கேள்வி பதில்

 

சாரு ,

மீண்டும் விக்னேஷ்தான். என்னுடைய முந்தைய மெயிலில் வெயில் படத்தைப் பற்றி எழுத வந்து அப்படியே மெயிலை உங்களுக்கு அனுப்பிவிட்டேன்.

என்னுடைய அந்தக் கேள்வி இதுதான்.

வெயில் படத்தைக் கிழித்த நீங்கள் எப்படி தமிழ் சினிமாவின் வித்தியாச இயக்குநர்கள் பட்டியலில் வசந்த பாலனையும் சேர்த்தீர்கள் ? பிறகு செல்வராகவனை இவ்வளவு தூரம் தூக்கி எழுதவேண்டாம். இன்னமும் அவர் அமீர், ராம் (கற்றது தமிழ்), சுசி கணேசன் தரத்துக்குக்கூட வரவில்லை என்பது என் எண்ணம். ஆனால் செல்வராகவனோ தன்னை குரசவா, ஃபெலினி ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அமீரோடு அவரைச் சேர்ப்பது எனக்குப் பிடிபடவில்லை. செல்வராகவன், தான் ஒரு பிஸ்தா என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபடவேண்டும்.

இது உங்களுக்கு மிகவும் சுவாரசியமான தகவலாக இருக்கும். tv5 என்றொரு ப்ரெஞ்ச் சேனல் சென்னையில் தெரிகிறது. மாலை 6.30 , இரவு 9.00 மற்றும் 11.00 மணிக்கு தினமும் ஃப்ரெஞ்ச் படங்களைப் போடுவார்கள். அப்படி ஒரு சமயம் ஒரு படத்தைப் பார்க்கும்போது (இரண்டு வருடங்களுக்கு முன்பு) எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அந்தப் படத்தைத்தான் தமிழ் சினிமாவில் உலக சினிமா பற்றி உரக்கப் பேசும் தங்கர் பச்சான் காப்பியடித்திருகிறார். படம் - தென்றல். அப்படியே அப்பட்டமான காப்பி. எழுத்தாளன்மீது சிறு வயது முதலே ஆசை வைத்து பருவம் அடைந்த பின்பு அவனிடம் கற்பிழந்து, பிறகு அவனுக்கு தன் அடையாளம், ஆசை எதுவும் சொல்லாமல் மொட்டைக் கடிதாசி எழுதி இறுதியில் உயிர் விடும் ஒரு வாசகியின் கதைதான் அது. மொழி புரியாத அந்த ப்ரெஞ்ச் படத்தை டிவியில் பார்த்து உண்மையிலேயே கண்ணீர் விட்டேன். கதையும் நாயகியின் நடிப்பும் அவ்வளவு உருக்கமாக இருந்தன. ஆனால் பச்சான்மீது நம்பிக்கை வைத்துச் சென்ற எனக்கு, தென்றல் படம் அருவருப்பைத்தான் ஊட்டியது. பேசாமல் அந்த ப்ரெஞ்ச் படத்தை ரீமேக் புகழ் ராஜாவிடம் கொடுத்திருந்தால் அருமையாக தமிழ்ப்படுத்தியிருப்பார்.

நான் சொல்லும் இந்த ப்ரெஞ்ச் படத்தை நீங்கள் பார்த்ததுண்டா ? அப்போது நான் டைட்டிலைக் கவனிக்கவில்லை. கூகுளில் கதையை வைத்துத் தேடிப் பார்த்தும் எனக்கு அந்தப் படத்தைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. பாருங்கள், எஙகுமே கிடைக்காது என்பதால்தான் தங்கர் பச்சான் சுட்டாரோ என்னவோ!

அது சரி , இந்தியப் புகழ் மணிரத்னமே அமோரஸ் பெரோஸ் படத்தை வெட்கமில்லாமல் சுட்டு அதை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் வெளியிட்டு காசு பார்க்கும்போது தங்கர் பச்சான் எல்லாம் எம்மாத்திரம்?

விக்னேஷ்.

***

பதில்: விக்னேஷ் , முதலில் உங்கள் தொலைபேசி எண்ணைத் தாருங்கள். நான் உங்களோடு பேச விரும்புகிறேன்.

வசந்த பாலனின் படம் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. ஆனால் அதை ஒரு மாற்று சினிமா என்று நாம் அங்கீகரிக்க வேண்டாமா ? என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வசந்த பாலன் பேசும் போது “ என் சினிமாவை சாரு திட்டினார் ” என்று குறிப்பிட்டார். அப்போது என் பேச்சின் போது நான் சொன்னேன்: வசந்த பாலனின் படத்தைத்தானே திட்டி எழுதினேன் ? போக்கிரி படத்தைத் திட்டி எழுதவில்லையே நான்?

இதேதான் இப்போதைய பதிலும். மாற்று சினிமாவை உருவாக்க முயலும் இயக்குனர்களில் வசந்த பாலனும் ஒருவர். அதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

செல்வராகவன் தன்னை எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு முக்கியமில்லை. அவரது புதுப்பேட்டை தமிழின் மிக முக்கியமான ஸபால்ட்டர்ன் படம். இது பற்றியும் என்னுடைய சினிமா புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

தங்கர் பச்சான் என்றால் யார் ? அவரைப் பற்றி அடிக்கடி விகடன் நையாண்டி தர்பாரில் வரும். நல்ல தமாஷாக இருக்கும். எனக்குப் பிடித்த சிரிப்பு நடிகர் கமல்தான். சதி லீலாவதி அதில் ஒரு க்ளாஸ். தங்கர் பச்சானின் காமெடிக்கு நையாண்டி தர்பாரே போதும். சினிமாவெல்லாம் வேண்டாம். மேலும் தென்றல் என்ற படத்தைப் பற்றியெல்லாம் நான் கேள்விப்பட்டது இல்லை.

நீங்கள் சொல்லும் ஃப்ரெஞ்ச் படத்தை நான் பார்த்தது இல்லை. நான் தொலைக்காட்சியே பார்ப்பது இல்லை.

***

6.7.2008.

7.30 p.m.