கடிதம்

 

 

டியர் சாரு ,

" நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்களேன்..ப்ளீஸ்"...

எட்டாக் கனியாக இருந்த ராஸ லீலா கையில் கிடைத்தவுடன்.. ஆசை தீர முதலில் புத்தக வாசனையை முகர்ந்து பார்த்தேன்.. ஒரு 20 தடவை போன் செஞ்சிரிப்பீங்களா சார் என்று உயிர்மை பதிப்பகப் பெண் கேட்டதை சட்டை செய்யாமல் காரை அந்த முட்டுச்சந்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு ஓட்டிவரும் வரை அடக்கி கொண்டு , ரோடு வந்தவுடன் புத்தகத்தை மடியில் பிரித்து வைத்து ஓட்டிக் கொண்டே படிக்கத் துவங்கிவிட்டேன்...

வீட்டில் படித்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் இருப்பதால் பிரச்சனை ஏதும் இல்லாமல் புத்தகப் பயணம் தொடர்ந்தது.. பிறகு " பார்யாளின்" கேள்விகளும் தொலைக்காட்சி "கோ(ஓ)லங்கலும்" இடைஞ்சலாக இருந்ததால் எப்பொழுதும் போல் பாத்ரூமில் தஞ்சமடைந்தேன்.

" ராஸ லீலா எக்ஸ்பிரஸ்.. சென்னை புரசைவாக்கத்தில் இருந்து தடதடக்க ஆரம்பித்து.. டில்லி ஜி பி ரோடு , வேலூர் ப்ருந்தாவன் வித்தவுட்.. சென்னை என்று தடதடதட என்று வேகம் வேகம் வேகத்தில் நெஞ்சாங்கூடு அதிரத்துவங்கியது..

அரசு ஊழியர்களின் அன்றாடம் , ப்ருந்தா , சுஷ்மா , காயத்ரி , வித்தவுட் ராஜகோபால் என சட்சட் என்று மாறும் பிம்பங்கள். வித்தவுட்டிலே சென்றாலும் அலுமினிய முக்காலியில் செல்லும் ஜன்மம்.. போஸ்ட்டாபிஸ் புண்யாத்மாக்கள்.. அங்கு.. அங்கு மட்டுமே கிடைக்கும் கோந்து..என.."

தட் தட் தட். பாத்ரூம் கதவு அதிரத் தொடங்கியவுடன்."சே" நிம்மதியா வெளிக்கி கூட இருக்க விடமாட்டிங்களா என கத்திக் கொண்டே கதவைத்திறந்தால். வெளியே வீட்டில் உள்ள எல்லோரும் என்னமோ ஏதோ என பயந்துபோய் நின்று கொண்டிருந்தார்கள். பின்னே, மணி இரவு 2 ( கோலங்கள் 9 மணிக்கு 11 மணிவரை நாடகங்கள் ) யாரும் கவலைப்படவில்லை. பின் எங்கேயோ போயிருப்பேன் என்று நினைத்து நடு இரவு ஆனவுடன் மொபைலில் அழைத்தால்.. பாத்ரூமில் இருந்து சவுண்டு. இதில் 4 மிஸ்டுகால்கள் வேறு. எதையும் கவனிக்க வில்லை. அல்லது கவனிக்க விடவில்லை ராஸலீலா. விழுந்த திட்டை எல்லாம் ஒரு படத்தில் கவுண்டமனி ஃபெயில் ஆனதற்கு எல்லோரும் திட்டும் பொழுது வாயே திறக்காமல் உட்காந்திருப்பாரே. அதே போல் வாங்கிக் கொண்டேன்..

அதனால் எழுதுவதை நிறுத்துங்களேன். ஏனெனில் நிறுத்தாமல் படிக்கத் தோன்றுவதால். வீட்டில் அடி விழுகிறது.

அன்புடன்
நர்சிம்
சின்மயா நகர்.