பத்து புத்தகங்கள்

 

சென்னையில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை புத்தகச் சந்தை நடக்க உள்ளது. தமிழ் நாட்டில் நடக்கும் புத்தகச் சந்தைகளின் மீது எனக்கு ஒரு சிறிதும் மரியாதை கிடையாது. காரணம்: இங்கே பதிப்பாளர்கள் மூன்று கோடிக்கு புத்தகங்கள் விற்றன, முப்பது கோடிக்கு விற்றன என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டாலும் என்ன புத்தகங்கள் விற்கின்றன என்று பாருங்கள். டிக்‌ஷனரி, சமையல், ஆன்மீகம் போன்ற சப்ஜெக்டுகளில்தானே புத்தகங்கள் விற்கின்றன. இவையெல்லாம் புத்தகங்களா?

நான் ஒரு முறை கோட்டயத்தில் நடந்த புத்தகச் சந்தையில் உரையாற்றுவதற்காக அழைக்கப் பட்டிருந்தேன். சென்னை புத்தகச் சந்தையை ஒப்பிடும் போது மிகச் சிறியதாகவே இருந்தது கோட்டயம் சந்தை. நூறு கடைகள் இருந்தன. ஆனால் சென்னையை விட கோட்டயம் சந்தை 96 மடங்கு பெரிது என்று சொல்லுவேன். புள்ளி விபரம் பாருங்கள்: சென்னையில் 1000 கடைகள்; அதில் இலக்கியப் புத்தகங்கள் விற்கும் கடைகள் 4. கோட்டயத்தில் 99 கடைகள் இலக்கியப் புத்தகங்கள். ஒரே ஒரு கடையில் மட்டும் பாசி மணி விற்றுக் கொண்டிருந்தார்கள். ஏன் என்று கேட்டேன். “சும்மா ஒரு மாறுதலுக்காக ” என்றார்கள். சென்ற மாதம் திருவனந்தபுரத்தில் D.C.Books நிறுவனம் ஒரு அகில உலகப் புத்தகச் சந்தையை நடத்தியது. அதில் ஒருநாள் உரையாற்றுவதற்காக அழைக்கப் பட்டிருந்தேன். அங்கே நூற்றுக்கு நூறு இலக்கியப் புத்தகங்கள்தான். அந்த ஒரே ஒரு பாசி மணிக் கடை கூட இல்லை. யோசித்துப் பாருங்கள். ஒரு பதிப்பகத்தால் ஒரு அகில உலகப் புத்தகச் சந்தையை இங்கே சென்னையில் நடத்த முடியுமா என்று?

பரவாயில்லை. இப்படி ஒரு மோசமான நிலைமையிலும் மனுஷ்ய புத்திரன் இந்த ஆண்டு புத்தகச் சந்தையின் போது 70 புத்தகங்களை வெளியிடுகிறார். அவருடைய மன உறுதியைக் கண்டு நான் மிகவும் வியக்கிறேன். இந்த 70 புத்தகங்களில் 10 புத்தகங்கள் அடியேனுடையவை. ” இதில் ஒவ்வொரு டைட்டிலிலும் ஒரு நூறு புத்தகங்கள் விற்றாலே போதும்; இவ்வளவு சிரமப் பட்டதற்கு அர்த்தம் இருக்கும் ” என்றார் மனுஷ்ய புத்திரன். என்ன? அவர் சொல்வதை நிறைவேற்றுவீர்களா? பத்து புத்தகங்களுக்கும் சுமார் 2000 ரூ. ஆகலாம். அய்யய்யோ என்று அலறக் கூடாது. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ விலையை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அல்லது, சிட்டி செண்டரில் ஐநாக்ஸ் ஹாலில் குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்க எவ்வளவு தொகை ஆகிறது என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். மேலும், இந்தப் புத்தக விஷயத்தில் ஒரு பைசா கூட லாபம் கிடையாது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த லாபத்திற்காகக் கலந்து கொண்டார்கள்? அதே காரணம்தான் மனுஷ்ய புத்திரனும், செல்வியும் இப்படி ராப்பகலாக உழைத்து இந்த 70 புத்தகங்களையும் கொண்டு வருவதும்...

இந்தப் பத்து புத்தகங்களுக்குமான வெளியீட்டு விழா வரும் ஜனவரி மாதம் ஏழாம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள புக் பாய்ண்ட் என்ற இடத்தில் நடைபெறும். ஸ்பென்ஸர் ப்ளாசா கட்டிடத்தின் எதிரே உள்ளது இந்த இடம்.

புத்தக விபரம்:

 

  1. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் (திருத்திய பதிப்பு)
  2. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் (சிறுகதைத் தொகுதி)
  3. திசை அறியும் பறவைகள் (கட்டுரைத் தொகுதி)
  4. மூடுபனிச் சாலை (கட்டுரைத் தொகுதி)
  5. கடவுளும் நானும் (கட்டுரைத் தொகுதி)
  6. எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது (கட்டுரைத் தொகுதி)
  7. காமரூபக் கதைகள் (நாவல்)
  8. சினிமா சினிமா (கட்டுரைத் தொகுதி)
  9. தீராக்காதலி (கட்டுரைத் தொகுதி)
  10. ஆஸாதி ஆஸாதி ஆஸாதி (அரசியல் கட்டுரைகள்)

புத்தகத்தை வெளியிட இருக்கும் பிரமுகர்கள்:

 

  • மதன்
  • அழகிய பெரியவன்
  • சிவகாமி ஐ.ஏ.ஸ்.
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • சுதேசமித்திரன்
  • இந்திரா பார்த்தசாரதி
  • சசி குமார் (இயக்குனர்)
  • அமீர் (இயக்குனர்)
  • பிரபஞ்சன்
  • ந. முத்துசாமி

இவர்களில் மதனையும், பிரபஞ்சனையும் தவிர மற்ற அனைவரையும் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி, வருகிறீர்களா என்று கேட்டு, என்னுடைய வழக்கப்படி தவறான தேதியைச் சொல்லி விட்டேன். (மதனையும் பிரபஞ்சனையும் மனுஷ்ய புத்திரன் தொடர்பு கொண்டதால் ஒன்றும் குழப்பம் நேரவில்லை). அவர்களும் நான் வாக்கியத்தைக் கூட முடிக்கவில்லை, வருகிறேன் என்று சொல்லி விட்டார்கள். தேதியைக் கேட்டதுமே ஒரு சிறிதும் யோசிக்காமல், தயங்காமல் அவர்கள் சம்மதம் தெரிவித்த விதம் என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது. அப்புறம்தான் மனுஷ்ய புத்திரனிடம் பேசிய போது தேதியில் சொதப்பி விட்ட விஷயம் புரிந்தது. உடனே அனைவருக்கும் சரியான தேதியை மெஸேஜ் அனுப்பினேன். அடுத்த நிமிடமே ஓகே என்று வந்தது. வெளியீட்டு விழாவுக்கு வர இசைந்த மதன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, சிவகாமி ஐ.ஏ.எஸ்., தமிழச்சி தங்கபாண்டியன், அமீர், சசி குமார், அழகிய பெரியவன், சுதேசமித்திரன் அனைவருக்கும் என் நன்றி.

கூட்டம் முடிந்த பிறகு வேறோர் இடத்தில் ’ தேநீர் ’ விருந்து உண்டு. வர விருப்பமுள்ளவர்கள் நர்சிம்மை தொடர்பு கொள்ளவும்.

சென்ற ஆண்டு மொத்தம் 3000 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். இன்னும் ஒரு ஐந்தாறு புத்தகங்கள் கொண்டு வர விஷயம் இருக்கிறது. உதாரணமாக, கேள்வி பதில், நேர் காணல்கள் போன்றவை. அதையும் இப்போதே கையோடு கையாகக் கொண்டு வந்து விடலாமே என்று மனுஷ்ய புத்திரனிடம் அப்பாவியாகக் கேட்டேன். பதிலுக்கு அவர் ஒரு முறை முறைத்தார். ‘சரி, நாம் கேட்டதில் ஏதோ தப்பு இருக்கும் போலிருக்கிறது ’ என்று நினைத்த படி அவருக்குப் ப்ரீதியான வேறோர் விஷயத்துக்குப் பேச்சை மாற்றி விட்டேன். என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா? ம்ஹும். சொல்ல மாட்டேன். என்னுடைய ராஸ லீலாவைத்தான் நான் எழுத முடியும். மற்றவர்களின் ராஸ லீலாவை அல்ல...