
கல்லூரிப்படிப்பை முடித்த கையோடு ஒரு வருடமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வெட்டியாக
சுத்திக்கொண்டிருந்த காலம் அது. நண்பன் ஒருவனை லண்டன் அனுப்புவதாக சொல்லி சென்னை பெசன்ட் நகரைச்
சேர்ந்த ட்ராவல் ஏஜன்சி இரண்டு லட்சம் முன்பணம் வாங்கி ஏமாற்றிவிட்டது. அந்த பணத்தை வசூல் செய்ய
நான் நண்பர்கள் சிலரும் சென்னை கிளம்பினோம். சென்னை கிளம்பும் முன்பே எனக்கு சில தீர்மானங்கள் இருந்தன. முதல் தீர்மானம் சென்னையில் மட்டுமே கிடைக்கும் சோமபானம் "சுண்டக்கஞ்சி"யை சுவை பார்த்துவிடவேண்டும் என்பது.
இரண்டு மூன்று நாட்கள் நாயாய் அலைந்து பணத்தை மீட்டினாலும் கிளம்பும் முன்பு ஏகமனதாக ஒரு முடிவு
எடுத்து அந்த வஸ்துவை பருகச்சென்றோம். குடிசையினுள் நுழைந்தால் நூற்றுக்கணக்கான மாணவர்கள்
பாத்ரூமில் மட்டுமே பயன்படுத்தப்படும் மஃகில் சுண்டக்கஞ்சி குடித்துக்கொண்டிருந்தனர். பார்க்கவே கண்றாவியாக
இருந்தது, என்றாலும் தீர்மானங்களை எப்பொழுதுமே நிறைவேற்றாமல் விட்டதில்லை. அதுவும் குடிக்கும் விஷயத்தில் பின்வாங்கினால் அவமானமாக கருதும் பக்குவம் அப்போது. கூட்டம் குறைவாக உள்ள
குடிசை (பந்தல் என்றுதான் சொல்லவேண்டும்) ஒன்றில் நுழைந்து ஆர்டர் செய்தோம். ஒரு அம்மணி இடுப்பில்
குடத்தோடு கொண்டுவந்து கொடுத்தார். கழனித்தொட்டியில் வரும் வீச்சத்திற்கும் சுண்டக்கஞ்சிக்கும் எவ்வித
வித்தியாசமும் இல்லை. இத எப்டிடா குடிக்கறானுங்க என்று சொல்லி ஓல்ட் மங் அடிப்பதை போல கண்ணை
மூடிக்கொண்டு அடித்தோம். அந்த அம்மணி கரப்பான் பூச்சியை போல எதோ ஒன்றை வறுத்து எடுத்து வந்தார்
அந்த சமயத்தில் செம சுவையாக இருந்தது. அற்புதமான சுவையை உடைய அந்த பூச்சி வகையை அதற்கு பின்பு
இன்னமும் சாப்பிடவில்லை. கொண்டுபோயிருந்த ஓல்ட் மங்குடன் கலந்து அடித்தபோது போதை உச்சத்திற்கு சென்றது. தள்ளாடியபடியே சுற்றிவிட்டு அங்கே மணலிலே படுத்துக்கொள்ளலாம் என்ற யோசனையை மறுத்து
காருக்குள் திணித்துக்கொண்டு சென்றனர். அப்போது மணி இரண்டு இருக்கும்.
எப்போது அண்ணாநகர் வந்தேன் என்ற நினைவில்லை. அதிகாலை எட்டு மணிக்கு அறை அதிர்வதுபோல
உணர்ந்தேன். அந்த இரண்டாவது மாடி கட்டாந்தரையில் யாராவது நடந்துபோனாலே அதிரும். ஆனால்
மூன்றாவது முறை அதிரும்போது என்னை அலேக்காக தூக்கிக்கொண்டு கீழே வந்துவிட்டனர். கீழே மக்கள்
வெள்ளம். என்ன என்று சுதாரிப்பதற்குள் பூகம்பம் என்று கலவரப்படுத்தினார்கள். முழுதாக தெளிந்து கிளம்பி
பெசன்ட் நகர் பீச்சை அடைந்தபோது அங்கே பந்தல்களோ, குடிசைகளோ எதுவுமே இல்லை. சுனாமி துடைத்து
எடுத்துவிட்டது.
-
கதிர்
|