கடிதம்

 

 

திரு.சாரு அவர்களுக்கு,

வணக்கம்.

நான் அதிஷா. உங்கள் எழுத்துக்களை சிறுவயது முதலே படித்து வருகிறேன். கோணல் பக்கங்களால் உங்கள் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். கோணல் பக்கங்கள் வெகு ஜன ஊடகங்களில் நின்று போனபின் ஆனந்த விகடனும் குமுதமும் மட்டுமே படிக்கின்ற எனக்கு உங்களது எழுத்துக்கள் ஒரு இனிமையான அனுபவத்தைத் தந்தன. உங்களுக்கு முன் சுஜாதாவால் மட்டுமே அந்த அனுபவத்தைத் தர முடிந்தது. கோணல் பக்கங்களுக்குப் பிறகு என்னால் உங்களை வெகுஜன ஊடகங்களில் காண இயலவில்லை. சென்ற வருடம் ஒரு நண்பர் மூலமாகவே உங்களது ஸீரோ டிகிரி நாவலும்,உங்களின் இணையதளமும் எனக்குத் தெரிய வந்தது. அன்றிலிருந்து நாள் தோறும் உங்கள் இணைய தளத்தில் உங்களது எழுத்துக்களை படிக்கவில்லையெனில் அந்த நாள் முழுவதுமே எதையோ இழந்தது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ஸீரோ டிகிரி நாவலை என்னால் ஒரே வாசிப்பில் புரிந்து கொள்ள முடியவில்லை. பல வாசிப்புகளுக்குப் பிறகே அதன் சாரம் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உங்களுடைய மற்ற புத்தகங்களையும் விரைவில் வாங்கிப் படிக்க இப்போதே பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டேன்.

உங்களைச் சந்திக்கவும் மிக ஆவலாக உள்ளேன். உங்களை என்னால் தொடர்பு கொள்ள முடிகிறது என்பதே எனக்குக் கனவு போல இருக்கிறது.

நன்றி

அன்புடன்
அதிஷா
27.8.2008.