டியர் சாரு,
வெகு சமீபத்தில்தான் எனக்கு இணையமே அறிமுகம். தமிழ் எழுத்துக்களை கம்ப்யூட்டரில் அடிக்கக் கற்றுக் கொண்டது எனது வாழ்வில் முக்கியமான அம்சம் என்றால் உங்களுடைய பக்கங்களை வாசிக்கக் கிடைத்ததும் அதேவிதம்தான் என்று சொல்வேன்.
துபாயில் தன்னந்தனியாக வாழ ( of course நல்ல நட்புகளுடன்) பழகிக்கொண்ட எனக்கு ஒருகாலத்தில் பெண்கள் எழுதும் பெண்ணிய நாவல்கள் மீது பெரும் வெறுப்பு ஏற்படத்தொடங்கிவிட்டது. பிறகு எழுத்துக்கள் என்றாலே அவைதான் என்று முடிவுசெய்து படிக்கும் வழக்கத்தை விட்டொழித்துவிட்டேன்.
பெரிய விடுதி ஒன்றின் வாடிக்கையாள நண்பரின் கையில் பெரிய ரோஸ் நிற உதடுகள் ஆவென்று திறந்திருக்க ஒரு மாடர்ன் ஓவியம் கொண்ட அட்டையைப் பார்த்தேன். தமிழில் எழுத்துக்கள் இருக்கவே தன்னிச்சையாக அவரிடம் சென்று கேட்டேவிட்டேன். அது உங்களின் ஸீரோ டிகிரி நாவல்.
என் ஆவலைப் பார்த்த அவர் அங்கேயே தன் கையெழுத்திட்டு பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். அன்று பின்னிரவு எனக்கு ஸீரோ டிகிரியோடு கழிந்தது. 5 மணி நேரங்கள் - உன்னதமான நிமிடங்கள்.
அதே நண்பர்தான் உங்கள் வலைமனையையும் அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்கு பகல் நேரத் துணை உங்களின் இணையதளம்தான். அடுத்த இரண்டு மாதங்களில் சென்னை வரவிருக்கிறேன். தங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். அக்டோபரில் தங்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் ஏதுமில்லாமல் இருக்க பிரார்த்திக்கிறேன்.
மிகுந்த மகிழ்வோடு
மினி க்ருஷி