ஆனந்த விகடனில் எனக்குப் பிடித்தது லூஸுப் பையன் எழுதும் பக்கங்கள். இந்த வாரம் அதில் மூன்று தமிழ் எழுத்தாளர்கள் இடம் பெற்று கிண்டல் செய்யப் பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பொதுவாக வெகுஜனப் பத்திரிகைகளில் சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும்தான் கார்ட்டூனில் இடம் பெறுவார்கள். இப்போது அதில் எழுத்தாளர்களும் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியது. அதிலும் இந்தக் கேலிச் சித்திரத்தில் இந்த மூன்று எழுத்தாளர்களின் குணாம்சங்களை அச்சு அசலாகப் பிடித்திருந்தார் லூஸுப் பையன். கனுஷ்யகுத்திரனின் மேஜையில் எழுதப் பட்டுள்ள ஞி போன்ற எழுத்துக்கள். சமயங்களில் உயிர்மையில் வரும் கட்டுரைகள் ஞி மாதிரி தான் உள்ளன. அதிலும் அந்த லண்டன்காரர் எழுதும் கட்டுரைகள்! அதையெல்லாம் கனுஷ்யகுத்திரனே படிக்கிறாரா என்பது என்னுடைய நீண்ட நாள் சந்தேகம்.
உத்தமத் தமிழ் எழுத்தாளனை நான் எவ்வளவோ விமர்சித்து எழுதி விட்டேன். ஆனால் ஒரே வார்த்தையில் அந்த லூஸுப் பையன் என்னை மிரள வைத்து விட்டார்.
எல்லாவற்றையும் விட சிறப்பு பாரு நிவேதிதாவின் பக்கத்தில் கிடக்கும் புட்டி. அந்தப் படங்களை வரைந்த சித்திரக்காரர் கண்ணாவுடன் ஒரு மாலை நேரத்தை சவேரா மூங்கில் பாரில் கழிக்க விரும்புகிறேன்.
ஆமாம், ஆனந்த விகடனிடம் ஒரு கேள்வி: இவ்வளவு சுவாரசியமான பகுதிகளைத் தரும் நீங்கள் ஏன் தொடர்ந்து வண்ணதாசன், நாஞ்சில் நாடன் என்று படு படு ‘போர் ’ ஆட்களை விட்டு பத்தி எழுத வைக்கிறீர்கள்? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதியையே அவமானப் படுத்துவது போல் இருக்கிறது இவர்களின் பத்தி பகுதி. விகடனின் வாசகர்கள் இளைஞர்களா அல்லது 90 வயதுக்கு மேற்பட்டவர்களா?
17.8.2008
1.10 p.m.


நன்றி : ஆனந்த விகடன்