அன்புள்ள சாரு,
இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். எனக்கு உங்களிடம் இருந்து மெயில்? அதுவும் நான் மெயில் செய்த 20 நிமிடத்துக்குள்? நான் அறிந்த, என்னை அறிந்த அத்தனை பேருக்கும் தொலைபேசி சொல்லி விட்டேன். இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
சரியான உச்சரிப்பு ர்வாண்டா என்பதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இந்த ஊர் மக்கள் அப்படித்தான் உச்சரிக்கிறார்கள். ஆனால் நாங்கள்தான் தவறாக ருவாண்டா என்கிறோம். இங்கு நடந்த Genocide பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களின் உலக ஞானம்
மீண்டும் வியக்க வைக்கிறது.
இரண்டு இனங்களுக்கு இடையேயான துவேஷம் பெல்ஜியம், ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற ஆக்ரமிப்பாளர்களால் நன்றாக வளர்க்கப்பட்டு வெறியாக உருவெடுத்து பல லட்சம் பேரை காவு வாங்கி இருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் பல முறை இந்தப் படுகொலைகள் நிகழ்ந்து இருந்தாலும் 1994-இல் நடந்ததுதான் உச்சகட்டம். கொலை செய்யப்பட்டவர்கள் 10 லட்சம் பேர். உடல் ஊனமுற்றவர்கள், வீடு இழந்து சொந்த நாட்டில் அகதிகளாய் ஆனவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வன்புணர்ச்சியால் எய்ட்ஸ் வந்தவர்கள் – கணக்கில் அடங்காது. 3 மாதம் தொடர்ந்த கொடூரங்கள் மற்ற உலக நாடுகளால் வேடிக்கை பார்க்கப்பட்டதுதான் கொடுமை.
இன்று நிலைமை வேறு. மற்ற ஆஃப்ரிக்க நாடுகளை விட இன்று மிகப் பாதுகாப்பான நாடு ர்வாண்டாதான். பக்கத்து நாடுகளில் நிலைமை இப்படி இல்லை. ஜனத்தொகையில் 14 சதவிகிதமே உள்ள சிறுபான்மையினரான துத்ஸிக்கள் 82 சதவிகிதம் உள்ள ஹூத்துக்களை ஆள்கிறார்கள் என்றாலும் ர்வாண்டாவில் இப்போது எந்தவித வன்முறையும் இல்லை. நாடும் மிகச் சீராக வளர்ந்து கொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் ர்வாண்டாவின் ஜனாதிபதியான Paul Kagame அவர்களையே சாரும்.
நான் ர்வாண்டாவின் தலைநகர் கிகாலியில் இருக்கிறேன். இந்தியர்கள் ஒரு 500-600 பேர் இருக்கிறோம். தமிழர்கள் - ஒரு 60. கிகாலி ஒரு மிகச் சிறிய ஊர். ஆனால் மிக ஒழுங்காக நிர்மாணிக்கப் பட்டது. சுற்றுப்புறச் சூழல் எந்த வகையிலும் கெடாத ஒரு கட்டமைப்பு. போக்குவரத்துப் பிரச்சினை எதுவும் இல்லை. மிகச் சுத்தமான, மிக அழகான ஒரு ஊர் இது.
சாப்பாடு பிரச்சனை எல்லாம் இல்லை. குடும்பத்தோடு இருக்கிறேன். இங்கு இருக்கும் குஜராத்திகள் புண்ணியத்தில் நமது அரிசி, பருப்பு எல்லாம் கிடைக்கிறது. அவ்வப்போது, இந்த ஊரின் உணவான Imvonge-ஐயும் ஒரு கை பார்ப்பதுண்டு (Imvonge is Rwandese Food that contains Irish Potato, Beans, Banana and Kasava).
இந்த முறை ஊருக்கு வரும்போது உங்களுடைய புத்தகங்களை முடிந்த அளவு வாங்க வேண்டுமென்று முடிவு செய்து இருக்கிறேன். முக்கியமாக ஸீரோ டிகிரி மற்றும் ராஸ லீலா. உங்களுடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள அடிப்படைத் தகுதியாக அதை நினைக்கிறேன்.
நான் சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் புத்தகங்களை நாடுவது என் வழக்கம். இப்போதெல்லாம் உங்கள் இணையதளம் என்னைச் சோர்ந்து போக விடுவதே இல்லை. வாசித்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் படிக்கிறேன். அலுப்பத் தட்டுவதே இல்லை. நான் வாசித்ததில் சுஜாதாவுக்கு பிறகு மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுவது உங்கள் எழுத்துக்கள் மட்டுமே.
எனக்கு மதிப்பளித்து பதில் எழுதியதற்காக நன்றி சாரு.
மிக்க மகிழ்ச்சியுடன்
சுந்தர்
ர்வாண்டா (திருத்திக் கொண்டேன்)