| தசாவதாரம் விமர்சனத்தில் சில விபரப் பிழைகள் நேர்ந்து விட்டன. ' ஆடலுடன் பாடலைக் கேட்டு ' என்ற பாடல் இடம் பெறுவது எங்க வீட்டுப் பிள்ளை அல்ல; குடியிருந்த கோவில் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் சுசிலா என்ற வாசகி. நன்றி. அது போல் இருபது முப்பது பேர் கலந்து கொள்ளும் ' போர்க்களக் ' காட்சி இடம் பெறுவது திருவிளையாடல் அல்ல; ராஜ ராஜ சோழன். மற்றொரு முக்கியப் பிழை: போலீஸ் ஸ்டேஷன், மசூதி. அப்பிழை திருத்தப்பட்ட பிறகே உயிர்மையில் வெளி வந்தது. இணைய தளத்தில் திருத்தப் படாமல் வந்து விட்டது.
திரைப்படத் துறை நண்பர்கள் பலர் போனில் பாராட்டினார்கள், சற்று பயத்துடனேயே. அவர்கள் பெயரையெல்லாம் சொல்ல மாட்டேன். எனவே பயம் வேண்டாம்.
***
தசாவதாரம் பற்றிய ஒரு கடிதம்:
நாய்க்கர் சாதியைச் சேர்ந்த ஒருவனும், ஒரு பிராமண இளைஞனும் அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் போது, தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் மட்டும் மணல் கொள்ளையைத் தடுப்பவனாகவும், தமிழ் மொழிப் பற்றாளனாகவும் காண்பிக்கப் பட்டிருப்பது ஏன் ? தலித் சமூகத்தினர் தமிழை மட்டும் படித்துக் கொண்டு, ஆங்கிலம் பேசத் தெரியாத, படிப்பறிவில்லாத கறுப்புத் தோல்காரர்கள் என்றே தமிழ் சினிமா இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறதா ? தலித் சமூகத்தைச் சேர்ந்த விக்ரம், பிரசாந்த் போன்ற நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று திரு கமல்ஹாசன் சற்றே திரும்பிப் பார்க்கட்டும். கமல்ஹாசன் பிறப்பதற்கு 38 ஆண்டுகளுக்கு முன்பாகவே 1916- இல் டாக்டர் அம்பேத்கர் டாக்டர் பட்டத்தை வாங்கி விட்டார் என்பது கமலுக்குத் தெரியுமா ?
தலித் சமூகத்தினரை இப்படியெல்லாம் சினிமாவில் காண்பிப்பது மக்கள் மனதில் அவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் ஏற்படவே உதவி செய்யும்; உதாரணமாக, செந்திலை அவர்கள் தலித்தாகவும், பிரசாந்தை பிராமணராகவும் அவர்கள் கற்பிதம் செய்து கொள்வது போல...
ஜீவா , பெங்களூர்.
***
|