புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அந்த போஸே நிரந்தரமாகத் தங்கி விட்டதைப் போல் எப்போதும் சிரித்த முகத்துடனேயே காணப்படும் நிக்கி அன்று சோர்வாக தெரிந்தான் என்ன விஷயம் என்று கேட்டேன்.
“ வாழ்க்கை சற்று அலுப்பாகப் போகிறது ; போதுமான சாகசம் இல்லை ” என்றான்
“ ஏதாவது வெளி நாட்டுக்குப் போகலாம் ; பாங்காக் உத்தமம் ” என்றேன்
“ அதுவும் அலுத்து விட்டது ” என்றான்
எதிரே தெரிந்து நீச்சல் குளத்தில் ஒரு வெள்ளைத் தோல் மங்கை back stroke போட்டு வந்து கொண்டிருந்தவள் ஒரு இடத்தில் நின்று அப்படியே மிதந்தபடி கிடந்தாள் இன்னும் மலராத அல்லி மொக்குகளை ஒத்த கொங்கைகள் தண்ணீரின் மேலே தனித்துத் தெரிந்தன ஆனாலும் எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை இந்தியர்களின் மனம் பழுப்பு நிறத்திற்கு மட்டுமே அலைவுறும் போலும்
சரி இருவருக்கும் பிடித்த ஒரு விஷயத்தில் சாகசம் நாடலாம் என்று முடிவாயிற்று
என்ன அது ? சமையல்
சமையல் என்றால் சாம்பாரோ அல்லது விரால் மீன் குழம்போ வைப்பதல்ல எல்லோரும் தினம் தினம் செய்வதையே செய்வதில் என்ன சாகசம் இருக்கிறது ? நாம் ராஜ குமாரர்கள் ஆகவே ராஜ குமாரர்களைப்போல் உண்டு மகிழ்வதென முடிவெடுத்தோம் அன்றைய தினம்தான் நான் வசிக்கும் சாலி கிராமத்திலிருந்து அந்த நட்சத்திர ஓட்டல் வருவதற்கு அவந்திகா வைத்திருந்த உண்டியலை உடைத்து எடுத்து வந்திருந்த ஐந்து ரூபாய் நாணயங்களை ஒவ்வொன்றாக அந்த ஓட்டல் வாசலில் வைத்து 16 நாணயங்களை ஆட்டோ ட்ரைவரிடம் கொடுத்து விட்டு வந்திருந்தேன் ( ஆட்டோக்களுக்கு அந்த ஓட்டலின் உள்ளே அனுமதியில்லை)
அதனால் என்ன ? பிச்சையெடுத்தாலும் ராஜகுமாரன் ராஜகுமாரன்தானே?
“ டூ மச் ” என்றான் நிக்கி
“ அட , நானே மிகவும் தன்னடக்கமாகக் கூறுகிறேன் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் கடவுள் ”
“ அது பாலா எடுக்கும் படமாயிற்றே ?”
“ ஓ மை காட் நான் ஒரு க்ரியேட்டர் சிருஷ்டிகர்த்தா படைப்பாளி ”

வளர்த்திக் கொண்டு போக வேண்டாம் ராஜாக்கள் எப்படிச் சாப்பிட்டார்கள் எதைச் சாப்பிட்டார்கள் என்பதை முதலில் கண்டறிய வேண்டும் என்பதாக எங்கள் சாகசப் பயணத்தைத் துவங்கினோம் கிடைத்தது சரபோஜி மன்னரின் சமையல் குறிப்பு ( எங்கே கிடைத்தது எப்படி கிடைத்தது என்பது இப்போதைக்கு ரகசியம்) சரபோஜி மன்னருக்கு சமையல்காரராக இருந்த நாராயண அய்யா மற்றும் பட்லர் வெங்கடசாமி இருவரும் வாய்மொழியாகச் சொன்ன சமையல் முறைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன சரபோஜி மன்னர் ( 1798 - 1832) விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகள் அவை
60 களில் தமிழ் நாட்டில் ‘ தஞ்சாவூர் மராட்டா(டி) மிலிட்டரி ஓட்டல் ’ என்ற பெயர் தாங்கிய ஓட்டல்கள் நிறைய இருந்தன படு சுவையான ராஜ உணவுகளை வழங்கிய அந்த மிலிட்டரி ஓட்டல்கள் 80 களிலேயே மறைந்து விட்டன போகட்டும் இப்போது அந்த நட்சத்திர விடுதி செஃப்பிடம் சரபோஜி மன்னர் சாப்பிட்ட உணவுப் புத்தகத்தைக் கொடுத்து ஒவ்வொரு வகையாக செய்யச் சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் யான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டி அதிலுள்ள இரண்டு தயாரிப்புகளைத் தருகிறேன் ( ஒன்று சைவப்பிரியர்களுக்கு ஒன்று அசைவப் பிரியர்களுக்கு)
முதலில் சைவம்
புளியோதரை : இப்போதெல்லாம் நகரங்களில் யாரும் புளியோதரை சாப்பிடுவதாகத் தெரியவில்லை வைணவக் குடும்பங்களில் புளியோதரை சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும் பின் வருவது மராட்டி புளியோதரை :
சாதம் செய்து கொள்ளும் முறைப்படி 1/2 படி நல்ல அரிசியை சாதமாகச் செய்து கொள்ளவும் கலாயி (ஈயம்) பூசிய தாம்பாளத்தில் சாதத்தைப் போட்டு நடுவில் குழி செய்து கொள்ளவும் அதில் போட வேண்டிய சாமான்கள் : 70 கிராம் புளியை 70 கிராம் நீரில் கரைத்து சாதத்தின் மேல் ஊற்றவும் அதில் 2 டீஸ்பூன் உப்பையும் 6 ஸ்பூன் வறுத்து அரைத்த கடுகையும் போடவும்
எள்ளு 6 ஸ்பூன்
கடலைப் பருப்பு வேக வைத்தது 250 கிராம்
உளுத்தம் பருப்புவறுத்து அரைத்த தூள்
மஞ்சள் தூள் - கொஞ்சம் –
மேற்கூறியவைகளை நன்றாக நல்லெண்ணெயில் வறுத்து தூள் செய்து இத்துடன் தூள் செய்த சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூனையும் கலந்து - ஆக இந்த ஐந்து வகைத் தூள்களையும் சாதத்தின் மேல் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்
பிறகு தாளிப்பதற்கு வேண்டியது : காய்ந்த மிளகாய் 5, உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன் , கடுகு 4 ஸ்பூன் , கறிவேப்பிலை பெருங்காயம் கொஞ்சம் - இந்த 5 வகைகளையும் 400 கிராம் நல்லெண்ணெயில் போட்டு உளுத்தம் பருப்பு சிவந்ததும் எடுத்து சாதத்தில் போட்டு மறுபடியும் ஒருமுறை நன்றாகக் கலந்து விடவும் இப்போது சரபோஜி மன்னர் சாப்பிட்ட புளியோதரை ரெடி!
அசைவம் : முர்கி புலாவ் (இந்தியில் முருகா என்றால் கோழி)
முதல் முதலாக முட்டை போட்ட நாட்டுக் கோழி - இரண்டு (சரபோஜியின் ராஜ பக்குவத்தை கவனியுங்கள் ; முதல் முதலாக முட்டை போட்ட கோழி! )
ஆட்டின் எலும்பு - கொஞ்சம்
தொடைக்கறி - கால் கிலோ
அரிசி - இரண்டு ஆழாக்கு (அதாவது 400 கிராம்)
நெய் - 350 மில்
ஜாதிப்பத்திரி - 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
ஏலம் - 1 ஸ்பூன்
கிராம்பு - அரை ஸ்பூன்
லவங்கப்பட்டை - 1 ஸ்பூன்
வாதாம் பருப்பு - 50 கிராம்
மல்லி 50 கிராம்
பூரஞ்சியிலை ( ?) - 1 ஸ்பூன்
கசகசா - 30 கிராம்
உலர்ந்த கொப்பரை - 30 கிராம்
உப்பு- போதுமான அளவு
வெங்காயம்- கால் கிலோ
வெண்ணிற துணி - 1
கோழி முட்டை - 3
மினரல் வாட்டர் - முக்கால் லிட்டர் விட்டு எலும்பையும் போட்டு வேக வைத்து முக்கால் லிட்டர் தண்ணீர் கால் லிட்டர் சூப்பாக மாறும்வரை சுண்ட வைத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்றாகக் கழுவி துணியில் முடிந்து அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும் ஒரு தேக்சாவை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு அரிந்த வெங்காயத்தைப் போட்டு அது சிவந்ததும் வெங்காயத்தைத் தனியே எடுத்து வைக்கவும்
கோழியின் தலை கால் றெக்கை இவைகளைத் துண்டித்து எடுத்து விட்டு மறுபடியும்
நன்றாகக் கழுவி சிவந்த நிறமாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும் தொடைக் கறியை எலுமிச்சை அளவு துண்டங்கள் செய்து மறுபடியும் நன்றாக சுத்தம் செய்து அதையும் நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும் அந்த நெய்யில் அரிசியையும் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்
வாதுமைப் பருப்பின் மேல் தோலை சுடு நீரில் போட்டு உறித்துக் கொண்டு முட்டையை வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து மேல் தோலை உறித்து விட்டு எடுத்து வைக்கவும்
வறுத்த அரிசியில் சூப் சாறு ஊற்றி உடனே ஒரு சுத்தமான துணியில் வாசனைப் பொருள்களை போட்டு முடித்து அத்துடன் உப்பும் முட்டையும் மத்திய பாகத்தில் தனித்தனியாகப் பரப்பி நடுவில் வறுத்த கோழித் துண்டுகளையும் வைத்து அதன் மேல் சோற்றில் பாதியை மேலே போட்டு பாத்திரத்தின் மேல் மூடி போட்டு நன்றாக மூடி தம் கொடுத்து (தணலை மூடி மேல் போடுதல்) வைக்கவும் எடுத்து பரிமாறும்போது புலாவ் மேல் வறுத்த வெங்காயம் போட்டு பரிமாறவும்
அதுசரி தணலுக்கு எங்கே போவீர்கள் ? அடுப்புக் கரியை வாங்கி வந்து அதைப் பற்ற வைத்து எரிய விட்டால் போதுமான தணல் கிடைக்கும்
இப்படிச் சாப்பிட்டு விட்டு ஏசி அறையில் கணினியின் முன்னே உட்கார்ந்து விடக் கூடாது மாலையில் 5 கிமீ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க வேர்க்க நடக்க வேண்டும் இல்லாவிட்டால் கொலஸ்ட்ரால் ஏறும் மேலும் நம் நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு ஒரு காரணம் பெண்களை அடுக்களைக்குள் அனுப்பி விட்டது “ இல்லையே இப்போது அவர்கள் படித்துவிட்டு வேலைக்குப் போகிறார்களே ?” என்று என்னிடம் வாதம் செய்யக் கூடாது படிக்காத அந்தக் காலப் பெண்களைவிட இந்தக்காலப் பெண்களுக்கு சுமை அதிகம் ஆபீசுக்கும் போக வேண்டும் சமைக்கவும் வேண்டும் எனவே மேற்கண்ட அய்ட்டங்களை ஆண்களே செய்வது நல்லது
சரபோஜி மன்னரின் பட்லர் மாமிச ஊறுகாய், புடலையில் மாமிசம் நிரவி செய்யும் கறி, வேப்பம் பூ சாம்பார், கதளி (வெந்தயக் கீரையில் செய்யும் கீரைக் குழம்பு) என்று விதவிதமாகக் கூறியிருக்கிறார்.
இதே போல் அக்பர் ஷாஜகான் போன்ற பேரரசர்கள் சாப்பிட்ட உணவு வகைகள் மற்றும் அவற்றின் செய்முறைகளையும் தேடி வைத்திருக்கிறேன்
ஒளரங்கசீப் தன் தந்தை ஷாஜகானை ஆக்ரா கோட்டையில் சிறை வைத்தபோது அடிக்கடி மல ஜலம் போக வேண்டிய தேலையில்லாதபடிக்கு அவருக்கு ஒரு வேளைதான் உணவு வழங்கப்பட்டது அதன் பெயர் ஷாஜகானி குருமா ( ஆட்டுக் குட்டியின் பின் பக்கத் தொடைக் கறியால் செய்வது) இது ஷாஜகான் கைதியாக இருக்கும்போது சாப்பிட்டது ; அவர் அரசராக இருக்கும்போது சாப்பிட்டது ? அதுவும் கைவசம் உள்ளது
சமையல் சம்பந்தமாக ஒரு ரசமான குறிப்பு : எனக்குத் தெரிந்து மூன்று பேர் சமையல்
விற்பன்னர்கள் : நிக்கி, இரண்டு பெக் அடித்தவுடன் சட்டையைக் கழற்றி விடுவாரே அந்த இயக்குனர் மற்றும் நாஞ்சில் நாடன் இந்த மூவருமே நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்கள் கோணல் பக்கங்களில் ‘ தண்ணி ’ ஜாஸ்தியாக உள்ளதென்று நண்பர்கள் அபிப்பிராயப் பட்டதால் தண்ணி இல்லாமல் எழுதி விட்டேன் கோபிக்காதீர்கள்
***
(இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் குமுதத்தில் வெளிவந்து கொண்டிருந்த கோணல் பக்கங்கள் எந்த அறிவிப்பும் இன்றி திடுமென்று நிறுத்தப் பட்டது)
|