‘ நண்பர்களுக்கு ஒரு விளக்கம் ’ கட்டுரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் புகைப்படத்தை இணைத்து இருந்தது கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக மின் அஞ்சல் அனுப்பியிருந்தார் வாசகர் வினோத் பாபு. அவரும் அந்த ஊர்தானாம்.
சமீபத்தில் ராகவன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று வந்திருந்தார்.
அங்கே பக்கத்தில் காட்டழகர் கோவிலும் இருக்கிறது. வில்லிப்புத்தூரிலிருந்து ஆறு கி.மீ. சாலை வழியில் சென்று செண்பகத்தோப்பில் இறங்கி அங்கிருந்து காட்டுப் பாதையில் ஒரு மணி நேரம் நடந்தால் காட்டழகரைப் பார்க்கலாம் என்கிறார் ராகவன்.
கோவிலுக்குப் பின்னே பெருமாளே படுத்திருப்பது போல் இருக்கிறது என்று அதைக் காண்பித்து ராகவன் சிறு பையனாக இருந்த போது சொல்லுவாராம் காட்டழகர் கோவில் பட்டர். இப்போது அந்த பட்டரின் புதல்வரான இளைய பட்டரும் ராகவனிடம் அதையே சொன்னதாகச் சொன்னார் ராகவன். எனக்கும் பட்டர் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது.


நம்பாதவர்கள் ராகவனே எடுத்திருக்கும் இந்தப் புகைப்படங்களைப் பார்க்கலாம். பகுத்தறிவாளர்களுக்கு அது வெறும் கல் என்று தோன்றும். தப்பில்லை. உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்.
ஆனால் ராகவன் சொன்ன மற்றொரு விஷயம் பகுத்தறிவாளர்களும் கவலைப் பட வேண்டிய விஷயம். முன்பெல்லாம் இந்தக் காடு மரங்கள் சூழ்ந்து பாறையே கண்களுக்குத் தெரியாமல் பச்சைப் பசேல் என்று இருக்குமாம். இப்போது மரங்களை வெட்டி விற்று விட்டு மொட்டைப் பாறையாக இருக்கிறதாம். எப்படி சுனாமியும், பூகம்பமும் வராமல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஊரிலிருந்து வரும் போது எனக்காக ராகவன் வில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதித் தெருவில் உள்ள லாலா கடையிலிருந்து பால் கோவா வாங்கி வந்து கொடுத்தார். அவர் அதை நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு எடுத்து வந்த அன்று நான் போகவில்லை என்பதால் அலுவலகத்தில் அவந்திகாவைப் பார்த்து அதைக் கொடுத்திருக்கிறார். (இருவரும் ஒரே அலுவலகம்). கொடுத்து விட்டு அவர் அவந்திகாவிடம் சொன்ன வாசகம்தான் விசேஷம். “இதை இங்கேயே பங்கு பிரித்துக் கொடுத்து விடாமல் வீட்டுக்குக் கொண்டு போய் சாருவிடம் கொடுங்கள் ” என்று வலிய குரலில் ரொம்பவும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். இல்லாவிட்டால் அது அங்கேயே விநியோகம் ஆகியிருக்கும்.
நேற்று நடந்த கதை ஒன்றைக் கேளுங்கள். அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாக நெய்யை உருக்கி, மாவைக் கரைத்து அப்பம் செய்து கொண்டிருந்தாள் அவந்திகா. ” அதைத்தான் நேற்றே (ஸ்ரீஜெயந்தி) செய்து விட்டாயே, ஏன் இன்றும்? ” என்று கேட்டேன். அந்தக் கேரள அப்பம் எனக்கு ரொம்ப இஷ்டம் என்றாலும், நான் அதைச் சாப்பிடக் கூடாது என்பதால் அது பற்றி வீட்டில் பல கெடுபிடிகள் உண்டு. வெளியிலோ இவ்வளவு ருசியாகக் கிடைக்காது.
என்ன விஷயம் என்றால், ஸ்ரீஜெயந்தி அன்று அதை அவள் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றாளாம். அற்புதமான ருசி. நம்முடைய ஆசாமிகள் அந்த மாதிரி எல்லாம் சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பதால் உடனே காலி. அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண் அந்தத் தூக்குக்குள் கை விட உள்ளே ஒன்றும் இல்லை. அவளுக்காகவே அந்த அப்பத்தைச் செய்து கொண்டிருந்தாள் அவந்திகா.
***
27.8.2008.
11.00 a.m.