கடிதம்

 

 

( Charu with Balu )

அன்புள்ள சாருவுக்கு,
நான் புனே நகரில் வசிக்கிறேன். உங்களை எனக்கு சுமார் 5 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் உங்கள் எழுத்துக்களை படித்ததில்லை. சமீபத்தில் என் அலுவலகத்தில் வெட்டியாக இருக்கும் போது (பெரும்பாலும் என் அலுவக நாட்கள் அப்படித்தான் கழிகிறது) உங்களைப் பற்றி உங்கள் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொண்டேன். ஒரு தமிழ் எழுத்தாளன் தன் எழுத்தை மட்டுமே நம்பி வாழும் வலியை நான் நன்றாக அறிந்தவன் , அனுபவித்தவன்.

விஷயத்திற்கு வருகிறேன். தாங்கள் இதுவரை தாங்கள் எழுதிய எல்லா புத்தகம் எனக்கு வேண்டும். இதுவரை நான் உங்கள் படைப்புகள் எதையும் படித்ததில்லை. புத்தகங்களின் தலைப்புகளை உங்கள் இணைய தளத்திலிருந்துதான் அறிந்து கொண்டேன். எனக்கு உங்களுடைய எல்லா புத்தகங்களும் ஒரு பிரதி வேண்டும்.

இங்கு புனே நகரில் தமிழில் பிரபல எழுத்தாளர்களாக உலகத் தமிழர்களால் அறியப்படும் திருவள்ளுவர் , பாரதியார் போன்றவர்களின் புத்தகங்களே கிடைப்பது அரிதாக இருக்கிறது. எப்படி உங்கள் புத்தகம் கிடைக்கப் போகிறது ? மேலும், நான் மிகவும் தேர்ந்தெடுத்தே வாசிப்பவன். வாழ்க்கையை வாழ்ந்தே அதன் அனுபவத்தை எடுத்து கொள்ள வேண்டும்.. இலக்கியம் நம்மை பக்குவப்படுத்த வேண்டும்.

மொழி , கலாச்சாரம் , பண்பாடு , மதம் , சாதி என்று யாரோ எப்போதோ சொல்லி விட்டுப் போன விஷயங்களை வைத்துக் கொண்டு அவற்றைக் காப்பாற்றியே தீருவோம் என்று அலையும் இந்த மக்களின் போலியான வாழ்க்கையை நினைத்தால்...

மீண்டும் நினைவுப்படுத்துகிறேன். நான் உங்கள் புத்தகங்களை எவ்வாறு வாங்குவது என்பது பற்றிய தகவலை எனக்குப் பதில் அனுப்பவும். மறந்து விடாதீர்கள்.

( பி.கு: இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் நான் மின்னஞ்சலோ கடிதமோ அனுப்பியது கிடையாது. ஏனெனில் நான் யாருடைய வாசகனாகவும் இருந்ததும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை. உங்களின் அலைவரிசை என்னோடு ஒத்துப்போகிறது. அதுபோல என் அனுபவங்கள் உங்கள் அனுபவத்தை ஒத்து இருக்கிறது. கொஞ்சம் பெரிய மின்னஞ்சலாக எழுதி உங்கள் நேரத்தை வீண்டித்ததற்கு மன்னித்துப் பொறுத்துக் கொள்ளவும்.

தோழமையுடன்....ஃபெலிக்ஸ்.

***

 

இது போல் எனக்குப் பல கடிதங்கள் வருகின்றன. பெங்களூர் வாசகர் சந்திப்பில் கூட ஒரு நண்பர் என்னுடைய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டார்.

ஃபெலிக்ஸ் எழுதிய அடுத்த கடிதத்தில் உயிர்மையிலிருந்து வாங்கிக் கொள்கிறேன் என்று எழுதி விட்டார். நம்முடைய இணைய தளத்தின் முதல் பக்கத்தில் உயிர்மை இணைய தளத்தின் இணைப்பு உள்ளது. அதை க்ளிக் செய்தால் உயிர்மை இணைய தளத்துக்குச் செல்லலாம். அங்கே என்னுடைய புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் இருக்கும். உயிர்மையிலும் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நானே புத்தகங்களை வாங்கி அனுப்பி வைக்கிறேன். நன்றி.

சாரு நிவேதிதா.

5.8.2008.

9.45 a.m.

* * *