ஒரு கடிதமும் சில விளக்கங்களும்...

 

டியர் சாரு ,

நான் தன்யா. கல்லூரி மாணவி. உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகை. நான் அழும் போதும் , தனியாக இருக்கும் போதும் , எனக்கு அன்பும் ஆதரவும் தேவைப்படும் போதும் உங்கள் எழுத்தையே படிக்க ஆரம்பிக்கிறேன். உங்கள் எழுத்து சமயங்களில் தென்றலைப் போலவும் , சமயங்களில் புயலைப் போலவும் , சமயங்களில் இடியைப் போலவும் இருக்கிறது...ம்ஹூம்...நான் நினைப்பதை என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

மிகப் பெரிய ராக் இசை விழாக்களில் ரசிகர்கள் சந்தோஷம் தாங்க முடியாமல் கத்தி அழுவதைப் பார்த்திருக்கிறீர்களா ? அதைப் போல் உங்கள் எழுத்தைப் படிக்கும் போதும் சந்தோஷ மிகுதியால் அழுத யாரையாவது பார்த்ததுண்டா நீங்கள் ? இல்லையானால் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் எதுவாக இருந்தாலும் சரி , Isabelle Huppert, அராபிய இசை அல்லது ஒரு பாலைவனச் சிறையில் 20 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த ஒருவரின் அனுபவம்...இது எல்லாவற்றையும் தமிழில் எழுதும் ஒரே ஆள் நீங்கள்தான்.

I like ur writings..I love ur writings...

இந்த எருமைத்தனமான சமூகத்தில் நீங்கள் செய்து வரும் அற்புதமான பணிக்கு நன்றி...

Luv,

Dhanya.

சமீப காலத்தில் மாணவ சமூகத்திடமிருந்து எனக்கு இது போன்று பல கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இந்தக் கடிதத்தை மட்டுமே இங்கு நான் வெளியிடும் காரணம் , இது ஒரு விவரிக்க இயலாத தனிமை உணர்வையும் , அத்தனிமை உணர்வை வாசிப்பின் மூலமான கொண்டாட்டத்தின் வாயிலாகக் கடக்க முயல்வதையும் வெளிப்படுத்துகிறது என்பதால்தான். இது போன்ற எதிர்வினைகளை நான் கேரளத்தில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். இப்போது தமிழ் நாட்டு மாணவர்களிடமும் இந்த முன்னேற்றத்தைக் காண்பது சந்தோஷத்தை அளிக்கிறது. அதே சமயம் என்னுடைய பொறுப்பும் கூடுவதை உணர்கிறேன்.

மற்றொரு விஷயம் , வசை கடிதங்களும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன. அவை , அக்கடிதம் எழுதுபவர்களின் மனோ வியாதியை வெளிப்படுத்துகின்றன என்பதால் அவற்றை நான் ஒரு வாக்கியத்திற்கு மேல் வாசிப்பதில்லை. ஆனால் அந்த மனோ வியாதியஸ்தர்களும் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ' என் அன்புக்குரிய சாருவுக்கு... ' என்று ஆரம்பித்து இரண்டாவது வாக்கியத்தில்தான் ' டேய் ங்கோத்தா... ' என்று தங்களின் நிஜ நிலைக்கு வருகிறார்கள். வெறுப்பு என்பது ஒரு நோய். நான் என்றுமே ஆரோக்கியமாக இருக்கவும் , வாழவும் ஆசைப் படுகிறேன்.

மேலும் , என்னைப் பற்றிய ஒரு தவறான பிம்பம் என்னுடைய கடுமையான விமர்சனங்களின் மூலம் உருவாகி வருவதை கவலையுடன் கவனித்து வருகிறேன். நண்பர்களே , தயவு செய்து என்னை கமல்ஹாசனைப் போல் தனிமைப் படுத்தி விடாதீர்கள். நந்தினி சொன்னாள் , " உங்களுக்கு குட் மார்னிங் சொல்வதற்கே பயமாக இருக்கிறது" என்று.

என்னுடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கனிமொழி சொன்னார் ; " எனக்குத் தெரிந்து சாரு ஒருவரிடம்தான் அவரைப் பற்றிய எத்தனை கடுமையான விமர்சனத்தையும் ஒரு போன் போட்டு சொல்ல முடியும் ; விமர்சனங்களை மிகவும் sportive- ஆக எடுத்துக் கொள்பவர்" என்று. இதை கனிமொழி தனது சொந்த அனுபவத்திலிருந்தே சொன்னார். ஆனால் , ஒரு சில மனிதர்கள் அவர்கள் விமர்சிக்கப் படும்போது எவ்வளவு பதற்றமடைகிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். என்னுடைய ரைட்டரை (லாப்ரடார் க்ராஸ்) வாக்கிங் அழைத்துச் செல்லும் போது அது யார் வீட்டு வாசலிலாவதுதான் மூச்சா , கக்கா எல்லாம் போகும். அதனால் இவ்விஷயத்தில் நான் சற்று கவனமாக இருப்பதே வழக்கம். ஆனால் சாலையை அடைத்துக் கொண்டு பல கார்கள் நிற்கும் ; சாலையிலேயே தங்கள் வீட்டு வாசற்படிகளையும் கட்டி விட்டிருப்பார்கள். அதையெல்லாம் நாம் கேட்க முடியாது. ஆனால் ரைட்டரும் ஒன்றும் சாமானியப் பட்டதல்ல. நான் ஒரு masochist என்றால் ரைட்டர் ஒரு sadist. இஸ்திரி போடுபவரின் இஸ்திரி வண்டி , மல்லிகைப் பூ கட்டி விற்கும் பூக்காரப் பெண் அமரும் இடம் என்று பார்த்துப் பார்த்துத்தான் கக்கா போகும். நானும் அதை அடிக்கடி "நீ அடுத்த ஜென்மத்தில் பன்றியாகத்தான் பிறப்பாய்" என்று சபிப்பது வழக்கம்.

இந்த நிலையில் நான் ஒருநாள் சற்றே கவனப் பிசகாக இருந்து விட்ட போது ரைட்டர் ஒரு வீட்டின் எதிரே ரோட்டில் கக்கா போய் விட்டது. அது நட்ட நடு ரோடு. அந்த வீட்டுக்கும் அந்த இடத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அந்த வீட்டின் வாட்ச்மேன் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார். அப்போது நான் "கொஞ்சம் பொறுங்கள் ; இதோ வந்து சுத்தப் படுத்தி விடுகிறேன்" என்று சொல்லி விட்டு வந்து நிறைய காகிதங்களை எடுத்து வந்து அந்த கக்காவையெல்லாம் அள்ளிக் கொண்டு போய் குப்பையில் போட்டேன். அந்த ஆள் சட்டென்று திட்டுவதை நிறுத்தி விட்டார்.

இதற்கும் மேல் என்னைப் பற்றி என்ன சொல்ல ?

***

4.7.2008.

10.25 p.m.