கேள்வி: ஏய் செல்லம்... வேறு எப்படி உன்னை அழைப்பது என்று தெரியவில்லை. பெரியப்பா என்று கூப்பிட என்னவோ போல் இருக்கிறது. சின்ன குழந்தையாக இருக்கும் போது உன்னை பெரிய நைனா என்று கூப்பிட்டது ஞாபகம் இருக்கிறது. இப்போது நைனாவையே டாடி என்றுதான் கூப்பிடுகிறேன். சரி, விஷயத்துக்கு வருகிறேன். இப்போது உன்னுடைய இணைய தள கட்டுரைகளை, கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னை நீ பெரிய அழகி அது இது என்று அளந்து விட்டிருக்கிறாய். ம்...தயவு செய்து நாம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவேற்றம் செய். நீ சொல்வது பொய் என்று தெரிந்து விடும். ஆனால் அந்தப் பொய்யை நான் மிகவும் ரசித்தேன். ஏன் தெரியுமா? அன்பினால் விளைந்த பொய்யும் அழகுதான். ஆனால், வெறுப்பின் அடிப்படையில் நீ உண்மையே சொன்னாலும் அது உயிர்கொல்லியாக மாறி விடும்.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். கொஞ்ச நாட்களுக்கு நீ சிட்டி செண்டர், ஸ்பென்ஸர்ஸ், சத்யம் தியேட்டர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாம்; ப்ளீஸ், எனக்காக...சரியா?
எஸ். ஜனனி, தாம்பரம்.
பதில்: ஏய் செல்ல குட்டி, என்ன இது, நீயெல்லாம் என் வாசகர்களோடு சேர்ந்து கொண்டு கேள்வி அனுப்ப ஆரம்பித்து விட்டாய், ம்? இப்படி என் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் என் எழுத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டால் அப்புறம் நான் எப்படி சுதந்திரமாக எழுத முடியும்?
நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள். உன் இஷ்டம்.
அது சரி, நீ சொன்ன இடங்களுக்கெல்லாம் ஏன் போகக் கூடாது? குண்டு வெடித்து விடும் என்ற பயமா?
இப்படியே பயந்து கொண்டு எத்தனை நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கிடக்க முடியும்? காங்கிரஸ் அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் போடுவதில் இனிமேல் மும்முரமாக இருக்கும். அடுத்து, இஸ்ரேலுடன் அணு ஆயுத ஒப்பந்தம் போடும். அப்புறமென்ன? கேட்கவே வேண்டாம்.
இன்று ஒரு முஸ்லீம் பெரியவரைச் சந்தித்தேன். அவர் கேட்டார். ” குஜராத்தில் மூவாயிரம் முஸ்லீம்களை படுகொலை செய்து கொன்று போட்டு விட்டு இந்தியாவில் அமைதி திகழும் என்று எப்படி எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்? தில்லியில் மூவாயிரம் சீக்கியர்களைப் படுகொலை செய்ததன் பலனை இந்தியா பத்து ஆண்டு காலம் அனுபவித்தது. அதே கதைதான் இப்போதும் திரும்பியிருக்கிறது. ”
இப்படிப் பேசியதால் அவரை ஒரு தீவிரவாதி என்று நினைத்து விடாதே. தீவிரவாதிகள் மீதும் அவர் வெறுப்புடனேயே பேசினார்.
”எதற்காக இவர்கள் இப்படிப் பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். இவர்களுக்கு என்ன வேண்டும்? இப்படி அப்பாவி மக்களைக் கொல்வதன் மூலம் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்? புலிகள் போர் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் தெளிவான ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த மாதிரி இவர்களுக்கு ஏதாவது ஒரு நோக்கம் இருக்கிறதா?
ஒருநாள் குண்டு வெடித்தால் அன்றைய தினம் மட்டும் பதற்றமாக இருக்கும். ஆனால் மறுநாளே சகஜ வாழ்க்கை திரும்பி விடும். மறுபடியும் அதே கூட்டம். அதே அவசரம். இப்படிப் பட்ட மக்கள் கூட்டத்தில் குண்டு வைத்து எதைச் சாதிக்கப் போகிறார்கள்?
‘இந்திய இறையாண்மையின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக ’ என்று சிலர் சொல்கிறார்கள். இங்கே என்ன ஸ்திரத்தன்மை இருக்கிறது? தடியெடுத்தவன் தண்டல்காரன். அதுதான் இந்திய ஜனநாயகம். இங்கே போய் எந்த ஸ்திரத்தன்மையைக் குலைக்கப் போகிறார்கள்? ”
இதுதான் அவர் பேசியதன் சுருக்கம்.
அது இருக்கட்டும். நீ சொன்ன அந்த இடங்களுக்கெல்லாம் கொஞ்ச காலத்துக்கு நீ போகாமல் இருப்பது நல்லது; சரியா?
***
28.7.2008.
9.30 p.m.