நான்கு மணிக்குத்தான் ஹைதராபாத்துக்கு ரயில். எவ்வளவு வற்புறுத்தியும் ஊருக்குத் திரும்ப மாட்டோம் என்றார்கள் செலினும், ஷெரீனும்.
“ பாதுகாப்பு இல்லாமல் இப்படியே அலைந்து கொண்டிருந்தால் என்ன ஆகும் தெரியுமா ?” என்று உரத்த குரலில் கேட்டான் சேட்.
“ஒன்றும் ஆகாது ; எங்களுக்கு 18 வயது தொடங்க இன்னும் ஓரிரு மாதங்கள்தான் உள்ளன. அதற்குப் பிறகு நாங்கள் மேஜர். யாரும் எங்களை எதுவும் கேட்க முடியாது ” என்றாள் ஷ்ரேயா.
“ அதைச் சொல்லவில்லை. பெண் தரகர்கள் உங்களைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா ?” என்று நான் வெளிப்படையாகக் கேட்டேன்.
“ நாங்கள் மூன்று பேரூமே பெரிய இடத்துப் பெண்கள். எங்களை ஒரு துரும்பு கூடத் தொட முடியாது. நினைத்தால் எங்களால் பிரதம மந்திரியுடன் கூடப் பேச முடியும்.”
சவடால் இல்லை. அவர்களால் முடியும் என்றுதான் தோன்றியது.
“ ஒரே ஒரு நாள். இன்னும் ஒரே ஒரு நாள் இருந்து ஓய்வு எடுத்து விட்டுச் சென்று விடுகிறோம் ” என்றார்கள்.
எனக்கும் பாவமாக இருந்தது. நிச்சயமாக அவர்களுக்கு ஓய்வு தேவை. ஆனால் சேட் பிடிவாதமாக இருந்தான். அவர்கள் நம்முடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்து ; அவர்கள் லைவ் பாம்ஸ் என்றான்.
என்னிடம் ஐந்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உடனடியாக அவர்களை வண்டியேற்றி விடும்படிக் கூறினான். ( ஆனால் காசை அவர்கள் கையில் கொடுத்து விடாதே ; ஊருக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு டிமிக்கி கொடுத்து விடுவார்கள். வண்டி கிளம்பியதும் தான் நீங்கள் நகர வேண்டும் என்று என் காதில் வேறு கிசுகிசுத்தான் சேட்).
“ முதலில் ஏதாவது சாப்பிட வேண்டும் ” என்றார்கள் மூவரும். ஓட்டலுக்குப் போனால். அங்கே சிப்பந்தியிலிருந்து சக கஸ்டமர்கள் வரை எல்லோரும் அந்தப் பெண்களை பார்வையிலேயே அள்ளினார்கள். காரணம், அவர்களின் உடை. மறைவாக இருக்கும் இடங்களெல்லாம் அப்பட்டமாக வெளியே தெரிந்தன.
அவர்கள் கை கழுவச் சென்றிருக்கும்போது ரெங்கராஜியிடம் சொன்னேன் : “ இவர்கள் நிச்சயம் ஊருக்குப் போக மாட்டார்கள். நாம் என்ன ஹைதராபாத் வரைக்குமா இவர்கள் கூடச் செல்லப் போகிறோம் ? இவர்கள் அரக்கோணம் ஸ்டேஷனிலேயே இறங்கி வேறு எங்காவது சென்று விடுவார்கள். அதனால் போலீசில் ஒப்படைத்து விடுவோம்.”
“ ஒப்படைத்தால் உங்களைப் பற்றி தாறுமாறாகப் புகார் செய்வோம்.” பின்னால் ஷரேயாவின் குரல் கேட்டது.
பிறகென்ன ? நான்கு மணி வரை அவர்களோடு சுற்றிக் கொண்டிருந்தோம் நானும் ரெங்குராஜும். த்ரீ டயர் ஏசியில் மூன்று டிக்கட் வாங்கிக் கொடுத்து கையில் இரண்டாயிரம் கொடுத்து வண்டி ஏற்றி விட்டோம்.
“ அதிகம் கொடுக்கலாம். ஆனால் பணம் இருக்கும் தைரியத்தில் வேறு எங்காவது போய் விடுவார்கள் ” என்றான் ரெங்கராஜ்.
ஹைதராபாத் சென்றபின் அங்கே என்ன பிரச்சினை என்றாலும் தன்னை உடனே தொடர்பு கொள்ளும்படிச் சொல்லி தன் மொபைல் நம்பரை அவர்களிடம் கொடுத்தான் ரெங்கராஜ்.
வண்டி கிளம்பும் நேரம் நெருங்கியது. அப்போது என் அருகில் வந்த செலின் மேற்கத்திய பாணியில் என்னை அணைத்து முத்தமிட்டு. “ நீங்கள் காண்பித்த அன்பில் ஆயிரத்தில் ஒரு மடங்கை எங்கள் பெற்றோர் எங்கள் மீது காண்பித்திருந்தால் கூட நாங்கள் இப்படி ஓடி வந்திருக்க மாட்டோம் ” என்றாள்.
கண்கள் கலங்கியிருந்தன.

( Guru with Friends : Bangalore Meet )
My dear readers! செலின் அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்காவிட்டால் இச்சம்பவத்தைப் பற்றி நான் எழுதியிருக்க மாட்டேன். பெற்றோர்தான் காரணம். பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் பெரும்பான்மை குற்றங்களுக்கும் இதுவே காரணம் . பிரமோத் மகாஜன் குடும்பத்தில் நடந்த கொலை மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
நம் கதை இன்னும் முடியவில்லை. ரொவால்ட் டால் கதையின் திருப்பம் என்றல்லவா எழுதினேன் ?
உள்ளுக்குள் பயம் எகிறிக் கொண்டிருந்தது. சரி. இந்த உலகமே எதிர்த்தாலும் அவந்திகா
என் பக்கத்திலிருந்தால் போதும் என்று தோன்றியது. பொதுவாக ஆண்கள் தமது மனைவிமார்களைப் பற்றி எப்படி நினைப்பார்களோ தெரியாது. ஆனால், மனைவி என்றால் ஏதோ ஒரு வினோதமான ஜந்து என்பதாகத்தான் பல நூற்றுக்கணக்கான ஜோக்குகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனது நண்பர்களும் கூட தமது மனைவியைப் பற்றிப் பேச்சு வரும்போது ஏதோ போலீஸ் கமிஷனரைப் பற்றிக் குறிப்பிடுவது போல்தான் பேசுகிறார்கள். ஆனால் நான் அவந்திகாவை என் குல தெய்வத்தைப் போலவே கொண்டாடுகிறேன்.
வீட்டுக்கு வந்து நடந்தது முழுவதையும் அவளிடம் சொன்னேன். சொல்லும்போது கார்த்திக்கும் உடனிருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.
சுமார் இரண்டு வாரம் கடந்திருக்கும். அவர்களிடமிருந்து ஏதாவது போன் வரும் என்று எதிர்ப்பார்த்தேன். வரவில்லை. அந்த வயதுப் பெண்களை பார்க்கும் போதெல்லாம் ‘ அவர்கள் தானோ ?’ என்று தேடினேன்.
அப்போது ஒருநாள், கார்த்திக் ஒரு தினசரியை எடுத்துக் கொண்டு பரபரப்புடன் ஓடி வந்தான்.
“ அப்பா. நீங்கள் சொன்ன மூன்று பெண்களும் இவர்கள்தானே ?”
“ காணவில்லை ” என்று போட்டு அந்த மூன்று பெண்களின் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
***
ஃப்ளேம்ஸுக்குள் நுழையும் போது நான் சேட்டிடம் சொன்னது போலவே அவர்கள் கொடுத்த அந்த பாடாவதி 200 ரூ. ஷுவைக் கொடுத்து விட்டு 6000 ரூ. விலையுள்ள என்னுடைய செருப்பை மாற்றிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அங்கே நடந்த களேபரத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் ? அந்தப் பிய்ந்த ஷுவைப் பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவம் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கிறது.
***
|