக்களிடம் பிச்சை எடுக்க வைத்த சமூகம்தானே இந்தத் தமிழ்ச் சமூகம்? இப்படித்தான் இருக்கும்.
(தொடரும்)
13.7.2008.
1.15 p.m.
|