
அன்பு சாரு!
ஏற்கனவே வாசித்திருந்தாலும் , இப்போது வாசித்தாலும் புதிதாக அதே பழைய பரபரப்பையும், விறுவிறுப்பையும் தருகிறது உங்கள் மூவர். அதிலும் கடைசியாக வெளிப்படும் அந்த சஸ்பென்ஸை நான் திரும்பத் திரும்ப வாசிப்பேன். இந்த ' மூவரை' வாசித்த சில நண்பர்கள் கார்த்திக் காட்டிய பத்திரிகைச் செய்திதான் நீங்கள் குறிப்பிடும் சஸ்பென்ஸ் என்பார்கள். ஃப்ளேம்ஸில் நீங்கள் விட்ட ஆறாயிரம் ரூபாய் செருப்புதான் சஸ்பென்ஸ் என்று நான் வாதிடுவேன்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். உங்கள் அறையில் பாத்ரூமுக்கு போய் வெகுநேரமாக வெளியே வராத செலின் செத்துப் போய் விட்டாள் என்று ஏன் நினைத்தீர்கள் ? மூவரை முதல் தடவையாக வாசித்தபோது எதையும் புரிந்துகொள்ள முடியாத வயதுதான் என்ற போதிலும் இப்போது வாசித்தாலும் இதுமட்டும் எனக்கு புரியவில்லை. எனிதிங் ராங்?
அன்புடன் ,
கிருஷ்ணா.
13.8.2008.
http://madippakkam.blogspot.com
***
பழைய விறுவிறுப்பைத் தருவதற்குக் காரணம் , முன்பு பத்திரிகையில் வந்த போது நிறைய எடிட் செய்து விட்டு வெளியிடுவார்கள். இப்போது நான் ஒரிஜினல் வடிவத்தில் தருகிறேன். பத்திரிகையில் அந்த செருப்பை வெட்டித் தூக்கியெறிந்து விட்டார்கள், அதெல்லாம் எதற்கு அநாவசியமாக என்ற நல்லெண்ணத்தில். அப்போதுதான் சுஜாதா ஒரிஜினலாக எழுதியதில் எவ்வளவு நுணுக்கங்கள் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும் என்பதை வருத்தத்தோடு நினைத்துப் பார்த்தேன்.
செலின் செத்துப் போய் விட்டாளோ என்று பயந்ததற்குக் காரணம் , எனக்குக் கற்பனை வளம் கம்மி என்பதுதான். வேறு எந்த மாதிரியும் என்னால் அப்போது யோசிக்க முடியவில்லை. போதையும், நெடுநேரம் நடனமாடிய களைப்பும் மற்றொரு காரணம். இது எல்லாம் சேர்ந்துதான் பயத்தைக் கிளப்பி விட்டது.
ம்...சே...அந்த இரவில் நான் ஏன் அவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டேன் என்று இப்போது வருத்தமாக இருக்கிறது!
***