வினை விதைத்தவன் வினை அறுப்பான்

 

தமிழகத்தில் சினிமா நடிகர்களுக்கென்று தொடங்கப் படும் பல ரசிகர் மன்றத்தினரின் கனவு, தங்கள் ஹீரோ அரசியலில் நுழைந்தால் தாங்களும் பெரிய அரசியல்வாதி ஆகி விடலாம் என்பதுதான். ஏன் ஒருவர் அரசியல்வாதி ஆக வேண்டும்? இந்தியாவில் வேறு யாருக்குமே இல்லாத அதிகாரம் அரசியல்வாதிக்கு இருக்கிறது. பெரும் பத்திரிகைகள் கூட அரசியல்வாதிகளைக் கண்டால் அஞ்சுகின்றன. ஒரு உயர் அதிகாரிக்கோ, ஒரு தொழிலதிபருக்கோ கூட இல்லாத அதிகாரம் அரசியல்வாதிக்கு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரசியல்வாதி தொழிலதிபர் டாட்டாவையே மிரட்டியது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இந்த அதிகாரம், ஒருவரிடம் கோடிக் கணக்கான ரூபாய் கொட்டிக் கிடந்தாலும் வராது. ஒவ்வொரு சினிமாக்காரரையும் அரசியலை நோக்கித் தள்ளுவது இந்த அதிகார போதைதான்.

அடுத்து, பணம். கணக்கிலடங்காத பணம். எந்தவித உழைப்பையும், மூலதனத்தையும் அடிப்படையாகக் கொள்ளாத, புதையல் போன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும் பணம். நூறு ரூபாய்க்குக் கூட வக்கில்லாதவர்கள் அரசியலில் நுழைந்ததும் பத்தே ஆண்டுகளில் குறைந்த பட்சம் 50 கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகி விடும் மர்மம் எப்படி?

மேலும், அரசியல்வாதி ஆவதற்கு எந்தத் தகுதியும் தேவை இல்லை. ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து போன்றவைகளில் முன் அனுபவம் இருந்தால் அது ஒரு கூடுதல் தகுதி.

இப்படியாகத் தமிழ்நாடு லும்பன்களால் ஆளப்படும் ஒரு சமூகமாக மாறி விட்டது. (லும்பன் என்ற ஜெர்மன் வார்த்தையை கிட்டத்தட்ட ‘பொறுக்கி ’ என்று மொழி பெயர்க்கலாம்). இந்த நிலையில்தான் இதற்கு ஒரு மாற்றாக நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காரணம், தமிழர்களின் வெகுளித்தனம். கடவுள் வேஷம் போட்டவனைக் கடவுளாகவே நினைத்து வழிபடுவது இவர்களின் பண்பு.

ஒரு இருட்டு அரங்கில் ஒரு பெரிய படுதாவில் நம் கண் முன்னே பிரமாண்டமாகத் தோன்றும் ஹீரோ நம்முடைய அன்றாட வாழ்விலும், சமூகத்திலும் நாம் எதிர் கொள்ளும் அத்தனை அட்டூழியங்களையும் ஒண்டி ஆளாக நின்று துவம்சம் செய்து நியாயத்தை நிலை நாட்டுகிறான். அதே போல் அவன் நம்முடைய நிஜ வாழ்விலும் செய்வான் என்று நம்ப ஆரம்பிக்கிறோம். மக்கள் கூட்டம் ஒரு நடிகனின் பின்னே கண்மூடித்தனமாகச் செல்வதன் காரணம் இதுதான். ஆனால் மக்கள் கூட்டம் இப்படிப்பட்ட மதி மயக்கத்தில் ஒரு நடிகரை அவதார புருஷராக எண்ணி அவர் பின்னே சென்றால், அதற்காக அந்த நடிகரும் தன்னை ஒரு அவதார புருஷனாக நினைத்துக் கொள்வதா? எத்தனை பெரிய மதியீனம் அது?

திராவிடக் கட்சி கலாச்சாரம் மக்களுக்கு மிகவும் வெறுப்பூட்டுவதாக இருந்தது. லும்பன்கள் சமூக நிறுவனங்களைப் பெருமளவில் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். புதிய இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய கல்விக்கூடங்கள் கூட லும்பன்களின் பொறுப்பில் வந்தன. நூற்றுக் கணக்கான குழந்தைகள் தீயில் கருகிச் செத்தார்கள். இல்லாவிட்டால் பஸ்ஸோடு வைத்துக் கொளுத்தப் பட்டார்கள்.

பொற்காலத் தலைவர்களின் ஆட்சிக் காலம் பற்றிய ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. அந்த ஆண்டு 1996. திராவிடக் கட்சிகளின் மாற்றாக மக்களும் ஊடகங்களும் ரஜினியை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ அந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் இல்லாமல் அதை மறுதலித்து விட்டார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று நாம் விட்டு விட முடியாது. ஏனென்றால், ‘ நான் அரசியலுக்கு வருவேன், வருவேன் ’ என்று பல ஆண்டுகளாக மக்களை அவர் ஏமாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அதெல்லாம் அவருடைய படங்கள் ஓடுவதற்காக அவர் வீசிய பொய்கள் என்று பிறகுதான் தெரிந்தது.

இப்போது தன்னுடைய குட்டு உடைந்ததும் அதற்கு வேறொரு விளக்கம் தருகிறார். குசேலன் படத்தில் “ ’ அரசியலுக்கு எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் ’ னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புறீங்களே? ” என்று ஒரு பாத்திரம் கேட்கிறது. அதற்கு ரஜினி ” அது ஒரு படத்துல யாரோ ஒருத்தர் எழுதிக் கொடுத்த டயலாக். அதை நீங்க உண்மைன்னு எடுத்துக் கிட்டா அதுக்கு நான் என்ன செய்யறது? ” என்கிறார். அது மட்டும் அல்ல; அப்படி ஒரு நியாயமான கேள்வியைக் கேட்ட பாத்திரத்தையே ஏதோ ஒரு பித்தலாட்டக்காரனைப் போல் சித்தரித்திருக்கிறார்கள். எத்தனை பெரிய ஏமாற்று வேலை இது? உண்மையில் அந்த டயலாக் வெறும் டயலாக் தானா? அப்படியானால் அதை ஏன் ரஜினி அப்போதே சொல்லவில்லை?

இது மட்டுமல்லாமல், பல்வேறு சமூக அரசியல் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து தன்னுடைய அரை வேக்காட்டு அபிப்பிராயங்களைச் சொல்லி வருகிறார் ரஜினி. ஒரு முறை ” நதிகளையெல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும்; அதற்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை தருகிறேன் ” என்றார். இப்படிச் சொல்ல இவர் என்ன நதி நீர் ஸ்பெஷலிஸ்டா என்று யாரும் இவரைக் கேட்கவில்லை. ஏனென்றால், இங்கே சினிமா நடிகர்கள்தான் எல்லா விஷயங்களையும் பற்றி அறிந்து வைத்திருக்கும் நிபுணர்கள். அவர்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும்!

ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார். அவர் பேசியது ஒரு தேச விரோதக் கருத்து என்று அவருக்குத் தெரியுமா? வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்றாவது தெரியுமா? உதைத்தால் என்ன ஆகும்? பெங்களூரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கே கன்னடமே தெரியாமல் ஒருவர் தமிழ் மட்டுமே பேசிக் கொண்டு வாழ்ந்து விடலாம். பிழைப்புக்காக கடைக்காரர்களும், வர்த்தகர்களும் தமிழ் கற்றுக் கொண்டு நம்மிடம் தமிழில் பேசுகிறார்கள். தண்ணி தராவிட்டால் கன்னடக்காரனை உதைப்பேன் என்றால், ‘ எங்கள் பெங்களூரை எங்களுக்குத் தாருங்கள் ’ என்று சொல்லி அங்கே வாழும் தமிழர்களை அவர்கள் உதைக்க மாட்டார்களா?

உதைப்பதுதான் ரஜினியின் ஆன்மீகம் அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடமா? இந்த நாட்டில் ஏன் ஆன்மீகவாதிகளெல்லாம் வன்முறையை அனுசரிப்பவர்களாக இருக்கிறார்கள்? அதே உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் எவ்வளவு நிதானமாகப் பேசினார்? ஒரு நாஸ்திகர் வன்முறையைக் கண்டிப்பதும், ஒரு ஆன்மீகவாதி வன்முறையைத் தூண்டுவதும் எவ்வளவு பெரிய வேடிக்கையான முரண்பாடு!

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு கர்னாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினி அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது குசேலனுக்கு கர்னாடகாவில் பிரச்சினை என்றதும் அந்த ‘உதை ’ பேச்சுக்கு கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் ரஜினி. உடனே இந்த மன்னிப்புக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதும் “நான் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை; வருத்தம்தான் தெரிவித்தேன் ” என்று அந்தர்பல்டி.

மன்னிப்பு என்றதும் எனக்கு ஓரான் பாமுக் விவகாரம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘துருக்கியர்களால் பல்லாயிரக் கணக்கான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டார்கள் ’ என்று ஒருமுறை அவர் சொன்னதற்காக அவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப் பட்டது. நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. அவர் சொன்ன வார்த்தைகளுக்கு மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்படலாம்.

அந்த நேரத்தில், ஐரோப்பிய யூனியனில் தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய யூனியனை நெருக்கிக் கொண்டிருந்தது துருக்கி. இஸ்லாமியர் அதிகம் வாழும் நாடு துருக்கி. ஐரோப்பிய யூனியன் நாடுகளோ கிறித்தவர்கள் வாழும் பிரதேசம். அப்போது ஐரோப்பிய யூனியன் துருக்கியிடம் “உங்கள் நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை ’ என்று கூறி ஓரான் பாமுக் விவகாரத்தைச் சுட்டிக் காட்டின.

அப்போது ஓரான் பாமுக்கிடம் துருக்கி அரசு “உங்கள் கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் ” என்று கேட்டுக் கொண்டது. அப்போதும் பாமுக் சொன்னார்: “முடியாது; எனக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை. நான் சொன்னது வரலாற்று ரீதியான உண்மை. அதற்காக நாம்தான் ஆர்மீனியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தான் முன்பு சொன்னதையே வலியுறுத்திச் சொன்னார். (பின்னர், அரசாங்கம் தானாகவே வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது; துருக்கியும் அசோசியேட் மெம்பராக ஐரோப்பிய யூனியனில் இணைந்தது).

இந்த உதாரணம் எதற்கு என்றால், துருக்கியில் ஒருவர் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன் ’ என்கிறார். இங்கே, ஒரு நடிகர் தன் படம் ஓட வேண்டும்; தன் வங்கிக் கணக்கில் சில கோடிகள் சேர வேண்டும் என்பதற்காக தான் தமிழர்களுக்காக சொன்ன வார்த்தையைத் தானே விழுங்குகிறார்; மன்னிப்பு கேட்கிறார்.

ரஜினி ஒரு நடிகர். அதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் பத்திரிகைகள் கொடுத்த அசுரத்தனமான விளம்பரத்தைத் தன் படங்களின் விற்பனைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சுய நலத்தோடு செயல்பட்டார் ரஜினி. அது இப்போது அவரைச் சுடுகிறது. ரஜினியை விடவும் சீனியர் நடிகர் கமல். ஆனால் அவர் எப்போதாவது சமூக, அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு கருத்து கூறினாரா? கமலை விடுங்கள். இந்தியாவிலேயே இன்று மிகப் புகழ் பெற்ற மனிதர் யார்? கன்னியாகுமரியிலும், உத்தரப் பிரதேசத்தின் குக்கிராமத்திலும் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவர்களுக்குத் தெரிந்த ஒரு பெயர் எது? சச்சின் டெண்டுல்கர். ஒரு இந்தி சினிமா நடிகனை விடவும் பிரபலமான பெயர் அது. புகழின் இத்தனைப் பெரிய உச்சியில் இருக்கும் சச்சின் எப்போதாவது அரசியல் விஷயங்களில் கருத்து சொல்லியிருக்கிறாரா?

ரஜினி மிகவும் அடக்கமானவர். ஒரு துணை இயக்குனர் வந்தால் கூட எழுந்து நின்று மரியாதை தரும் பண்பாளர். இந்த அடக்கம் இன்று மிக அரிதாகி விட்ட ஒரு பண்பு. இப்படிப் பட்ட ரஜினி பொது வாழ்வில் மட்டும் ஏன் தொடர்ந்து அந்தப் பண்பைக் கை விட்டு விடுகிறார்?

உண்மையில் ரஜினியின் அபிப்பிராயங்கள் அரை வேக்காட்டுத் தனமானவை; அவை ஊடகங்களால் பூதாகாரமாக்கப் படும்போது ரஜினி பஃபூனாகி விடுகிறார். (ஒரு உதாரணம்: ” பா.ம.க.வைத் தோற்கடிக்கணும்; ஆனா அவங்க கூட்டணிக்கு ஓட்டுப் போடணும். ” இந்த அபிப்பிராயம் 2004-தேர்தலில் ரஜினி உதிர்த்தது). ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்துச் சென்று ஒரு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக்கினால் அது எவ்வளவு பெரிய காமெடியாக இருக்கும்? அதுதான் ரஜினி விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிகைகள்தான் தங்கள் விற்பனைக்காக இந்த அதர்ம காரியத்தைச் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும், ரஜினிக்காவது யோசனை வேண்டாமா?

இந்தப் பின்னணியில்தான் இப்போது வந்துள்ள குசேலனைப் பார்க்க வேண்டும்.

‘ பாபா ’ வின் படுதோல்விக்குப் பின்னர், பல வருடங்களுக்குப் பிறகு , மலையாள தழுவல் படமான ‘ சந்திரமுகி ' யில் நடித்தார் ரஜினி. பல வினியோகஸ்தர்கள் லாபம் அடைந்தனர். ஆனால் அந்தப் படத்தின் கதையை எழுதியவருக்குக் கொடுக்க வேண்டிய ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கூடக் கொடுக்கப் படவில்லை. காரணம், ரஜினி அப்போது இமயமலையில் ‘ தவம் ’ செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு , ‘ சிவாஜி ' என்ற பிரமாண்டமான படம் வினியோகஸ்தர்களுக்குப் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் இப்போது நீதி மன்றத்தில் இருக்கிறது.

தற்போது , ‘ குசேலன் ' படத்தில் பல வினியோகஸ்தர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்திருக்கிறார்கள். காரணம், இதன் மலையாள ஒரிஜினலான ‘கத பறயும் போள் ’ ஒரு குறைந்த பட்ஜெட் படம். தமிழிலும் இதன் தயாரிப்புச் செலவு ஆறரை கோடிதான். ஆனால் , சாய் மீரா நிறுவனம் , கிட்டத்தட்ட 65 கோடிக்கு இந்தப் படத்தை வாங்கியது. இவர்கள் சென்னை , மதுரை , சேலம் என்ற ஊர்களில் மட்டும் வினியோகம் செய்திருக்கின்றனர். செங்கல்பட்டில் இயக்குனர் பி.வாசுவின் அண்ணன் வித்யாசாகர் , எட்டே கால் கோடிக்கு வாங்கியிருக்கிறார் ; வட ஆற்காட்டில் இரண்டே கால் கோடி; கோவையில் ஐந்தரை கோடி; திருச்சியில் நாலரை கோடி; நெல்லையில் இரண்டே கால் கோடி என்று விற்பனை ஆகியிருக்கிறது படம்.

படத்தின் ஆடியோ இரண்டு கோடிக்கு போயிருக்கிறது. டிவி உரிமம் ஐந்தரை கோடி. இது தவிர , வெளிநாட்டு வினியோகம் , ஆந்திரா , கர்நாடகா , கேரளா என்று பல கோடிக்கு விற்பனை. இத்தனை கோடிகளுக்கு விற்பனை ஆகியிருக்கும் குசேலன் ரிலீசான மூன்றாவது நாளே , சென்னையைத் தவிர , அனைத்து இடங்களிலும் தியேட்டர் நிறையவில்லை.

ஆறரை கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு ரஜினியின் சம்பளம் 26 கோடி. படத்தின் தயாரிப்பாளர்களான கே. பாலசந்தர், விஜயகுமார், அஸ்வினி தத் மூவருக்கும் தலா 12 கோடி. ஆனால் படத்தின் விநியோகஸ்தர்கள் இன்று பல கோடிகளை இழந்து கதி கலங்கிப் போயிருக்கின்றனர்.

கடைசி காட்சியில் ரஜினி ‘ என் நண்பனை இன்று வரை தேடுகிறேன் ; அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை ' என்று கண் கலங்கும் போது , தியேட்டரில் பல இடங்களில் சிரிப்பலை எழுகிறது. இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் , தமிழகத்தில் இருக்கும் ஒரு நண்பரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது , இன்றைய காலகட்டத்தில் கேலிக்கூத்தாக இருக்கிறது.

குசேலன் ரிலீசான அன்றே ஆந்திராவில் , ‘ உல்லாசங்கா உற்சாகங்கா ' என்ற புதுமுகங்கள் நடித்த திரைப்படம் , கருணாகரன் என்பவர் இயக்கி ரிலீசானது. அந்தப் படம் இன்று ஒரு சூப்பர் ஹிட். ஆனால் , ராஜமுந்திரி , விசாகபட்டினம் போன்ற இடங்களில் , பல தியேட்டர்களில் ‘ குசேலன் ' வெறிச்சோடிக் கிடக்கிறது.

இதற்கு முன் பல படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ் எல்.வி.பிரசாத் , ஏவி.எம். , நிறுவனம் , விஜய வாகிணி , சத்யா மூவிஸ் , மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் , முதலில் கதையை மட்டுமே தேர்வு செய்வர். பிறகுதான் எந்த நடிகர் என்று முடிவு செய்வர். அவர்களது சொந்தச் செலவிலேயே 40 சதவீதம் படத்தை முடித்துவிட்டு , வினியோகஸ்தர்களைக் கூப்பிட்டு வியாபாரம் பேசுவர்.

சமகாலத் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், யதார்த்தமான கதைகளைக் கொண்ட சுப்ரமணியபுரம் போன்ற படங்களை மக்கள் இன்று கொண்டாடுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து , பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கி வெளிவந்துள்ள ‘ குசேலன் ' படம் தோல்வி. இதற்குக் காரணமும் ரஜினியின் கோழைத்தனம்தான். குசேலனின் மலையாள ஒரிஜினல் ‘கத பறயும் போள் ’ படத்தில் வரும் மம்முட்டி கடைசியில் அரை மணி நேரமே வருவார். உண்மையில் கதையின் ஹீரோ முடி திருத்துபவர்தான். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவனும் ஒரு சாதாரண மனிதன்தான்; அவனிடம் எந்தவித ஒளி வட்டமும் இல்லை என்பதே அந்த அருமையான மலையாளப் படத்தின் கதை. மலையாளத்தில் அது ஒரு சூப்பர் ஹிட். ஆனால் இங்கே ரஜினியால் அரை மணி நேரத்துக்கு மட்டுமே வரும் படத்தில் நடிக்க முடியாதே? அதனால் அவருக்கென்று கதையில் நிறைய ஒட்டுப் போட்டு படம் பூராவும் ரஜினி வருமாறு செய்தார்கள். கதையின் அடிப்படையையே குலைத்து விட்டதால் படம் ஊற்றிக் கொண்டது.

எனவே இனி ரஜினி செய்ய வேண்டியது இரண்டே விஷயங்கள்தான். ஏ.ஆர். ரஹ்மான் பாணியில் பத்திரிகைகாரர்கள் என்ன கேட்டாலும் - அடுத்த தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என்று கேட்டால் கூட – ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே ’ என்று பதில் சொல்ல வேண்டும். அடுத்து, தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையே 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டிருக்காமல், சுப்ரமணியபுரம் சசிகுமார் போன்றவர்களின் படங்களிலும் ஒரு சாதாரண நடிகனாகப் பணியாற்ற வேண்டும். இதைச் செய்யாவிட்டால் சூப்பர் ஸ்டார் பதவியை அவரால் தக்க வைத்துக் கொள்வது கடினம்.

சரி, இந்த விஷயத்தில் பார்வையாளர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? பல ஆண்டுகளுக்கு முன்பு நாடகக்காரர்களையும், சினிமாக்காரர்களையும் கூத்தாடி என்று கேவலமாகப் பேசியது சமூகம். ஆனால் இன்றோ அவர்களை அதி மனிதர்களாக (சூப்பர்மேன்) நினைத்து வழிபட ஆரம்பித்து விட்டது. பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், நடிகருக்கு விரலை வெட்டி அனுப்புவது (காணிக்கை!) போன்ற பைத்தியக்காரத்தனமெல்லாம் அதன் வெளிப்பாடுதான். ஆக, இந்த இரண்டு மனோபாவமுமே தவறு. நடிகர்களும் மற்றவர்களைப் போல் ஒரு தொழிலையே செய்கிறார்கள். படுதாவில் நாம் காண்பதெல்லாம் வெறும் கற்பனை; நூறு அடியாட்களை அடித்து நொறுக்கும் ஒரு ஹீரோ நிஜத்தில் ஒரே ஒரு ஆளைக் கூட அடிக்க முடியாதவனாக இருப்பான். எனவே, கற்பனை வேறு, நிஜம் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

***

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் “தமிழர்களே...பட்ட சூடு போதுமே! ” என்ற தலைப்பில் 10.8.2008 தேதியிட்ட தினமலர் நாளிதழில் வெளிவந்தது. பொதுவாக ஆங்கில தினசரிகளில்தான் இது போன்ற கட்டுரைகள் வருவது வழக்கம். இப்போது முதல் முதலாக தினமலரில் ‘ உரத்த சிந்தனை ’ என்ற பகுதியில் சமூக அரசியல் நடப்புகளைப் பற்றி புத்திஜீவிகளையும், எழுத்தாளர்களையும் அழைத்து எழுத வைத்துக் கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. அப்படியே தினமலர் நிர்வாகம் எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ‘ பாதுகாப்பு ’ ஏற்பாடும் செய்து கொடுத்தால் நன்றியுடையவர்களாக இருப்போம்!)