கேள்வி பதில்

 

கேள்வி:

1. உங்களுடைய மகளின் கதை மனத்தில் பாரத்தை ஏற்றிவிட்டது. அந்த மகளுக்காக ஸீரோ டிகிரியில் நீங்கள் எப்படியெல்லாம் உருகியிருப்பீர்கள். கார்த்திக்குக்குக் கிடைத்த புண்ணியம் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவில்லை.

கேரளாவில் நீங்கள் எது செய்தாலும் அதை அந்த மாநிலப் பத்திரிகைகள் வெளியிடுகிறார்கள் என்கிறீர்கள். நீங்கள் இப்படிச் சொல்வதால் அந்தப் பிரச்சினையின் மூலமாக விளம்பரம் தேடிக்கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம் ஆகிறது. நமக்கு வேண்டியது பிரச்சினைக்கானத் தீர்வா அல்லது அதன் மூலம் கிடைக்கும் விளம்பரமா ?

2. அழகிரி கேள்விக்கான பதிலை எழுதும்போது உங்களுடைய வழக்கமான வீரியம் குறைந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதுசரி , கனிமொழி மீதான நட்புக்கு மரியாதை கொடுக்கவேண்டும் அல்லவா!

பாருங்கள் , கேள்விகளையும் கேட்டுவிட்டு அதை உட்கார்ந்த இடத்தில் இருந்து உங்களை விமர்சித்துக்கொண்டும் இருக்கிறேன். எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியமும் சுதந்தரமும்தான்.

என் வயது இளைஞர்களிடம் கோணல் பக்கங்களை வலுக்கட்டாயமாகக் கொடுத்து வாசிக்க வைத்திருக்கிறேன். தமிழ் படிக்கத் தெரிந்த எல்லா நண்பர்களிடமும் சாருஆன்லைனை அறிமுகம் செய்திருக்கிறேன். இதில் நிறைய பேர் என்னைப் போலவே உங்கள் எழுத்தின்மீது பித்தாக இருக்கிறார்கள்.

3. குமுதத்தில் நீங்கள் கோணல் பக்கங்கள் எழுத ஆரம்பித்தபோது நான் வானத்தில் பறந்தேன். ஆனால் என்னை நீங்கள் ஏமாற்றினீர்கள். எழுதுவதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த டாபிக் எனக்குப் பிடிக்கவில்லை. இணையதள கோணல் பக்கங்களில் காணப்பட்ட தரம் குமுதத்தில் காணவில்லை. அப்போதே எனக்கு மணியடித்தது , தலைவா கிடைத்த வாய்ப்பை வீணடிக்கிறீரே என்று.

அதேபோல சில வாரங்களில் கோ.ப. குமுதத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் எனக்கு நஷ்டமில்லை. நீங்கள் எங்கு எழுதினாலும் தேடிப்பிடித்துப் படிப்பேன். உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய புதிய வாசகர்களை இழந்துவிட்டீர்களே என்றுதான் வருந்தினேன்.

4. டிவி பார்க்கமாட்டேன் என்கிறீர்கள். உங்களை யார் நிகழ்ச்சிகளைப் பார்க்கச் சொன்னார்கள் ? டிவியில் வரும் விதவிதமான பெண்களுக்காகவே நான் டிவி பார்ப்பேன்.

5. ஆமாம் , இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் ? உடனே ஸ்மீதா பாட்டிலுக்குப் போய்விடாதீர்கள். இன்றைக்குக் கேட்கிறேன். எனக்கு நந்திதா தாஸ். தமிழில் யாரும் இல்லை. மொழியில் மட்டும் ஜோதிகா என்னை அசத்தினார். பழைய நடிகைகளில் சாவித்திரி. இந்தியாவில் உள்ள நடிகைகளை நடிகை என்றே சொல்லக்கூடாது. அவர்கள் ஜஸ்ட் மாடல்ஸ். ஹீரோ என்கிற பிராடக்ட் விற்கப்பட உதவும் மாடல்கள். கொடுமை. சமீபத்தில் வந்த செய்தி. நயன் தாராவுக்குச் சம்பளமாக ஒரு கோடி கொடுத்தார்களாம். நிச்சயம் அந்த ஒரு கோடி அவருடைய நடிப்புக்காகக் கொடுக்கப்படவில்லை. ஒரு கோடி கொடுத்து வேண்டியளவு அந்த நடிகையுடைய மார்பையும் பிட்டத்தையும் தொப்புளையும் படம் பிடித்துவிடுவார்கள். சே. Giulietta Masina போன்ற ஒரு நடிகை அடுத்த நூறு வருடம் ஆனாலும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.

6. சமீபகாலமாக நீங்கள் உலக சினிமா குறித்து எதுவும் எழுதவில்லை. முன்பெல்லாம் நீங்கள் ஒரு படத்தை எடுத்துவைத்துக்கொண்டு அதைப் பற்றி நிறைய எழுதுவீர்கள். ஒரு கோரிக்கை - நீங்கள் அமோரஸ் பெரோஸ் பற்றி எழுதிய கட்டுரையை மீண்டும் வெளியிடுவீர்களா ?

விக்னேஷ்.

(ரேஷ்மா கைக்குழந்தையாக இருந்த போது. தஞ்சாவூர் பெரிய கோவிலில்)

(ரேஷ்மாவின் சிறு வயது புகைப்படங்களை வெளியிடும் காரணம், சமீபத்தில் அவள் சில தினங்கள் என்னோடு பேசிக் கொண்டு இருந்த போது தன் சிறு வயது புகைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள். இப்போது அவள் என்னோடு நிரந்தரமாக உறவை முறித்துக் கொண்டாலும் அவள் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் இவை. )

பதில்:

1. ஒரு போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்கிற போது அதனால் நாமும் பிரபலமாவதென்பது தவிர்க்க முடியாத ஒன்று. வேண்டுமானால் இப்படி ஒரு கேள்வியை விக்னேஷ் கேட்பார் என்பதற்காக அந்தப் போராட்டத்திலேயே கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். நான் கலந்து கொண்டால் அது அந்தப் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மேலும், நான் கொள்கைரீதியாகவே நீர் மின் திட்டம் என்ற பெயரால் வனங்களை அழிக்கும் நாகரீக முன்னேற்றத்துக்கு எதிர் நிலையில் இருக்கிறேன்.

என்னுடைய நெருங்கிய நண்பரும் , எனக்கு மிகப் பிடித்த கேரள எழுத்தாளருமான ஸக்கரியா இவ்விஷயங்களில் எனக்கு நேர் எதிர் நிலையில் இருப்பதை அவருடைய கட்டுரைகளைப் படித்து வருபவர்கள் உணர முடியும். அது ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்தது.

சமீபத்தில் டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகையில் எனது நண்பர் பீர் முகம்மது ஒரு செய்திக் கட்டுரையை எழுதியிருந்தார். சேலத்துக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ளது தொட்டியனூர் என்ற கிராமம். இங்கே தொட்டிய நாய்க்கர் என்ற இனக்குழுவைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வாழ்கின்றன.

இவர்களின் தொழில் விவசாயம். தெலுங்கு கலந்த தமிழ் பேசும் இந்த இனக்குழுவைச் சேர்ந்த பெண்கள் இன்றளவும் மார்பில் ரவிக்கை அணிவதில்லை. தங்களின் வன தேவதையான பொம்மக்காவுக்கு அது பிடிக்காது என்று இவர்கள் நம்புகிறார்கள்.

தொட்டியனூரின் விசேஷம் என்னவென்றால் , கடந்த 200 ஆண்டுகளாக இங்கே எந்தக் குற்றச் செயலும் நடந்ததில்லை. ஆண்கள் குடிப்பதில்லை. இந்தக் கிராமத்தில் இதுவரை போலீஸே நுழைந்ததில்லை. இது போன்ற பல கிராமங்களை நான் அருணாச்சலப் பிரதேசத்தில் பார்த்திருக்கிறேன்.

அப்படியானால் , நாம் நாகரீகம் , பண்பாடு , கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அதற்கெல்லாம் அர்த்தம் என்ன ? நம்முடைய பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடிகிறதா ? ஐந்து வயதுக் குழந்தையைக் கற்பழித்து அதைச் சாக்கடையில் தூக்கிப் போடும் கலாச்சாரமல்லவா இந்த முன்னேறிய கலாச்சாரம் ? நம்முடைய சிறைச்சாலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றனவே ? இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம்.

2. கனிமொழியுடனான நட்புக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்றால் , தசாவதாரம் விமர்சனத்தில் கருணாநிதியின் மஞ்சள் துண்டு பற்றி எழுதியிருப்பேனா ? நட்புக்காக சலுகை காண்பிப்பது என்பதெல்லாம் எனது எழுத்து இயக்கத்திலேயே நடந்தது கிடையாது. நீங்கள் என் எழுத்தின் அடிப்படையையே இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்படிப் பார்த்தால் கமலும் என் நண்பர்தான். அந்த நட்புக்காக தசாவதார விமர்சனத்தில் ஏதாவது சலுகை காட்டியிருக்கிறேனா?

தனது தந்தையின் மீதான என்னுடைய விமர்சனங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு என்னோடு நட்பு பாராட்டுவதற்காக நான்தான் கனிமொழிக்கு நன்றி சொல்ல வேண்டும். மற்ற படி அழகிரி பற்றி நான் கூறியது கட்சிக்காரர்களிடையே உள்ள பரவலான கருத்து.

3. குமுதத்தில் எழுதியது பற்றி: வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதால் எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த லாபமும் இல்லை. ஏனென்றால், எனக்குப் புகழ் மீது ஆர்வமில்லை. (எனக்குத் தேவை, பணம்). ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், கிழக்காசிய நாடுகளிலும் என் ஆயுள் முழுவதும் என் கையில் ஒரு பைசா இல்லாமல் தங்கி எழுதுவதற்கும், என்னைப் போஷிப்பதற்கும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் இருக்கின்றனர். இது வெகுஜனப் பத்திரிகைகளால் கிடைத்த ஒன்று அல்ல; தீவிர இலக்கிய இதழ்களிலும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் நடத்தும் இதழ்களிலும் எழுதியது மற்றும் எனது புனைவிலக்கியம் காரணமாக எனக்குக் கிடைக்கும் மரியாதை இது.

வெகுஜன இதழ்களில் எழுதினால் சுஜாதாவைப் போல் சினிமாவுக்கு வசனம் எழுதலாம். என்னுடைய இலக்கு அது அல்ல. உலக இலக்கியப் பரப்பில் வலுவான தடம் பதிப்பதே என்னுடைய நோக்கம்.

ஆனால் ஒரே ஒரு நட்டம் என்னவென்றால், தமிழின் சமகால இலக்கியம் பற்றித் தமிழ் சமூகத்திற்கு அறிமுகம் செய்யலாம் என்று கருதியிருந்தேன். அது முடியாமல் போயிற்று. அதே சமயம் வேறோர் விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். சாண்டில்யனுக்குப் பிறகு குமுதத்தில் விரும்பிப் படிக்கப் பட்ட பக்கங்கள் அடியேனுடையதாக இருந்தது என்பதைப் பலரிடமிருந்தும் கேள்விப் பட்டேன். அப்படிப் பட்ட பத்தி ஏன் நிறுத்தப் பட்டது? அது பற்றிப் பலமுறை எழுதி விட்டேன்.

4. என்னது, பெண்களுக்காக டிவி பார்ப்பதா? பானு போன்ற என்னுடைய தோழிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளையே எடுக்காமல் நாள் பூராவும் அமர்ந்து இதை டைப் செய்து கொண்டிருக்கும் நான் இந்த ப்ளடி டிவியையா பார்க்க வேண்டும்?

5. எனக்குப் பிடித்த நடிகை மாதுரி தீட்சித். இப்போது பிடித்த நடிகை தீபிகா படுகோனே. தமிழில் பிடித்த நடிகை, கல்லூரியில் நடித்த தமன்னா என்ற தேவதை. ஜெனிலியாவையும் பிடிக்கும். பிடிக்காத நடிகைகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் முதலில் வருவது, பிரியா மணி. பருத்தி வீரனில் அட்டகாசம் செய்திருக்கிறாரே என்று கேட்கலாம். என்ன பிரயோஜனம்? பத்திரிகைகளில் அவர் கொடுக்கும் பேட்டிகளைச் சகிக்க முடியவில்லை. அவரும் அவருடைய ட்ரெஸ் சென்ஸும்...கருமம், கருமம்.

Giulietta Masina பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தால் நீங்கள் விபரம் தெரிந்தவர் என்று தெரிகிறது. ஃபெலினியின் மனைவி. ஃபெலினியின் புகழ் பெற்ற ப La Strada , Ginger and Fred போன்ற படங்களில் நடித்தவர். கற்பு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி என்று பீற்றிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டில் சினிமாத் தம்பதிகளின் வாழ்க்கை சிரிப்பாய் சிரிக்கிறது. ஆனால் இத்தாலியில் ஆரம்பத்திலிருந்து 1994-இல் ஃபெலினி இறக்கும் வரை அவர் கூடவே இருந்து அவருடைய கலை இயக்கத்துடன் தன்னையும் பிணைத்துக் கொண்டு வாழ்ந்த மஸினா ஃபெலினி இறந்த சில மாதங்களிலேயே இறந்து போனார்.

நமது மதிப்பீடுகளையும் ஐரோப்பிய மதிப்பீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

6. அமோரெஸ் பெரோஸ் விமர்சனம் எனது சினிமா நூலில் இருக்கிறது. உங்கள் முகவரியைச் சொல்லுங்கள். நானே உங்களுக்கு ஒரு பிரதி என்னுடைய பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

***

10.7.2008.

12.1 5 a.m.