அன்புள்ள சாருவிற்கு ,
ரஜினி எப்படி படிப்படியாக வளர்ந்து உயர்ந்தாரோ அவ்விதமே அவரது வீழ்ச்சியும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 1996-இல் ஜெ.வின் தோல்விக்கு முதன்மைக் காரணம் ஜெ.தான். அவருக்கு எதிராகத் திரண்ட எதிரணி , த.மா.க உதயம்-உற்சாகம் , சன் டிவி...இது எல்லாவற்றோடும் சேர்ந்ததுதான் ஜெ.வுக்கு எதிரான ரஜினியின் குரலும். ஆனால் அப்போது நிகழ்ந்த ஜெ.வின் தோல்வி ரஜினியின் வெற்றியாகச் சித்தரிக்கப் பட்டது ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையினால்தான். பத்திரிககள் ரஜினியை ‘ கருப்பு மின்னல் ' என்று வர்ணித்தன.
1998-இல் தனது அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தி திமுக கூட்டணியைத் தோற்கடித்ததன் மூலம் , ரஜினி பற்றி எந்த விமர்சனமும் செய்யாமலேயே ரஜினியின் செல்வாக்கு குறித்த பிம்பத்தை முதலில் உடைத்தவர் ஜெ.தான். அதைக் கூட தனது படையப்பாவில்- ” நீ ஒரு தடவை ஜெயிச்சிட்ட ; ஆனா இனிமே முடியாது" என்று வசனம் பேசி காசாக்கிக் கொண்டார் ரஜினி. ஆனால் ரஜினி மாயையின் அபத்தத்தை உணராத அல்லது உணராதது போல் காட்டிக் கொண்ட ஊடகங்கள் தொடர்ந்து அவரின் தலைக்குப் பின் ஒளிவட்டம் வரைந்து அதற்கு நிறம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரஜினி ராமதாஸுக்கு எதிராக எதுவும் செய்யாத போதும் , ரஜினியை எதிர்த்தால் தமிழகமே பா.ம.கவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் என்ற ஊடகங்களின் மாயைக்கு இடையிலும் , ரஜினியைக் கொள்கையின் அடிப்படையில் அவரது படங்களை எதிர்த்து செயல்பட்ட ராமதாஸ் பாராட்டுக்குரியவர். ஆனால் பாமக கையாண்ட வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த விசயத்தைப் பொறுத்தவரை ஜெ. நடுநிலையாகவே செயல்பட்டு பாபாவிற்குப் பாதுகாப்பளித்தும் அந்தப் படம் அடைந்த தோல்வி ரஜினியின் செல்வாக்கை தமிழ் கூறும் உலகிற்கு உணர்த்தியது.
ஜெ. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது என்று சொன்னவரின் படப்பெட்டியைக் கூட நாங்கள் தான் காப்பாற்ற வேண்டியிருந்ததது என்ற ர.ரக்களின் நக்கலை நமட்டுச் சிரிப்புடன் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். பின் வந்த தேர்தலில் ரஜினி ஜெ.வுக்கு ஆதரவு கொடுத்தும் அதை ஏற்க மறுத்த ஜெ. எல்லா வழிகளிலும் ரஜினியின் செல்வாக்கை வெட்ட வெளிச்சமாக்கினார்.
பாமக துவக்கி வைத்த விவாதம் மக்கள் மேடையில் விரிவடைந்து உண்மை நிலையை உணர்த்தி நிறைவடைந்தது. அவ்வப்போது ரஜினி குழப்பிய விவகாரங்கள் பகுத்தறிவுத் தளத்திலிருந்து கடும் எதிர்ப்பைத் ஏற்படுத்தியிருந்தன. நெய்வேலிப் பிரச்சனையில் ரஜினி எடுத்த தனிநிலையை திரையுலகம் ஆதரித்தாலும் மக்கள் ரஜினியை கன்னட ஆதரவாளராகத்தான் கண்டனர். பகுத்தறிவிற்கு எதிரான அவரது நிலைப்பாட்டை பா.ஜ பயன்படுத்த விரும்பியதை பெரும்பாலோர் ரசிக்கவில்லை. சிவாஜி(ராவ்) கண்ட இந்து ராஜ்யத்தை நிறுவ விரும்பிய சோ எடுத்த முயற்சிகளும் பயனற்றுப் போயின. ஆன்மீகம் பேசிய ரஜினியை எதிர்க்காமலேயே மு.க செய்த அரசியலும் , ஜெ.வின் அரசியலும் ஒன்றே.
கடைசியாக நடந்த காவிரிப் போராட்டத்திலும் ரஜினியின் முன் பின்னான முரண்பாடுகளும் , சமூகப் பிரச்சினைகள் பற்றிய அவரது கருத்துக்களும் வெறும் தமாஷாகவே மிஞ்சின. ஆக ராம்கி நடித்தால் 5 நாட்கள் ஓடும் கதையுள்ள படம் , விஜய் நடித்தால் 25 நாட்களும் ரஜினி நடித்தால் 100 நாட்களும் ஓடும் . அவ்வளவுதான் . பாலாபிஷேகம் , தேனாபிஷேகம் எல்லாம் பத்திரிகைகளுக்குத் தீனி போடும் பைத்தியக்காரர்களின் செயல் என்று பெரும்பாலோர் அறிந்தே இருக்கின்றனர்.
அன்புடன்
பூபதி
திருவேங்கடம்(அஞ்.) , சங்கரன்கோவில்
13.8.2008.