ஒருநாள் இயக்குனர் சிம்பு தேவன் போன் செய்து சுப்ரமணியபுரம் படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்லி அதைப் பார்த்து விடுமாறு சிபாரிசு செய்தார். எனக்கு மிகவும் பிடிக்கும் என்று வேறு சொன்னதால் மறுதினமே சென்றேன். அந்தப் படம் நடந்த எல்லா அரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்று கண்டிருந்தது. ‘ சினிமாத்துறை நலிவடைந்த தொழிலாகி விட்டது என்று ஒவ்வொரு ஓடாத படத்துக்கும் ஏழு லட்சம் மானியம் அது இது என்று வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர்; ஆனால் இந்தப் படம் என்ன, இந்த ஓட்டம் ஓடுகிறது? ’ என்று எனக்குள் ஆச்சரியம். படத்தைப் பற்றி விசாரித்தால் எல்லோருமே – இயக்குனர் சசிகுமார் உட்பட - புதுமுகம் என்று தெரிந்தது.

பிறகு நண்பர் ஒருவரிடம் சொல்லி வைத்து டிக்கட் எடுத்து சுப்ரமணியபுரம் சென்றேன். அந்த அனுபவத்தை என்னவென்று சொல்வது? ஒவ்வொரு காட்சிக்கும் , ஒவ்வொரு வசனத்துக்கும் பார்வையாளர்கள் ஒருவித பரவச நிலையில் எதிர்வினை புரிந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட ரஜினிகாந்தின் படத்தை முதல் நாள் பார்ப்பது போல் இருந்தது. அதனால் வேறொரு நாள், மேல்தட்டு வர்க்கத்தினர் வரக்கூடிய ஒரு திரையரங்கில் சுப்ரமணியபுரத்தை இரண்டாம் முறையாகப் பார்த்தேன். அங்கேயும் பார்வையாளர்களிடமிருந்து அதேவிதமான எதிர்வினைதான்.
காரணம் என்ன என்பதற்கு அதிகம் யோசிக்கத் தேவையிருக்கவில்லை. சுப்ரமணியபுரம் அந்த அளவுக்குத் தமிழ் வாழ்க்கையை அதி நேர்த்தியாகவும், நிஜமாகவும் பதிவு செய்திருக்கிறது. மக்கள் செயற்கையான படங்களையே பார்த்துப்
பார்த்துச் சலித்துப் போயிருக்கிறார்கள். முழு நிர்வாணத்துக்குக் கொஞ்சம் கம்மியான ஆடையை அணிந்து கொண்டு சுவிட்ஸர்லாந்தின் பனி மலைகளில் இடுப்பை முன்னும் பின்னுமாக ஆட்டி ஆட்டி நாயகி ஆட, அவளை ஏதோ ஒரு காட்டு மிருகத்தைப் போல் முகர்ந்து முகர்ந்து பார்த்து ஒரு நாயகன் ஆட, அந்த இருவரையும் சுற்றி ஒரு முப்பது பெண்களும் ஆண்களும் கோஷ்டியாக ஆட – இந்தக் கருமத்தையே எத்தனை காலத்துக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் தமிழர்கள்?
இன்னொரு கொடுமை, சண்டைக் காட்சி. ஐம்பது அடியாட்களைப் புரட்டிப் புரட்டி அடிக்கும் ஹீரோ. அந்த ஐம்பது தடியர்களும் போடும் நானாவிதக் கூச்சல். உடையும் கண்ணடிகள், பலகைகள், தட்டுமுட்டுச் சாமான்கள், காய்கறி வண்டிகள்...
தமிழ் வணிக சினிமா என்பது ஒரு பைத்திய உலகம். நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றால், தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலியை மட்டும் நிறுத்தி விட்டுப் பாடல் காட்சியையோ, நடனக் காட்சியையோ பாருங்கள். அப்போது புரியும்.
***

பாரதிராஜாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அமீர். அமீரைத் தொடர்ந்து சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார் தமிழ் சினிமாவை மிக அதிக உயரத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த இடத்தில் வேறொரு விஷயத்தையும் எழுத வேண்டியுள்ளது. உலக சினிமாவை ஒரு கால் நூற்றாண்டுக் காலமாக பார்த்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கும் மற்ற சினிமாக்காரர்கள் எவராலும் ஏன் இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியவில்லை?
தமிழ் சினிமாவில் சசிகுமார் என்ற பெயர் இதுவரை கேள்விப் படாததாக இருக்கிறது. யார் என்று பார்த்தால் ஏதோ கொஞ்ச காலம் அமீரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். அவ்வளவுதான். எப்படி இத்தகைய ஒரு புதிய மனிதரால் உலகின் மிகத் தரமான படங்களுக்கு நிகரான ஒரு சினிமாவை உருவாக்க முடிந்திருக்கிறது?
பருத்தி வீரன் வந்திருந்த சமயம். அமீருடன் பேசிக் கொண்டிருந்த போது, தான் கமல்ஹாசனைச் சந்தித்தது பற்றிச் சொன்னார். படத்தை மிகவும் பாராட்டிய கமல் அமீரிடம் உலக சினிமாவையும் பார்க்கும்படி ஆலோசனை கூற, அதற்கு அமீர் “அதையெல்லாம் பார்க்கும் அளவுக்கு எனக்கு ஆங்கிலம் தெரியாதே? ” என்று அடக்கத்துடன் சொல்ல, அதற்குக் கமல் “ரஷ்யாக்காரனுக்கெல்லாம் ஆங்கிலமா தெரியும்? ” என்று கேட்டாராம்.

ஐஸன்ஸ்டைனிலிருந்து துவங்கி டர்காவ்ஸ்கி வரை உலக சினிமாவின் சாதனையாளர்களாக இருந்த ரஷ்ய சினிமாக் கலைஞர்களை மனதில் வைத்து கமல் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்படி உலக சினிமாவின் ரசிகர்களாக இருக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் யாராலுமே ஏன் ஒரு நல்ல சினிமாவைத் தர முடியவில்லை என்பதே என்னுடைய நீண்ட நாள் சந்தேகம். நல்ல சினிமா மட்டும் அல்ல; அவர்கள் எடுக்கும் சினிமா மற்ற வணிக சினிமாக் குப்பையை விடவும் மோசமான அரை வேக்காட்டு சினிமாவாகப் போகும் துர்ப்பாக்கிய நிலைக்குக் காரணம் என்ன?
இந்தப் பின்னணியில்தான் அமீர் சொன்னதைக் கேட்டு நான் அவரிடம் “தயவு செய்து அப்படியெல்லாம் உலக சினிமாவைப் பார்த்துக் கெட்டுப் போய் விடாதீர்கள் ” என்று பதற்றத்துடன் சொன்னேன். ஆம், நல்ல சினிமாவை உருவாக்குவதற்கு சினிமா பற்றிய தொழில்நுட்பத்தை விடவும் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
சுப்ரமணியபுரத்தைப் பார்த்த போது இதெல்லாம் எனக்கு ஞாபகத்தில் வந்தன. தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கும் மற்றொரு வியாதி, கதை. கதை கதை என்று எங்கு பார்த்தாலும் ஒரு புலம்பல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை அறைகளில் எத்தனை ஆயிரம் இரவுகள் இந்த ‘ஸ்டோரி டிஸ்கஷன் ’ என்ற சடங்கில் வீணாகிக் கொண்டிருக்கின்றன தெரியுமா? நூற்றுக் கணக்கான உதவி இயக்குனர்கள் நூற்றுக் கணக்கான ஆங்கிலப் படங்களைப் பார்த்து அவற்றிலிருந்து காட்சிகளையும், கதைத் துணுக்குகளையும் உருவிக் கொண்டிருக்கின்றனர். பாவம்; அவர்களின் கைக்கெட்டும் தூரத்தில் ஆயிரக்கணக்கான கதைகள் கொட்டிக் கிடப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஒருமுறை ஒரு இயக்குனர் என்னிடம் ஒரு கதை சொல்லச் சொன்னார். இரண்டு நிமிடத்தில் கதையைச் சொல்லி முடித்து விட்டேன். பதறிப் போய் விட்டார். கதை சொல்வது என்றால் மூன்று மணி நேரத்துக்குக் குறையாமல் சொல்ல வேண்டுமாம்.
ஒரு கீஸ்லோவ்ஸ்கியின் சினிமா ஞாபகம் வருகிறது. ஒரு தகப்பன். அவனுடைய ஆறு வயது மகள். மகள் அம்மாவிடம் வளர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய முன்னாள் கணவனைத் தேடி வருகிறாள் அந்தப் பெண். அவள் வருவதைத் தெரிந்து கொண்டு தன் இருப்பிடத்திலிருந்து மகளோடு தப்பி விடுகிறான் தகப்பன். மகளுக்கும் அம்மாவோடு இருக்கச் சம்மதமில்லை. மகளோடு வெளிநாடு சென்று விடலாம் என்பது தகப்பனின் திட்டம். ஒரே ஒரு இரவைக் கடந்து விட்டால் மறுநாள் விமானத்தைப் பிடித்து விடலாம்.

அந்த ஒரு இரவில் அவன் தன் மகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய மனைவியிடமிருந்து தப்பிப் பல்வேறு இடங்களுக்கும் அலைவதுதான் அந்த சினிமா. கடைசியில் அவர்களைப் பிடித்து விடுகிறாள் குழந்தையின் அம்மா. நீதிமன்ற உத்தரவைக் காட்டி மகளைத் தூக்கிக் கொள்கிறாள். கேமரா குழந்தையின் முகத்தைக் காண்பிக்கிறது. குழந்தை தன் அப்பாவையே பார்க்கிறாள். அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் உருண்டு ஓடுகிறது. இரண்டு மணி நேரப் படம். படம் முடிந்ததும் பார்வையாளர்கள் ஐந்து நிமிடங்களுக்கு கைத்தட்டலை நிறுத்தவில்லை.
தமிழ் சினிமாவில் பலருக்கும் சினிமா என்பது சலனக் காட்சிகளால் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கலை வடிவம் என்பதே புரியவில்லை. அதை ஒரு நாவலைப் போலவோ அல்லது பத்திரிகைகளில் வரும் தொடர்கதையைப் போலவோ அவர்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள்.
சுப்ரமணியபுரத்தின் கதை என்னவென்றால்... மதுரையில் சுப்ரமணியபுரம் என்ற பகுதியில் வாழும் துளசி (ஸ்வாதி) என்ற ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த அழகர் என்ற ஏழை இளைஞன் (ஜெய்) காதலிக்கிறான். இதை அறிய வரும் துளசியின் சித்தப்பன் கனகு (சமுத்திரக் கனி) துளசியை வைத்தே அழகரைக் கொன்று விடுகிறான். இந்தக் கொலைக்குப் பழி வாங்குவதற்காக அழகரின் நண்பன் பரமன் (சசிகுமார்) கனகுவின் கழுத்தை அறுத்துப் போடுகிறான். பிறகு, பரமனின் நண்பன் காசியின் (கஞ்சா கருப்பு) உதவியால் பரமனைக் கொலை செய்கிறார் துளசியின் தகப்பன்.
இதுதான் கதை. இப்படி ஒரு ஏழை இளைஞன் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் கதை உலக சினிமாவிலும், உலக இலக்கியத்திலும் எத்தனையோ தடவைகள் சொல்லப் பட்டிருக்கலாம். எண்ணிக்கையில் அடங்காது. ஏனென்றால், உலகத்தில் மனித வர்க்கத்தினிடையே புழக்கத்தில் இருக்கும் மொத்த கதைகளே ஏழுதான். அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லியாக வேண்டும். ஆக, எப்படிச் சொல்வது என்பதுதான் கலை. அதுதான் சினிமா.
படத்தின் பாதிப் பகுதி அழகர் – துளசி காதல்தான். ஆனால் வசனம் கிடையாது. வெறும் பார்வையும் சிரிப்பும் மட்டுமே. இடைவேளை வரை துளசி பேசும் ஒரே வசனம் “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்று அவள் அழகரிடம் சொல்வதுதான். ‘ கண்களும் கவி பாடுமோ? ’ என்ற புகழ் பெற்ற பாடலை நாம் கேட்டு இன்புற்றிருக்கிறோம். இந்தப் படத்தில் துளசியின் கண்கள் அந்தக் காரியத்தைச் செய்கின்றன. அவளுடைய பார்வையும், அழகரின் சிரிப்பும் மட்டுமேதான் அவர்களின் காதலை ஒரு காவியத்தைப் போல் சொல்லுகின்றன. பார்வையாளர்களின் உன்மத்தம் பிடித்தது போன்ற கூச்சலுக்கும், கும்மாளத்திற்கும் இதுதான் காரணம். ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கமான அனுபவத்தையும் இயக்குனர் சசிகுமார் வெகு உயர்தரமான கலையாக மாற்றியிருக்கிறார்.

சரி, ஒரு யுவனும் யுவதியும் கண்களால் காதல் செய்து கொள்வதை மட்டுமே எப்படி ஒன்றரை மணி நேரத்துக்கு (இடைவேளை வரை) சலனக் கதையாகச் சொல்வது? இங்கேதான் மதுரையின் எண்பதுகளின் கால கட்டத்தையும் சுப்ரமணியபுரத்தையும் கதாபாத்திரமாக்குகிறார் இயக்குனர்.
பீரியட் ஃபில்ம் என்பதற்கு ஆங்கிலத்தில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. சட்டென்று ஞாபகம் வருவது ஸ்பீல்பெர்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட். அந்த அளவுக்குத் துல்லியமாக இருக்கிறது சசிகுமாரின் சுப்ரமணியபுரம். ஆகாஷ்வாணியின் அந்நாளைய செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமியின் குரல், சுவரில் எழுதப் பட்டிருக்கும் இந்தி எதிர்ப்பு கோஷங்கள், தொலைக்காட்சியில் குழந்தைகளும் பெண்களும் பார்க்கும் யாதோங் கி பாராத் மற்றும் பாபி பாடல்கள் என்று கால யந்திரத்தில் 28 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கிறோம் நாம்.
மிகக் குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டியது கதாபாத்திரங்களின் ஆடை. எண்பதுகளின் மோஸ்தராக இருந்த பெல் பாட்டம் பேண்ட், கலைந்து கிடக்கும் நீண்ட தலை முடி - அதிலும் முக்கியமாக தையல்காரரிடம் சட்டை அளவு கொடுக்கும் போது “கழுதக் காலர் மறந்துடாதீங்கண்ணே ” என்று சொல்லாத இளைஞனே எண்பதுகளில் மதுரையில் கிடையாது – அந்தக் கழுதைக் காலர் சட்டையை கால் சராயின் உள்ளே விட்டு பட்டையான பெல்ட் அணிவது அப்போதைய மோஸ்தர். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படத்தை வைத்துக் கொண்டு ஒருவர் எண்பதுகளைப் பற்றிய ஒரு anthropological ஆய்வையே செய்து விடலாம் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்குத் துல்லியமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன வாழ்க்கை விவரணங்கள்.
இந்தத் துல்லியம் என்ற விஷயத்தில் இந்திய சினிமாக்காரர்கள் அத்தனை பேரும் கோட்டை விட்டிருக்கின்றனர். சத்யஜித் ரே கூட விதி விலக்கல்ல. கஞ்சிக்கும் வழியில்லாத அவருடைய ஏழைக் கதாநாயகி கூட சீராகப் புருவம் சிரைக்கப் பட்டவளாக இருப்பாள். ரவிக்கை கூட அணிய முடியாத கிராமத்து ஏழைப் பெண்ணின் சருமத்தில் குட்டைக் கை ரவிக்கை அணிந்து அணிந்து ஏற்பட்ட நிற அடையாளம் பார்வையாளரை உறுத்தும். இப்படிப் பட்ட எந்த உறுத்தல்களும் இல்லாத நிஜமான வாழ்க்கைச் சித்திரம் சுப்ரமணியபுரம்.
ஒரு காட்சியில் சுப்ரமணியபுரத்தில் அன்றைய சினிமாவின் போஸ்டர் ஒட்டிய தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். சிற்றூர்களிலும், கிராமங்களிலும் இப்படிப் பட்ட தள்ளு வண்டி யாத்திரை சிறுவர்களிடையே படு பிரசித்தம். இந்த யாத்திரையில் கலந்து கொள்ளாத முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களே இன்றைய தினம் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிராமீய வாழ்வோடு இரண்டறக் கலந்தது இந்த நிகழ்ச்சி. பறை அடித்துக் கொண்டே செல்லும் அந்தத் தள்ளு வண்டியைச் சுற்றி அந்தப் போஸ்டரில் உள்ள சினிமா பற்றிய கனவுகளுடன் குதியாட்டம் போட்டுக் கொண்டே செல்வார்கள் சிறுவர்கள். சுப்ரமணியபுரச் சிறுவர்கள் அந்த வண்டியின் பின்னே அன்றைய தினக் கொண்டாட்டமான ரஜினியின் முரட்டுக் காளைக்கு அப்படி ஆடிக் கொண்டே செல்கிறார்கள்.
சுப்ரமணியபுரத்தில் முரட்டுக் காளை ரிலீஸ் தினம் ஒரு கொண்டாட்டம். நண்பர்கள் ஐந்து பேருக்கும் க்யூ வரிசையைத் தாண்டிச் சென்று டிக்கட் வாங்கி வருகிறான் காசி. அந்த ஐந்து டிக்கட்டையும் அவனிடமிருந்து பறித்துக் கொண்டு போய் , அந்தப் படத்திற்கு கல்லூரி வகுப்புகளைக் கட் அடித்து விட்டு வரும் தன் காதலி துளசி மற்றும் அவளுடைய தோழிகளிடம் கொடுக்கிறான் அழகர். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்தச் சம்பவம் நடந்திருக்கும். டிக்கட் மட்டுமா கொடுத்திருக்கிறோம்; இன்னும் என்னென்ன வேலை எல்லாம் செய்திருக்கிறோம் என்று நான் நினைத்த மறுகணம், என் பின் இருக்கையிலிருந்து இதே எண்ணத்தை உரத்த குரலில் கத்திச் சொல்கிறார் ஒரு பார்வையாளர். ‘ ஜாரியப் பார்த்ததும் நம்மளக் கழட்டி விட்டுட்டான்டா... ’ இதைச் சொல்லாத ஒரு மதுரை இளைஞன் கூட இருக்க முடியாது. ஜாரி, மசை என்பதெல்லாம் பெண்களுக்கு மதுரை இளைஞர்களிடையே வழங்கும் சொற்கள்.

தமிழ் சினிமாவின் மற்றொரு பிரச்சினை செட் என்று சொல்லப் படுகிற அட்டைப் பெட்டி ஜோடனை. துல்லியத்தைப் பற்றி மிகவும் அக்கறை எடுத்துக் கொள்ளும் மணி ரத்னத்தின் பம்பாயிலேயே பழைய எம்ஜியார் சிவாஜி காலத்திய செயற்கையான செட் நம் கண்களை உறுத்தியது. தமிழ் சினிமாவில் நிலத்தின் கதை என்பது இல்லாமல் போனதற்குக் காரணமே இந்த செட் கலாச்சாரம்தான். படம் மதுரையில் நடக்கும். ஆனால் மதுரை மாதிரியான அட்டைப் பெட்டி செட் இங்கே கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் அமைக்கப் பட்டிருக்கும்.
சுப்ரமணியபுரத்தில் தமிழ் சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரு சிற்றூர் தன்னுடைய கதையைச் சொல்லியிருக்கிறது. பருத்தி வீரனில் கூட மனிதர்களின் கதைதான் அதிகம். சுப்ரமணியபுரத்தில் சுப்ரமணியபுரம் என்ற ஊர்தான் பிரதான பாத்திரம். ஒரு கால கட்டத்தில் தன்னிடம் வாழ்ந்த சில மனிதர்களைப் பற்றிய கதையைச் சொல்கிறது சுப்ரமணியபுரம் என்ற ஊர். தன்னுடைய ஒவ்வொரு சுவரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு கதையையும் ஒரு வரலாற்றையும் தேக்கி வைத்திருக்கும் சுப்ரமணியபுரம் அதில் ஒரு பகுதியை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்கிறது.
படத்தின் ஒரு கட்டத்தில் அழகரைக் கொலை செய்ய ஒரு அடியாள் கூட்டம் துரத்துகிறது. கைவசம் ‘ பொருள் ’ (அரிவாள்) இல்லாததால் திருப்பித் தாக்கவோ தற்காத்துக் கொள்ளவோ முடியாமல் தப்பி ஓடுகிறான் அழகு. சுமார் பத்து நிமிடங்கள் செல்லும் இந்தத் துரத்தல் காட்சியைப் போன்ற ஒன்றை நான் ஹாலிவுட் ‘சேஸிங் ’ காட்சிகளில் கூடக் கண்டதில்லை. தசாவதாரத்தில் வரும் செயற்கையான, ஆபாசமான ஒன்றரை மணி நேரத் துரத்தல் காட்சி இங்கே எனக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது.
சுப்ரமணியபுரத்தின் துரத்தல் காட்சியில் வரும் எண்ணற்ற குறுகிய சந்துகளின் மூலம் சுப்ரமணியபுரம் என்ற ஊர் தன்னுடைய ஆண்டாண்டுக் கால வரலாற்றைச் சொல்வதாகத் தோன்றுகிறது. சிந்து வெளி நாகரிகத்தின் அடையாளங்களை ஹரப்பாவின் நூற்றுக்கணக்கான சந்துகளும் தெருக்களும் இன்று நமக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருப்பதைப் போல், சுப்ரமணியபுரத்தின் இந்தக் குறுகிய சந்துகளும் தமிழ் சினிமா உள்ள வரை அந்த ஊரின் கலாச்சார சாட்சியமாய் விளங்கிக் கொண்டிருக்கும்.
***

அழகர், பரமன், காசி, டும்கான் என்ற ஊனமுற்றவன், இன்னொருவன் என ஐந்து வேலையற்ற இளைஞர்கள் சித்தன் சவுண்ட் சர்விஸ் என்ற கடையில் அமர்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கின்றனர். தமிழ் நாட்டுக் கிராமங்களின் வேலையில்லா இளைஞர்களின் அத்தனை பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள் இவர்கள். இதுதான் சுப்ரமணியபுரத்தின் கதை. ஒரு ஏழை இளைஞனுக்கும் பணக்காரப் பெண் ஒருத்திக்கும் இடையிலான காதல் என்ற ஒரே ஒரு முடிச்சை வைத்துக் கொண்டு மூன்று மணி நேரத்துக்கு எப்படி ஒரு சலன சித்திரத்தை உருவாக்குவது? இந்தப் புள்ளியில்தான் சுப்ரமணியபுரம் வேறு எந்தத் தமிழ்ப் படமும் சாதித்திராத ஒன்றைச் சாதித்திருக்கிறது.
ஒரு ஈரானியத் திரைப் படம். பெயர் நினைவில்லை. ஒரு பத்து வயதுச் சிறுமி. அவள் தன்னுடைய தோழனோடு விளையாடுவதற்கு வீட்டுப் பெரியவர்கள் அனுமதி மறுக்கின்றனர். மிகவும் கெஞ்சியதில் உச்சி வெயில் சாய்வதற்குள் வந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி கிடைக்கிறது. உச்சி வெயில் சாய்வதை எப்படிக் கண்டு பிடிப்பது? அவளிடம் ஒரு குச்சி இருக்கிறது. அதை மணலில் நடுவாள் அந்தச் சிறுமி. நிழல் சாய்வாக விழுந்தால் உச்சி முடிந்து விட்டது என்று பொருள். தோழனின் வீட்டுக்கு வருகிறாள். வீட்டுப் பாடத்தை முடிக்காததால் அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. சன்னல் வழியாகவே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். சிறுமி ஒரு குச்சி மிட்டாய் வாங்கி வருகிறாள். அந்த மிட்டாயை ஜன்னலுக்கு உள்ளே இருக்கும் சிறுவனும், ஜன்னலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சிறுமியும் மாறி மாறி சப்பித் தின்கிறார்கள். உச்சிக்குள் திரும்ப வேண்டுமே என்ற பதற்றம் சிறுமிக்கு. அடிக்கடி மணலில் குச்சியை வைத்துப் பார்த்துக் கொள்கிறாள். உச்சி முடிந்ததும் வீடு திரும்புகிறாள். முக்கால் மணி நேரம் ஓடும் படத்தின் கதை, சம்பவம், கதா மாந்தர்கள் எல்லாமே இவ்வளவுதான். பார்வையாளர்கள் அத்தனை பேரையும் இருக்கையிலேயே கட்டிப் போட்ட படம் இது.

கதை சொல்லலில் இப்படி ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது சுப்ரமணியபுரம். ஒரு காட்சியில் காசியும், டும்கானும், மற்றவனும் குளிக்கிறார்கள்.
டேய் சோப்பு குடுரா... இது காசி.
ஒருத்தர் போட்ட சோப்பை இன்னொருத்தர் போடக் கூடாதுரா. தேமல் வந்துருண்டா.
சரி, அப்படியாவது நம்ம தோலு வெள்ளையாவுதா பாப்பம்டா...குடுரா.
இதற்கிடையில் மூன்றாமவனின் துண்டை டும்கான் பிடுங்கிக் கொள்ள அவன் ஒரு மூலையில் பதுங்குகிறான். அப்போது அந்த மூலையில் இருக்கும் கக்கூஸுக்குள்ளிருந்து வெளியே வரும் ஒரு ஆள் திடீரென்று ஒருத்தனின் அம்மணக் குண்டியைப் பார்த்து விட்டுத் திட்ட காசி கத்துகிறான். டேய், நீ ஜட்டி போட்லியாடா?
அதை வேற எதுக்குடா போட்டுக்கிட்டு, ஒரே இறுக்கமா?
அய்யய்யோ, அப்பன்னா நேத்து போலீஸ் ஸ்டேசன்ல இன்ஸ்பெக்டரு நம்மள அடிக்கும் போது கைலியைக் கழட்டுங்கடான்னு சொல்லியிருந்தா நீ அவ்ளோதான்.
எல்லோரும் சுத்த பத்தமா இருக்கீகளா? ’ என்று நொடிக்கு ஒருமுறை மற்றவர்களைக் கேட்கும் கோவில் தர்மகர்த்தா தன்னுடைய சிபாரிசில் கோவில் திருவிழாவுக்கு சவுண்ட் சர்வீஸ் கான்ட்ராக்ட் கொடுக்கப் பட்டிருப்பவனின் மனைவியை ‘வைத்துக் ’ கொண்டிருப்பதும், தர்மகர்த்தாவும் அந்தப் பெண்ணும் அந்தரங்கமாக இருக்கும் போது வீட்டுக்கு வெளியே பூட்டைப் போட்டு பின் வாசல் வழியே சாக்கடையில் விழுந்து தெறித்து அவரை ஓட வைக்கும் காசி கோஷ்டியின் கலாட்டாக்கள். இப்படி சின்னச் சின்ன சம்பவங்களின் ஊடாகவே சுப்ரமணியபுரம் என்ற ஊரின் கதை சொல்லப் படுகிறது.

இந்த நிலையில் கதையில் ஒரு திருப்பம். கவுன்சிலராக இருந்த தன் அண்ணனுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் மீண்டும் மீண்டும் மற்றொருவனுக்கே கொடுக்கப்பட்டதால் மனம் புழுங்கும் கனகு அழகர், பரமன் இருவரின் வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களை வைத்து தன் அண்ணனுக்குப் போட்டியாளனாக இருக்கும் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறான். அழகரும், பரமனும் நட்புக்காகச் செய்யும் இந்த முதல் கொலை அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டு அவர்களைத் தொடர் கொலைகாரர்களாக ஆக்கி விடுகிறது.
இதற்கெல்லாம் காரணமாக இருந்து, தங்களைக் கொலைகாரர்களாக்கிச் சிறைக்கு அனுப்பி விட்டு கவுன்ஸிலர் பதவியையும் அனுபவித்துக் கொண்டு, தங்களை பெயிலில் கூட எடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்த கனகுவைக் கொல்ல முயல்கிறார்கள் அழகரும், பரமனும். முதல் முயற்சியில் தப்பிவிடும் கனகு அவர்கள் இருவரும் உயிரோடு இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து துளசியின் காலில் விழுந்து கதறுகிறான். ( ” என் உயிரையும் என் அண்ணன்களின் உயிரையும் உன் ஒருத்தியின் மூலம்தான் காப்பாற்ற முடியும்; அப்படிக் காப்பாற்றினால் நீதான் இந்தக் குடும்பத்தின் குல தெய்வம். ” )
துளசி அழகரைத் தனி இடத்துக்கு வரவழைக்கிறாள். ” எப்போதும், எந்த நிமிடமும் உயிருக்குப் பயந்து அரிவாளை இடுப்பில் செருகிக் கொண்டே வாழும் நான் உன்னிடம் மட்டும்தான் பயமில்லாமல் இருக்கிறேன் ” என்று துளசியிடம் ஒருமுறை சொல்கிறான் அழகர். அதே போல் அவளைப் பார்க்கச் செல்லும் போது அவனிடம் அரிவாள் இருப்பதில்லை. கனகுவின் ஆட்கள் ஆயுதங்களோடு அழகரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். வெறும் கைகளால் அவர்களைத் தடுக்கிறான் அழகர். அப்போது அங்கே வரும் கனகு அழுது கொண்டிருக்கும் துளசியை அரவணைத்தபடி அழைத்துச் செல்லும் போது “நீ நம் குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டாய் அம்மா ” என்று சொல்வதைக் கேட்டதும் அழகர் தன் மேல் விழும் அரிவாள் வெட்டுகளைத் தடுப்பதை நிறுத்தி விடுகிறான். செத்து விழுகிறான்.
இந்தப் படத்தின் கரு இதுதான். துரோகம். இந்தப் படத்தைப் பார்த்ததும் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸீஸரை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மற்றவர்கள் குத்தும் போது சலனமற்றிருக்கும் ஸீஸர், ப்ரூடஸும் தன்னைக் குத்துவதைப் பார்த்து விட்டுத்தான் “ Et tu, Brute! Then fall, Caesar” (Act 3: Scene 1) என்று சொல்லி வீழ்கிறான். ஆனால் ஜூலியஸ் ஸீஸரில் வரும் துரோகத்தை விட காதலின் துரோகம் பெரிது. ஏனென்றால், Betrayal can only happen if you are in love என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காதலை விட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலான கொலைகள் காதலை முன்வைத்து நடக்கின்றன.
நீட்ஷேவின் Thus Spake Zarathustra வில் வரும் கிழவி சொல்வது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். Are you going to women? Don’t forget your whip… என்று ஜாரதுர்ஷ்ட்ராவிடம் சொல்லுவாள் அந்தக் கிழவி. தன் காதலி துளசியை முழுமையாக நம்பியதால் அழகர் தன் ஆயுதத்தை எடுத்துச் செல்லவில்லை. இவ்விஷயத்தில் அவன் ஆரம்பத்திலிருந்தே தன் நண்பன் பரமன் சொன்னதையும் கேட்காமல் போனான்.
காதலின் துரோகம் இப்படி அழகரின் உயிரைப் பறித்ததென்றால் நட்பின் துரோகம் பரமனின் உயிரைப் பறித்தது. பணத்துக்காக பரமனை துளசியின் தகப்பனிடம் காட்டிக் கொடுக்கிறான் காசி. இப்படி நண்பர்கள் இருவரும் துரோகத்தால் வீழ்த்தப் படுகிறார்கள்.
படத்தின் மற்றொரு முடிச்சு என்னவென்றால், படத்தில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும் காரணமாக இருப்பது ஒரு பெண்ணின் வார்த்தைகள்தான். எக்ஸ் கவுன்ஸிலராக இருக்கும் கனகுவின் அண்ணனுக்கு அவர் எதிர்பார்த்த படி கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால் மிகவும் நொந்து போய்க் கிடக்கிறார். அப்போது அவர் மனைவி “இவரும் உக்கார்ந்து கிட்டு இருக்கார் பதவி வரும் வரும்னுட்டு; எங்கே வந்துது? கோவில் திருவிழா அன்னிக்குக் கூட வெளியே தலை காட்ட முடியாம பொம்பளை மாதிரி மொட்ட மாடில போய் ஒளிஞ்சுக் கிட்டு இருந்தார் ” என்று பலவாறாகப் பேசி அவமானப் படுத்துகிறாள். இந்தப் பேச்சுதான் கனகுவை உசுப்பி விடுகிறது. ” வீட்டில் பெண்கள் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்; இனிமேல் வாழ்ந்து என்ன பயன்? ” என்று அழகரிடம் சொல்லி அவனையும் பரமனையும் தங்கள் எதிரியைத் தீர்த்துக் கட்டத் தூண்டிவிடுகிறான். இரண்டு சாதாரண இளைஞர்கள் கொலைகாரர்களாக மாறி அந்தக் கொலை இறுதியில் கொல்லப் படுவதற்கு எக்ஸ் கவுன்ஸிலரின் மனைவியின் ஒரே ஒரு பேச்சுதான் காரணமாய் அமைகிறது.

எதிரி கொல்லப் பட்டு தன் கணவருக்கு கட்சித் தலைவர் பதவி கிடைத்ததும் வாயெல்லாம் பல்லாக அந்தப் பெண்மணி தன் தந்தையிடம் போனில் பேசும் காட்சியும் நீட்ஷேவின் அந்தப் புகழ் பெற்ற மேற்கோளை நமக்கு நினைவு படுத்துகிறது.
ஆனால் இதெல்லாம் நடந்து முடிந்து 27 ஆண்டுகள் கழித்து காசியைக் கொலை செய்து பழி தீர்க்கிறான் டும்கான்.
சுப்ரமணியபுரம் பற்றிச் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்களும், விசேஷங்களும் உண்டு. குறிப்பாக இசையும், ஒளிப்பதிவும் அபாரமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய சினிமாவில் சுப்ரமணியபுரம் ஒரு cult film -ஆக அமையும்; சந்தேகமில்லை.
***

சுப்ரமணியபுரத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு பின் குறிப்பு: ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன். இப்படி தமிழ் சினிமா முழுவதையும் மதுரைக்காரர்களே ஆக்ரமித்துக் கொண்டால் மற்ற பகுதிக்காரர்கள் எல்லாம் என்னய்யா செய்வது? தெலுங்குப் படம் எடுக்க வேண்டியதுதானா? ஒரு காலத்தில் எங்கள் கீழத்தஞ்சை மாவட்டம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது, பராசக்தியிலிருந்து ஆரம்பித்து. இப்போது அந்தக் கீழத்தஞ்சை மாவட்டத்துக்காரர்களின் அம்மி குத்தும் சத்தம்தான் ‘உளியின் ஓசை ’ யாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அமீர் முதல் சசிகுமார் வரை வந்துள்ள மதுரைக்கார சிங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்: கொஞ்ச காலத்துக்கு மதுரையை மறந்து விட்டு கீழத்தஞ்சை மாவட்டத்துப் பக்கம் வாருங்கள்; அழகழகான கதை கிடைக்கும்.
***
நன்றி : உயிர்மை
|