எப்படி எழுதுகிறேன்?

 


கேள்வி:

"நல்ல ஒரு சொற்றொடர் மனதில் வந்தால் போதும்; அப்படியே ஒரு கதையை எழுதிவிடலாம். எந்தத் திட்டமிடலும் வேண்டாம். கரு கூட தேவை இல்லை. இது பல எழுத்தாளர்களின் வழிமுறையே. என் அனுபவம் என்னவென்றால் நான் கட்டுரையைக் கூட அப்படியே எழுதுகிறேன். ஒரு சொல் ஒரு வரி போதும்; ஒரு கட்டுரை, ஓர் இலக்கிய ஆய்வை எழுதி முடித்துவிடலாம். 'எஸ்.பொன்னுத்துரை'பற்றிய கட்டுரை அந்த முதல் வரியின் தூண்டுதலே. பிற எல்லாமே நினைவின் சேமிப்பில் இருந்து எழும். நான் இன்றுவரை குறிப்புகள் வைத்துக்கொண்டு எதையுமே எழுதியதில்லை."

மேலே குறிப்பிட்டுள்ள விஷயத்தை சொல்லியிருப்பவர் ஒரு எழுத்தாளர். தற்செயலாக இதனை இணைய தளத்திலிருந்து படிக்க நேர்ந்தது. என் கேள்வி என்னவென்றால் நீங்கள் எவ்வாறு ஒரு கதை அல்லது கட்டுரைய எழுதத் திட்டமிடுகிறீர்கள். ஏனென்றால் பல எழுத்தாளர்கள் மேற்சொன்ன முறையையே பின்பற்றுகிறார்கள் என்று மேற்படி எழுத்தாளர் சொல்கிறார். இதில் நான் எந்தத் திட்டமிடுதலும் கொள்வதில்லை. திடீரென்று எழுந்த கேள்வி.

அன்புடன்,
ஃபெலிக்ஸ்.

* * *

பதில்:

நான் எப்படி எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்குப் பதில் தெரியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று. சில எழுத்தாளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். மேலே உள்ளவாறு கூறியிருப்பவரும் அப்படிப் பட்டவர்தான் போலும். அசப்பில் பார்த்தால் உத்தமத் தமிழ் எழுத்தாளன் போல் தெரிகிறது. ஏனென்றால் அவர் ஒருவர்தான் இப்படியெல்லாம் தெளிவாகப் பேசுவார்.

* * *

மீண்டும் ஃபெலிக்ஸ்:

இன்று இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக அந்த வரிகள் என் கண்ணில் பட்டது. படித்த போது முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. இது மாதிரியான கேள்வியை கேட்டு உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் முதலில் என்னை மன்னிக்கவும்.

உங்களிடம் இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்க வேண்டும்?

எனக்கு வேறு எந்த எழுத்தாளருடனும் தற்போது எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. எல்லோருடைய எழுத்துக்களையும் படிப்பதோடு சரி. நான் பத்திரிகை நடத்தும் போது பலருடன் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால், அவர்களின் எழுத்துக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது. வெறும் பொய்யர்களாகவே இருந்தார்கள். நான் பார்த்ததில் வெகு சிலரே குறைந்தபட்ச மனித நேயமாவது உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஒரு குறைந்தபட்ச உண்மைத் தன்மையைக் கூட அவர்களிடம் காண முடியாததால் நிறைய விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் நொந்து போனதுண்டு. பின்னர் ஒவ்வொருவரின் தொடர்பையும் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின் பத்திரிக்கையும் நின்று போனதால், இலக்கியத்தைப் பொறுத்தவரை வாசிப்பது தவிர வேறு எந்த உறவையும் இலக்கியத்தோடு வைத்து கொள்ளவில்லை. தற்போது எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

எனவேதான் என் முதல் மின்னஞ்சலில் நான் யாருடைய வாசகனாகவும் இருக்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தேன்.

I like women, wine and gods என்ற உங்களின் வரிகள் எனக்குப் பிடித்திருந்தது (என்னைப் பற்றி). இவ்வளவு திறந்த மனதோடு நான் இதுவரை எந்தத் தமிழ் எழுத்தாளரையும் பார்த்தில்லை. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. இது அவரவர் நம்பிக்கையைச் சார்ந்தது. நீங்கள் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு வந்ததில் உங்களிடம் வெறுப்பு கொண்டு உங்களைத் திட்டியவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அது உங்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயம். இதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை.

இதைத் தாண்டி நான் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது குறைந்தபட்ச மனித நேயம் மற்றும் எழுத்தாளருக்கான தனிப்பட்ட ஆளுமை. இதில் உங்களிடம் ஒன்று குறைந்திருந்தாலும் என்னால் உங்களை எழுத்தாளாராக – ஏன், ஒரு மனிதராகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. பலரிடம் இலக்கிய ஆளுமை இருக்கும்; ஆனால் குறைந்தபட்ச மனித நேயம் கூட இருக்காது.

சமீப காலமாக இலக்கிய வட்டத்தில் உங்களுடன் மட்டுமே மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக தொடர்பை ஆரம்பித்துள்ளேன். எனவேதான் அந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கத் தோன்றியது.

அதுசரி, யார் அந்த எழுத்தாளர்?

நீங்கள் சொல்லும் அந்த உத்தமத் தமிழ் எழுத்தாளர்தான் அவர். அவருடைய இணைய தளத்தில்தான் அந்தக் கருமத்தைப் பார்க்க நேர்ந்தது.

இன்னும் நான் சாரு என்ற எழுத்தாளரைப் பற்றி நிறைய படிக்க வேண்டியுள்ளது. எனவே, எனக்குள் உதிக்கும் சில கேள்விகள் அல்லது சந்தேகங்கள் அவ்வப்போது கேட்பேன். தயவு செய்து கோபம் வந்தாலும் கொஞ்சம் அடக்கிக் கொண்டு பதில் தாருங்கள். என் கேள்விகள் எல்லாம் இலக்கியம், அதன் சூழல் பற்றி மட்டுமே இருக்கும்.

மணி அதிகாலை 1 ஆகிவிட்டது. தூங்கப் போகிறேன்.

நன்றி.

அன்புடன்
ஃபெலிக்ஸ்

* * *

ஃபெலிக்ஸ்,

நான் உங்களுக்கு எழுதிய பதிலை இரவு பனிரண்டு மணி அளவில் டைப் செய்ததால் அந்த மாதிரி எழுதி விட்டேன். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒவ்வொரு வேளையிலும் எனக்கு வேறு வேறு மாதிரியான பதில்கள் கிடைக்கின்றன. இப்போது அதிகாலை ஐந்து மணி. இப்போது மனமும் சிந்தனையும் இந்த அதிகாலையைப் போலவே ரம்மியமாக இருக்கின்றது. இப்போது உங்கள் கேள்விக்கு வேறு மாதிரியான பதில் தோன்றுகிறது.

நான் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறேன். ஸீரோ டிகிரியின் பல பகுதிகளை ஒருவித பித்த நிலையிலேயே எழுதினேன். உறக்கத்தில் சில வரிகள் தோன்றும். அப்படியே எழுந்து எழுதி விடுவேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது சில வரிகள் தோன்றும். இதற்காகவே அப்போதெல்லாம் எப்போதும் பாக்கெட்டில் பென்சிலும் பேப்பரும் வைத்திருப்பேன். அதில் கிறுக்கிக் கொள்வேன்.

ஒருநாள் ஒரு நண்பரைப் பார்க்க பழவந்தாங்கல் சென்று விட்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மனதில் ஒரு நீண்ட கவிதையே ஓடியது. உடனே அங்கிருந்த பிளாட்பாரத் திண்ணையில் அமர்ந்து நான் பாட்டுக்கு எழுதிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு நேரம் சென்றது என்றே பிரக்ஞை இல்லை. எழுதி முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் வண்ணநிலவன். ”பத்து நிமிஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்; அவ்வளவு சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்தீர்” என்றார். ஸீரோ டிகிரியில் வரும் ‘முந்தின ஜென்மத்தில் நீ என் காதலியாக இருந்தாய்...’ என்று துவங்கும் கவிதை அது.

ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா? பின்னர் ஸீரோ டிகிரி புத்தகமாக வந்த பிறகு வண்ணநிலவன் ஒருநாள் என்னை எதேச்சையாக சந்தித்த போது “அது ஒரு போர்னோ நாவல்; குப்பை” என்றேல்லாம் பலவாறாக வைதார்!

இப்படி ஒரு பித்த (pschizoid) நிலையிலேயே என்னுடைய கதைகள் பலவும் எழுதப் பட்டதால் அதைப் பற்றிய கேள்விகளுக்கோ, விவாதங்களில் பங்கு பெறும் போதோ எதையாவது சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லி வைப்பேன். இதை வைத்துக் கொண்டு சில அசடுகள் ‘நான் தான் இவருக்கு இதையெல்லாம் எழுதிக் கொடுத்தேன்’ என்று உளறிக் கொண்டு அலைகின்றன. ‘அட மூடர்களா, டிக்கடி வாங்கிக் கொண்டு ஒருவன் பித்தனாக முடியுமா?’ என்று நினைத்துக் கொள்வேன்.

‘உன்னத சங்கீதம்’ என்ற என்னுடைய சிறுகதையை அப்படித்தான் ஒரு மாத காலம் ஒரே அறையில் அடைந்து கிடந்து, வெளியே எங்குமே செல்லாமல், மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தை மட்டுமே கேட்ட படி எழுதி முடித்தேன். என்னுடைய எழுத்தின் உச்சம் என்று நான் கருதுவது அந்தச் சிறுகதையைத்தான். அந்தக் கதைக்காக என்னைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஐரோப்பாவிலிருந்து வெளி வரும் சில தமிழ்ப் பத்திரிகைகள் எழுதின. ஐரோப்பியத் தமிழர்களிடையே கடும் விவாதத்தைக் கிளப்பிய கதை அது. பல பெண்கள் என்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர்; இன்னமும் கொள்கின்றனர். பல பெண்கள் என் கைகளுக்கு முத்தம் தந்தனர். ஆனால் இதெல்லாம் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களிடையே நடந்த விஷயம். நம்முடைய தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அப்படி ஒரு கதை வந்ததே தெரியாது.

இப்படி ஒவ்வொரு கதை பற்றியும் ஒவ்வொரு கதை இருக்கிறது. இன்றைய தினம் மாலைக்குள் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் நுழைந்தது பற்றி ஒரு கட்டுரை எழுதி கலா கௌமுதிக்கு அனுப்பி வைத்தாக வேண்டும். எப்படி எழுதப் போகிறேன் என்று ஒரு ஐடியா கூட இல்லை!

29.8.2008.
5.45 a.m.

* * *