கேள்வி பதில்

 

அன்புள்ள சாரு ,

வணக்கம்.

நீங்கள் விகடனில் எழுத ஆரம்பித்த நாள் முதல் நான் உங்களை வாசித்து வருகிறேன். சமீபகாலமாக நீங்கள் கோணல் பக்கங்களுக்கு அதிக நேரம் செலவழித்து நிறைய கட்டுரைகள் வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நான் ஒரு சாரு பைத்தியம் என்றுகூடச் சொல்லலாம். உங்கள் கருத்துக்களோடு எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. இருப்பினும் நான் உங்களுடைய எழுத்தை மிகவும் விரும்புகிறேன்.

நீங்கள் எதை எழுத நினைக்கிறீர்களோ அப்படியே அதை எழுத உங்களால் முடிகிறது. முக்கியமாக , தான் ஓர் எழுத்தாளன் என்று காட்டிக் கொள்வதற்காக நீங்கள் எந்த சேஷ்டையிலும் ஈடுபடுவதில்லை. கரடுமுரடான வார்த்தைகளைப் போட்டு வாசகனை பயமுறுத்துவதில்லை. தான் ஒரு மேதாவி என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே வித்தைகள் எதுவும் செய்வதில்லை.

உங்களுடைய புத்திசாலித்தனம் என்பது உங்களுடைய எழுத்தில் மிக இயல்பாக வெளிப்படுகிறது.

உங்கள் வாசகன் என்பதால் சில வருத்தங்களையும் சில கேள்விகளையும் தெரிவிக்க உரிமை உண்டல்லவா ? அதனால் இந்தக் கேள்விகள்:

1. உத்தமத் தமிழ் எழுத்தாளன்.... சே வேறு வழியில்லை. முதலில் இவரைப் பற்றிப் பார்த்துவிடுவோம். ஆமாம் , அவர் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கென்ன ? உங்கள் எழுத்தால் விளிம்பு நிலை மனிதனையும் புத்திஜீவியையும் ஒரே நேரத்தில் வசப்படுத்த முடிகிறது.. இந்த வித்தை உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்கு இந்த ஜென்மத்தில் வாய்க்கப் போவதில்லை. அது தன்னை யானை என்று கூறிக்கொண்டு தன் தலைமீதே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது. விடுங்கள்... அதன் சங்காத்தமே உங்களுக்கு. வேண்டாம்

2. கோ.ப.-வில் சமீபகாலமாக உங்களுடைய சொந்தக் கதைகள்தான் நிறைய வருகின்றன. இல்லாவிட்டால் பழைய கோ.ப கட்டுரைகளை மறுபிரசுரம் செய்கிறீர்கள். உங்களை வெறும் பொழுதுபோக்குக் கேந்திரமாக இந்தச் சமூகம் பார்த்துவிடப்போகிறது. கவனம்.

3. ஞாநியைவிடவும் உங்களால் அருமையாக சமூகக் கட்டுரைகள் எழுதமுடியும். உதாரணம் , பம்பாய் ராஜ் தாக்கரே கட்டுரை. எனில் , நீங்கள் ஏன் அதுபோன்ற கட்டுரைகளை அதிகம் எழுதக்கூடாது ?

4. செக்ஸ் பற்றி கட்டாயம் எழுதித்தான் ஆகவேண்டுமா ? செகஸ் அலர்ஜி கொண்ட சமூகத்துக்கு இதனால் என்ன அளிக்கப் போகிறீர்கள் ? ஆங்கிலத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போங்கள். தமிழில் தேவையா ? வெறும் ராஸ லீலா படித்துவிட்டு ‘ நீர் இது மட்டும்தான் எழுத லாயக்கு ' என்கிறார்களே ?

அதுசரி , புரட்சி என்றால் அது செக்ஸ் கதை எழுத மட்டும்தானா ? கேரளாவில் உள்ள ஒரு பிரச்சினைக்காக கொடி பிடிக்கிறீர்கள். தமிழ்நாட்டுப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வரமாட்டீர்களா ? உயிர்மையில்கூட உலக சினிமா பற்றியும் உலக இலக்கியம் பற்றித்தான் எழுதுகிறீர்கள். ஆட்டோ வரும் என்று பயமா ?

5. ஒரு திறமையும் இல்லாமல் மு.கவின் மகன் என்பதற்காக அழகிரி போடும் ஆட்டங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன ?

6. ‘ கற்றது தமிழ் ' படம் பற்றி நீங்கள் எதுவுமே எழுதவில்லையே ? ' அஞ்சாதே ' பற்றியும் விரிவாக எழுதவில்லையே ? யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக விமர்சிக்காமல் இருப்பது என்ன நியாயம் ? விமர்சகன் என்றால் அவனுக்கும் நான்கு விமர்சனங்கள் வரத்தானே செய்யும் ?

7. உங்களுடைய மகளைப் பார்த்துவிட்டீர்களா ?

8. உங்களுக்குப் பிடித்த நூறு புத்தகங்கள் , நூறு படங்கள் , நூறு பாடல்கள்.... என்னென்ன ? ஆவலாக உள்ளேன்.

உங்களை உங்கள் போக்கில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அவந்திகாவுக்கு என் வந்தனம்.

இப்படிக்கு

விக்னேஷ்.

பி.கு - நான் உங்கள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறேன். என் வயது உங்கள் வயதில் பாதி.

***

 

பதில்: நான் கோணல் பக்கங்களை முதலில் விகடனில் ஆரம்பிக்கவில்லை. யூமா வாசுகி ஆசிரியராக இருந்த ' குதிரை வீரன் பயணம் ' என்று சிறு பத்திரிகையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன். அந்தக் காலத்தில் வந்த எல்லா சிறு பத்திரிகைகளையும் போல் குதிரை வீரன் பயணமும் தனது பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டது. பின்னர் , பாரிஸிலிருந்து வந்த ' எக்ஸில் ' என்ற பத்திரிகையில் கோணல் பக்கங்களைத் தொடர்ந்தேன். அதற்குப் பிறகே விகடன் இணைய தளத்தில் கோணல் பக்கங்கள் தொடர்ந்தது. மிக அதிக வாசக வரவேற்பைப் பெற்ற அந்தப் பத்தி ஏன் விகடன் இதழில் வரவில்லை என்று எனக்கு இன்றளவும் புதிராகவே இருக்கிறது. பிறகு ஒன்பது வாரங்கள் குமுதத்தில் வந்து ஆரம்பித்த ஜோரிலேயே நின்று போனது.

இப்போது ஒவ்வொரு விஷயமாகப் பார்ப்போம்.

1. உத்தமத் தமிழ் எழுத்தாளனைப் பற்றி இனி நான் எதுவும் எழுதப் போவதில்லை. என்னைச் சீண்டுவதன் மூலம் அவர் பிராபல்யம் அடையலாம் என்று நினைக்கிறார். அதற்கு நான் இனிமேலும் இரையாக மாட்டேன்.

2. எது விக்னேஷ் சொந்தக் கதை ? ' கடவுளும் நானும் ' என்ற தொடரில் வருவது சொந்தக் கதையா ? குட்டிக் கதைகள் சொந்தக் கதையா ? எது சொந்தக் கதை ? இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் பலமுறை பதில் சொல்லியாகி விட்டது. பதில் சொல்லப் பட்ட விஷயங்களையே திரும்பத் திரும்ப கேள்வியாகக் கேட்டு அலுப்பூட்டக் கூடாது. சரி , உங்களுக்காக திரும்பவும் சொல்கிறேன்.

சார்லஸ் ப்யூகாவ்ஸ்கியின் எழுத்துக்கள் அனைத்தும் சுய சரிதைத் தன்மை கொண்டவையே. ஆனால் , அவை சுய சரிதை என்று அழைக்கப் படுவதில்லை. மேலும் Serge Doubrovsky என்ற ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். இவர் 1977-இல் எழுதிய Fils என்ற நாவல் மூலமாகவே Autofiction என்ற ஒரு புதுவகை எழுத்து முறை உலக இலக்கியத்தில் அறிமுகமானது. இவருடைய நாவல்கள் எதுவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் படவில்லை. மொழி பெயர்ப்பது மிகவும் அசாத்தியமாக உள்ளது என்று கருதப் படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.

தனது உறவினர்களில் ஒருவர் இலங்கைத் தமிழர் எனவும் , அவர் மூலமாக என்னைப் பற்றியும் ஸீரோ டிகிரி பற்றியும் கேள்விப் பட்டதாகவும் , அந்த உறவினர் ‘ உங்கள் இருவருக்கும் எழுத்துப் பாணியில் நிரம்ப ஒற்றுமை இருக்கிறது ' என்று சொல்லி , அவரே ஸீரோ டிகிரியின் சில பகுதிகளை ஃப்ரெஞ்சில் மொழி பெயர்த்துச் சொன்னதாகவும் எழுதியிருந்தார். ‘ நம் இருவருக்கும் ஆச்சரியகரமான ஒற்றுமை இருக்கிறது ' என்று முடித்திருந்தார்.

' எனக்கு ஒன்றும் ஆச்சரியம் ஏற்படவில்லை ' என்று அவருக்கு நான் பதில் எழுதினேன். ஏனென்றால் , என்னுடைய எழுத்து இயக்கம் ஃப்ரெஞ்ச் கலை இலக்கியச் சூழலைப் பின்னணியாகக் கொண்டது. முக்கியமாக , துப்ராவ்ஸ்கிக்கும் எனக்கும் மிகப் பிடித்த இயக்குனர் கோதார் (Jean-Luc Godard ). என்னுடைய எழுத்துப் பாணிக்கு இவருடைய படங்களே முன்னோடி என்றும் கூறலாம்.

இவரை அடுத்து Michel Houellebecq என்ற ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஆட்டோஃபிக்‌ஷன் எழுதுகிறார். இவரைப் பற்றி ' மற்றொரு அந்நியன் ' என்ற தலைப்பில் உயிர்மையில் எழுதி வரும் பத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். அது ‘ வரம்பு மீறிய பிரதிகள் ' என்ற என்னுடைய கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளது.

3. கடந்த ஆறு ஆண்டுகளாக மலையாளப் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அவை தமிழில் வரும் இலக்கியப் பத்திரிகைகளை விட காத்திரமானவை. காரணம் , அவை லட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. மேலும் , இங்குள்ள நிலைமையைப் போல் அந்தப் பத்திரிகைகள் விளம்பரங்களையோ , அரசு உதவியையோ எதிர்பார்த்துக் கையேந்த வேண்டியதில்லை. மாறாக , வர்த்தக நிறுவனங்களும் , அரசாங்கமும்தான் இந்தப் பத்திரிகைகளின் தயவை நாடி நின்று கொண்டிருக்கின்றன. அங்கே மந்திரிகளையும் , நடிகர்களையும் விட எழுத்தாளர்களுக்கே மதிப்பு அதிகம். ஒவ்வொரு தொலைக்காட்சிப் பேட்டியிலும் ஜோதிர் மயி “ நான் சாரு நிவேதிதாவின் ரசிகை ” என்று சொல்வதாக அறிகிறேன்.

ஒரு மூன்று ஆண்டுக் காலம் இரண்டு வாரப் பத்திரிகைகளில் பத்தியும், மற்றொரு வாரப் பத்திரிகையில் நாவலும் (ராஸ லீலா) எழுதி வந்தேன். கடந்த ஆறு ஆண்டுகளில் என்னுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் மலையாளத்தில்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதற்குப் பிறகுதான் அவை புத்தக வடிவம் பெறுகின்றன. ‘ ராஸ லீலா ’ தமிழில் வெளி வருவதற்கு முன்பே கலா கௌமுதியில் இரண்டு ஆண்டுகள் தொடராக வந்து விட்டது.

இவ்வளவையும் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் அரைகுறைகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும்தான் மதிப்பு. என்னைப் போன்ற சீரியஸான எழுத்தாளர்களுக்கு அல்ல.

மேலும், உயிர்மையில் வெளிவரும் என்னுடைய கட்டுரைகள் பெரும்பாலும் வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்து பரவலாக விவாதிக்கப் பட வேண்டியவை.

4. எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது. தெரிந்திருந்தால் ஆங்கிலத்தில்தான் எழுதியிருப்பேன். தமிழில் எழுதியிருக்க மாட்டேன். அப்படி எழுதியிருந்தால் ஸல்மான் ருஷ்டி, ஓரான் பாமுக் அளவுக்கு பிரபலமாகி இருக்கலாம்.

செக்ஸ் பற்றி ஏன் எழுதக் கூடாது? நம்முடைய தாயும் தந்தையும் செக்ஸ் வைத்துக் கொண்டதால்தானே நாம் இந்த உலகத்தில் உயிர் பெற்றிருக்கிறோம்? செக்ஸ் இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா? செக்ஸ் பசியைப் போன்றது. இதைப் படிப்பதை நிறுத்தி விட்டு உலகில் பசி என்ற உணர்வு இல்லாமல் உலக உயிரினங்கள் படைக்கப் பட்டிருந்தால் இந்த உலகம், உலக வாழ்க்கை, மனித உறவுகள், சமூகம், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் என்ன ஆகியிருக்கும் என்று ஒருக்கணம் யோசித்துப் பாருங்கள்.

பசி இல்லாவிட்டால் யாராவது வேலைக்குச் செல்லத் தயாராயிருப்பார்களா? உழைக்கத் தயாராயிருப்பார்களா? யாருமே உழைக்கத் தயாராக இல்லாவிட்டால் மனித இனம் என்னவாகும்? ஆதாம் ஏவாளைப் போல் ஆதி மனிதர்களாகவே வாழ வேண்டியிருந்திருக்கும். அதைப் போலவேதான் செக்ஸும். செக்ஸ் இல்லாவிட்டால் உயிர்கள் அழிந்து பூமிப் பரப்பும் ஒரு செவ்வாய் கிரகத்தைப் போல் வெற்றுப் பிரதேசமாக ஆகி விடும்.

ஏன் விக்னேஷ், உங்களுக்கு இப்படியெல்லாம் விபரீத ஆசை? ஏதாவது காதல் தோல்வியா? பரவாயில்லை, மீண்டும் முயற்சி செய்யுங்கள். முயற்சி உடையார் வெற்றி அடைவார்.

அது சரி, அது என்ன ஆங்கிலத்தில் செக்ஸ் எழுதலாம்; தமிழில் எழுதக் கூடாது? ஏன், தமிழர்கள் யாரும் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லையோ?

‘ கேரளாவில் வீதிக்குச் சென்று போராடுகிறேன். தமிழ்நாட்டுப் பிரச்சினைகளுக்காக எதுவுமே செய்வதில்லை. அது பற்றி எழுதுவது கூட இல்லை. ’

ஏனென்றால், கேரளத்தில் நான் ஒரு கூட்டத்தில் பேசினால், அதை அத்தனை தினசரிகளிலும் வெளியிடுகிறார்கள். இங்கே நான் போராடினால் என்னை யாருக்குத் தெரியும்? அடையாளமே இல்லாத ஒரு ஆள் இங்கே என்ன செய்ய முடியும்?

என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டைப் போன்ற கலாச்சார சுரணையற்ற ஒரு பிரதேசத்தில் எழுதுவது என்பதே ஒரு போராட்டம்தான். எப்படி என்று சொல்கிறேன்.

* * *

5.7.2008.

4.45 p.m.