| நேற்று ஒரு புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். மிக அவசரமாக சில புத்தகங்கள் தேவைப் பட்டன. மொத்தம் ஆயிரம் ரூபாய் தேவைப்படும். மறுநாள் கொடுக்க வேண்டிய வாடகைக்கே ஓரிரு ஆயிரங்கள் தேவைப் பட்டது. அந்தப் பதற்றத்தில் இருந்ததால் புத்தகங்களை வாங்காமல் திரும்பி விட்டேன். அவந்திகாவுக்கு ஜூரம். அந்த ஜூரத்திலும் ' வாடகைக்குப் பணம் குறைகிறது ' என்று பினாத்திக் கொண்டிருந்தாள். எப்படியோ பல நண்பர்களிடம் கையேந்தி - கடைசியாக ஒரு நண்பரிடம் 500 ரூ. அனுப்பச் சொன்னேன் - இப்படி உண்டியல் குலுக்குவது போல் குலுக்கி வாடகை கொடுத்தேன்.
மற்றவர்கள் பணம் கேட்டால் அது கடன்; ஆனால் நான் கேட்டால் அது கடன் அல்ல ; என்னால் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பதால் அதன் பெயர் யாசகம்.
இந்த இணைய தளம் தமிழில் அதிகமான வாசகர்களைக் கொண்ட ஒன்று. ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் சாருஆன்லைனில் விளம்பரம் செய்தால் ஒரு விளம்பரத்தின் ஒரு நாளைய கட்டணம் 20 டாலர் என்று மதிப்பிட்டிருக்கிறது. அந்த ஆய்வு நிறுவனத்தின் படி இந்த இணைய தளத்தின் மதிப்பு 10 , 000 டாலர்.
சில இணைய தளங்களில் நீங்கள் அதன் உள்ளே சென்று ஒவ்வொரு விஷயத்தைப் படிக்கும் போதும் ஒவ்வொரு ஹிட்டாக எண்ணிக்கை கூடும். ஆனால் சாருஆன்லைனில் நீங்கள் ஒருமுறை உள்ளே சென்றால், அங்கே எவ்வளவு நேரம் தங்கி எத்தனை கட்டுரைகளைப் படித்தாலும் ஹிட் எண்ணிக்கை கூடாது. இதற்கே இரண்டு லட்சம் ஹிட்ஸைத் தொடப் போகிறது; அதுவும் இந்த எண்ணிக்கை ஓரிரு மாதங்களில் நடந்த ஒன்று.
ஆனால் விளம்பரம் கேட்டால் தமிழ்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமே ‘ மாதம் 2000 ரூபாய்க்குத் தருகிறேன் ’ என்கிறார்கள். என்ன செய்வது?
அவ்வளவு பிரபலமாகாத ஒரு இலக்கியப் பத்திரிகையைப் பார்த்தேன். மொத்த பக்கங்கள் அறுபதில் நாற்பது பக்கங்களில் வந்திருந்தது வண்ணப் பட விளம்பரங்கள். மொத்தம் மூன்று லட்ச ரூபாய் இருக்கும். என்னைப் போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி, வாழ்வை இழந்து பாடுபட்டு வளர்த்த இலக்கிய உலகில் இன்று வர்த்தகர்கள் புகுந்து அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் தமிழில் எழுதுவதே போராட்டம்தான் என்று குறிப்பிட்டேன். மற்றபடி இந்த ஆட்டோ, அடியாளுக்கெல்லாம் பயப்படுகிற ஆள் நான் அல்ல.
5 . அது சரி, மு.க. அழகிரி என்ன ஆட்டம் போடுகிறார்? எந்த அரசியல்வாதியின் வாரிசு இந்த நாட்டில் ஆட்டம் போடாமல் இருக்கிறது? இந்தியாவில் நடப்பது என்ன ஜனநாயகமா? இல்லை, மன்னராட்சி. ஒரு முதல் மந்திரி வந்தால் ஏதோ அந்தக் காலத்துச் சக்ரவர்த்திக்குக் கொடுக்கப்படும் வரவேற்பு அல்லவா கொடுக்கப்படுகிறது? முதல் மந்திரி என்பவர் யார்? மக்களின் வேலைக்காரன். அதற்காகவே அவரிடம் ஆட்சிப் பொறுப்பு கொடுக்கப் படட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படியா நடந்து கொண்டிருக்கிறது?
எந்த மந்திரி வீட்டிலாவது தடுப்பூசி போட்டு குழந்தை செத்திருக்கிறதா? எந்த மந்திரியாவது, மந்திரி வீட்டிலாவது கள்ளச் சாராயம் குடித்து யாராவது செத்துப் போயிருக்கிறார்களா? எந்த மந்திரி வீட்டுக் குழந்தையாவது கார்ப்பொரேஷன் பள்ளியில் படிக்கிறதா? எந்த மந்திரியாவது டவுன் பஸ்ஸில் பயணம் செய்கிறானா? எந்த மந்திரியாவது அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்து எடுத்துக் கொள்கிறானா? எந்த மந்திரி வீட்டிலாவது ரேஷன் கார்டை உபயோகிக்கிறார்களா?
ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியே தினமும் ரெண்டு லட்ச ரூபாய் வசூல் பணத்தைப் பெட்டியில் போட்டு வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகிறான்.
(இது எனக்கு ஒரு போலீஸ் அதிகாரியே சொன்னது). நிலைமை இப்படி இருக்கையில், ஏதோ ஒன்றும் தெரியாதவர் போல் மு.க.அழகிரியைப் பற்றிப் பேசுகிறீர்களே? அவர் ஒரு ஆள்தான் அந்தக் குடும்பத்தில் கொஞ்சம் வெள்ளந்தியான மனிதர். ஆளை விடுங்கள். வேறு பேச்சு பேசுவோம்.
மேலும், இந்த டீஸண்ட் அரசியல்வாதிகளான மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்களால் இந்த நாட்டுக்கு ஏதாவது ஒரு நல்லது நடந்திருக்கிறதா, சொல்லுங்கள்?
6 . அப்புறம் இந்த ‘ கற்றது தமிழ் ’ பற்றி: மாற்று சினிமாவை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் இயக்குனர்கள் குறித்த பகுதியில் கற்றது தமிழ் இயக்குனர் ராமின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். விடுபட்டுப் போனது தவறுதான். ஆனால் அந்தப் படம் குறித்து உயிர்மையில் விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘ சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் ’ என்ற புத்தகத்தில் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. அதற்குத்தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், என்னை முழுசாகப் படித்து விட்டு விமர்சியுங்கள் என்று.
மற்ற கேள்விகளுக்கு அப்புறம் பதில் சொல்கிறேன்.
5.7.2008.
7.30 p.m.
|