அன்புள்ள திரு.ரவி ,
உங்கள் வலைத் தளத்தில் 'விசிட்டர் ' என்ற பதிவை வாசித்தபோது மலையாள எழுத்தாளர் தாமஸ் ஜோசப்பின் சிறுகதை ஞாபக்ம் வந்தது. அது இணைப்பில்.
அன்புடன் ,
சுகுமாரன்.
6.8.2008.
nsukumaran@gmail.com
***
ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என்னை ரவி என்ற பெயரில் அழைக்கும் ஒரு சிலரில் சுகுமாரனும் ஒருவர். சுகுமாரனின் கடிதத்திற்கு நான் எழுதிய பதில் இது:

( Charu with Srinivasan )
அன்புள்ள சுகுமாரன்,
இந்த அற்புதமான காலை நேரத்தில் இவ்வளவு அழகான கதையைப் படிக்கக் கொடுத்த என் நீண்ட கால நண்பரான உங்களுக்கு நன்றி. விமலாதித்த மாமல்லன் , வசந்த குமார் போன்ற நண்பர்களுடன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ராயப்பேட்டை யில் உங்களோடு கழி ந் த மாலை நேரங்களை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. அப்போது நாம் அதிகம் பேசிக் கொண்டதில்லை. அல்லது , பேசிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அந்தத் தருணங்கள் முக்கியமானவை.
எந்த மாற்றமும் இல்லாமல் இப்போதும் அப்படிப்பட்ட ராயப்பேட்டை மாலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தால் பெண்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கை மிக ரம்மியமாக நம்மை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
பாரிஸ் விமான நிலையத்தின் சிவப்பு பெஞ்ச் சில் வாழும் அந்த மனிதனை நான் எப்போதோ சந்தித்திருக்கிறேன். செய்தித்தாள்களில் இடம் பிடிக்கும் அ வ னுக்கு இந்த ராயப்பேட்டை மாலை நேரங்களைப் போன்றதொரு ரம்மியமான வாழ்க்கை நிச்சயமாக இல்லை என்பதுதான் நம்மைத் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் ; நம்புகிறேன்.
அற்புதமான கதை. மலையாளத்திலிருந்து தமிழில் அற்புதமான மொழி பெயர்ப்பு. உங்களுடைய மொழி பற்றிச் சொல்லவும் வேண்டுமா ?
இதை நம்முடைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாமா ? அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் தர விரும்புகிறேன். தமிழ் இலக்கியம் பற்றிய அதிக விபரம் இல்லாத , ஆனால் அது பற்றி அறிந்து கொள்ள மிக விருப்பமாக இருக்கும் நம்முடைய பரந்து பட்ட வாசகர்களுக்கு அது உதவியாக இருக்கும். ஆனால் , கவனம் , அவர்களுடைய முதல் கேள்வி , நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதாகவும் இருக்கலாம். அண்ணா பல்கலைக் கழகத்தின் நேர்காணலில் ஒரு அழகான பெண் என்னை "உங்கள் பெயர் என்ன ?" என்று கேட்ட து போல... .
அன்புடன் ,
ரவி .
6.8.2008.
***
சுகுமாரனின் கவிதைகள் பற்றி பின்னர் ஒரு முறை எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த அவரது கோடைக் கால குறிப்புகள் என்ற கவிதைத் தொகுதியை தங்களுக்குப் பிடித்த புத்தகங்களின் வரிசையில் வைக்காத தமிழ் எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லலாம்.
இப்போதெல்லாம் ஒரு எழுத்தாளனுக்கு ஒரு சினிமா நடிகருக்குக் கிடைக்கக் கூடிய மரியாதை கிடைத்து வருகிறது. பரந்து பட்ட அளவில் இல்லை என்றாலும் அந்த எழுத்தாளரை அறிந்த வாசகர்கள் அளவிலாவது அதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பெங்களூரில் என்னைச் சந்தித்த வாசகர்களில் சிலர் அடிக்கடி “இது நிஜமா, கனவா? ” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
ஆனால் எழுத்தாளனை மிகக் கீழ்த்தரமான ஒரு ஜந்துவைப் போல் பார்க்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா? எழுத்தாளர்களேதான். என்னை ஒத்த ஒரு சக எழுத்தாளனிடம் போய் ‘சாருவைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ’ என்று கேட்டுப் பாருங்கள். தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லித் திட்டுவான். இது தமிழ் எழுத்தாளர்களிடம் மட்டுமே நான் காணும் வியாதி.
இல்லாவிட்டால் கும்பல் கும்பலாக ஒரு எழுத்தாளருக்கு அவரைச் சுற்றி ஒரு கூட்டம் ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும். அஜித் ரசிகன், விஜய் ரசிகன் என்று சினிமாவில் காணப் படும் ரசிகர் மன்றக் கும்பலைப் போன்றது இந்தக் கும்பல். ‘ மதுரை ஏரியாவுக்கு அவரை வச்சுக்கலாம்; பெங்களூர் ஏரியாவுக்கு இவரை வச்சுக்கலாம் ’ என்று ஒரு எழுத்தாளர் தன் நெருங்கிய நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒருவர் என்னிடம் அது பற்றித் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப் படுத்திக் கொண்டிருந்தார். ஆயிரம் பேர் படிக்கக் கூடிய ஒரு சூழலிலேயே இந்த நிலை. இன்னும் லட்சக் கணக்கான பிரதிகள் விற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
எதற்குச் சொன்னேன் என்றால், தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு விரோதமான, ஆரோக்கியமற்ற சூழல் நிலவி வந்தாலும், பல ஆண்டுகளாக எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் பிடித்த கவிஞராக விளங்குபவர் சுகுமாரன். பல இளம் கவிஞர்களின் மொழியிலும், பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவை இவரது கவிதைகள். ஆனாலும் என்னவோ தெரியவில்லை, மிகவும் கொஞ்சமாகவே எழுதுகிறார்.
மேலும், மலையாளத்திலிருந்து தமிழில் சில ஆக்கங்களை மொழி பெயர்த்து வருகிறார். (குறிப்பாக, ஸக்கரியா) மலையாளத்திலிருந்து தமிழில் வந்து கொண்டிருக்கும் தொழிற்சாலைப் பண்டங்களுக்கு மத்தியில் சுகுமாரனின் மொழி பெயர்ப்பு மட்டுமே எனக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருபவை.
(ஆனால் பாப்லோ நெரூதாவைத் தமிழில் மொழி பெயர்த்த சுகுமாரனின் தொகுப்பில் பல பிழைகள் மலிந்துள்ளன. சுகுமாரன் தன்னுடைய நேரத்தையும் திறமையையும் மலையாளம் – தமிழ் இரண்டுக்குமான பாலமாக விளங்குவதில் செலவிட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம்).
இதெல்லாம் தவிர, இசை பற்றிய சுகுமாரனின் கட்டுரைகளுக்கு நான் ரசிகன்.
பின் வருவது சுகுமாரன் பற்றிய உயிர்மையின் குறிப்பு. சுகுமாரனின் நூல்கள் உயிர்மையில் கிடைக்கும்.
சுகுமாரன் 1957 ஜூன் 11 இல் கோயம்புத்தூரில் பிறந்தார். கவிதை களுடன் கட்டுரைகள் , மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.சுகுமாரனின் நான்கு கவிதைத் தொகுப்புகள் கோடைக் காலக் குறிப்புகள் , பயணியின் சங்கீதங்கள் , சிலைகளின் காலம் , வாழ்நிலம் ஆகியவற்றில் இடம்பெற்ற கவிதைகளுடன் புதிய கவிதைகளும் சேர்க்கப்பட்டு பூமியை வாசிக்கும் சிறுமி என்ற தலைப்பில் முழுத் தொகுப்பாக உயிர்மை பதிப்பகம் 2006 இல் வெளியிட்டுள்ளது. திசைகளும் தடங்களும் (கட்டுரைத் தொகுப்பு) , மார்க்சிய அழகியல்-ஒரு முன்னுரை ( விமர்சனம்) , வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதை) ஆகியவற்றுடன் இதுதான் என் பெயர் (சக்கரியாவின் மயை £ ள நாவல்) , கவிதையின் திசைகள் (உலகக் கவிதைகள்) , பாப்லோ நெரூதா கவிதைகள் ( 100 தேர்ந்தெடுத்த கவிதைகள்) , பெண் வழிகள் (மலையாளப் பெண் கவிஞர்களின் தொகுப்பு) , சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) , மைலம்மா ஒரு போராட்ட வாழ்க்கை , காளி நாடகம் (உண்ணி. ஆர் சிறுதைகள்) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.
தொடர்வது தாமஸ் ஜோசப்பின் சிறுகதை.
***
8.8.2008.
10.00 a.m. |