செலின் தன் சட்டையைக் கழற்றி வீசியெறிந்த அடுத்த கணம் - எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் அத்தனை சடுதியில் நடந்தன. எங்கிருந்தோ ஓடி வந்த பவுன்சர் தன் கோட்டைக் கழற்றி செலினின் மேல் மூடி, அப்படியே அலக்காக அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே போனார்.
சொல்லி வைத்தது போல் அதே நேரத்தில் டான்ஸ் ஃப்ளோரிலேயே வாந்தி எடுத்து வைத்தாள் ஷ்ரேயா. அவ்விடத்திற்குச் சென்றது ஒரு டர்க்கி டவல். ஷ்ரேயாவையும் வெளியே தூக்கிச் சென்றார் ஒரு பவுன்சர்.
ஃப்ளோர் மேனேஜர் சேட்டிடம் வந்து “ இதற்குத்தான் சேட்ஜி முன்னாலேயே சொன்னோம் ” என்றார்.
“ சரி விடுங்கள்; வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் ” என்று கூறி அவர் கையில் இரண்டு மூன்று 1000 ரூ. தாள்களைத் திணித்து விட்டுக் கிளம்பினான் சேட்.
அந்த நிலையிலும் – அதாவது, பவுன்சர் தன்னைத் தூக்கிக் கொண்டு போகும்போதே - அங்கிருந்த அனைவருக்கும் ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து விடை பெற்றாள் ஷ்ரேயா!
சேட் வழக்கமாகத் தங்கும் ஓட்டலுக்கு வந்தோம். எல்லோரும் கூட்டமாக ஒரே அறையில் தங்க முடியாது என்பதால் மேலும் இரண்டு அறைகளை எடுத்தோம். மணி மூன்று இருக்கும். களைப்பாக இருந்தது. அறைக்குள் நுழைந்ததும் படுக்கையில் விழுந்தேன். செலின் பாத்ரூமுக்குச் சென்றாள்.
பத்து நிமிடம் சென்றிருக்கும். பாத்ரூம் சென்றவள் ஆளையே காணோம்.
எனக்குள் திகில் பரவியது, செத்து கித்துப் போய் விட்டாளோ என்று! வாழ்க்கையில் அப்படி ஒரு பயத்தை நான் என்றுமே உணர்ந்ததில்லை. செய்யாத குற்றத்திற்குப் பழி ஏற்க வேண்டுமே! அதிலும் இந்தப் பத்திரிக்கைகள் .... பிறந்த குழந்தையிலிருந்து ஆரம்பித்து அல்லவா என் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்கள்!
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞனைப் பற்றி ஒரு இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலில் வந்திருந்த கதை ஞாபகம் வந்தது. அந்த இளைஞன் சிறு வயதிலிருந்தே பல கொலைகள் செய்து வந்திருக்கிறான் என்று எழுதியிருந்தது அந்தப் பத்திரிக்கை!
பெண் விவகாரத்தில் மாட்டினாலோ தொலைந்தோம். ‘காமக் கொடூரன்’ என்ற பட்டத்தைக் கொடுத்து, பெரிய கற்பழிப்புப் பட்டியலே போட்டு விடுவார்கள் . நானோ ஏற்கனவே எல்லா பிரபலங்களையும் விமர்சித்து எழுதி எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளானவன். கேட்கவே வேண்டாம். ஒன்னாங் கிளாஸ் படிக்கும்போதே சிலேட்டுக் குச்சியால் குத்தி சக மாணவியைக் கொன்று விட்டேன் என்று கூசாமல் எழுதுவார்கள். சாட்சி சொல்வதற்கு ஒன்பது பேர் ஓடி வருவார்கள்.
(என் வயது 53; ஆனால் சாட்சிகளின் வயது 25 தான் இருக்கும்! ஆனாலும் அதைப் பற்றி யாருக்குக் கவலை ? தர்ம அடி கொடுக்கும்போது இந்த லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது! ) போலீஸ் துறையில் ஐ.ஜியாக இருக்கிறார் என் நெருங்கிய நண்பர் ஒருவர். அவர் கூட என் உதவிக்கு வர மாட்டார் என்று தோன்றியது. காரணம், அவர் ஒரு காந்தியவாதி. ‘கெட்ட சகவாசத்தினால் கெட்டுப் போகிறேன்’ என்று வேறு அடிக்கடி என்னை (அன்பாகத்) திட்டிக் கொண்டிருப்பவர்.
“ இருங்கள். நான் கமிஷனர் ஆனதும் உங்களையும் உங்கள் நண்பரையும் ஒரு நாளாவது சந்தேகக் கேசில் புக் பண்ணி உள்ளே போடாவிட்டால் என் பெயர் ‘ஸோ அண்ட் ஸோ இல்லை ” என்று கூறிச் சிரிப்பார்.
நிக்கியிடம் போய்ச் சொன்னேன். “ அவர் கமிஷனராகி விட்டால் நான் சென்னையில் இருந்தால்தானே ? எப்படியும் ஆறு மாதத்தில் அவரை ஊர்க்காவல் படை, போலீஸ் வீட்டு வசதி வாரியம், ட்ரெய்னிங் சென்டர் என்றுதானே ஏதாவது உப்புக்குச் சப்பாணி இடத்தில் போஸ்டிங் போடுவார்கள் ? அதற்குப் பிறகுதான் நான் சென்னைக்கே திரும்புவேன் ” என்றான் நிக்கி.
விளையாட்டெல்லாம் இருக்கட்டும். இப்போது நிஜமான சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டோமே ? அந்தப் போலீஸ் ஐ. ஜி. ‘இவ்வளவுதானா சாரு நீ ?’ என்று ஒரு ஏளனப் பார்வை பார்த்தால் நம் கதி ?

( Srinivasan, Needhi, Gopalakrishnan & Friends )
எழுந்து சென்று பாத்ரூம் கதவைத் தட்டினேன். பதில் இல்லை. லேசாக கை வைத்துத் தள்ளினேன். திறந்தது. நல்ல காலம்; உள்ளே தாளிடவில்லை. ஆனால் திறந்து பார்க்க பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.
இதுவரை வாழ்க்கையில் மற்றொருவர் பாத்ரூமுக்குள் இருக்கும்போது நாம் திறந்திருக்க மாட்டோம் அல்லவா ? அந்தத் தயக்கம். நீண்ட நேரம் கூப்பிட்டுப் பார்த்தும் பதில் இல்லாததால் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு திறந்தேன். அப்படியே டாய்லட் சீட்டில் அமர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தாள் செலின்.
எழுப்பியும் எழுந்து கொள்ளவில்லை. ஆடைகளைச் சீராகப் போட்டுவிட்டு கைத்தாங்கலாக அழைத்துவந்து (என்னாலேயே நிற்க முடியவில்லை என்பது வேறு விஷயம்) படுக்கையில் கிடத்தி .. போர்வையால் போர்த்தி விட முயன்றபோது “ நோ சாரு ... நோ சாரு ...” என்று முனகினாள் செலின்.
மனதில் துக்கம் கப்பியது. என்னைப் பற்றி நாலு பேர் நாலு விதமாகச் சொல்வார்கள். சில விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்கவே கூசும். ஆனால் என்னிடம் உள்ள நற்பண்புகளில் ஒன்று - என்னை நம்பியவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். நட்புக்காக உயிரையும் கொடுப்பேன்
செலினின் பக்கத்தில்தான் படுத்திருந்தேன். அவள் மீது என் சுண்டு விரல் கூடப் படவில்லை. என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் - எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை ஆறு மணிக்கே விழிப்பு வந்து விடும்.
எழுந்ததும் சேட்டுக்கும் ராஜூக்கும் போன் செய்தேன். பதில் இல்லை. ‘சரி, நேரே போய் எழுப்பலாம் ’ என்று ராஜின் அறைக்குச் சென்று தட்டினேன். “ யாரது ?” என்ற இனிய ஆங்கிலக் குரல் கேட்டது. பெயரைச் சொன்னதும் கதவு திறந்து நான் நுழைந்ததும் உடனே மூடியது.
அடப்பாவி! அதற்கு முன்னால் வாழ்க்கையில் அப்படி ஒரு காட்சியை நான் கண்டதேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெறும் எட்டு மணி நேரப் பழக்கமே ஆன ஷ்ரேயா என் எதிரே உடம்பில் பொட்டுத் துணியில்லாமல், அதை பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். ராஜைக் காணோம்.
நான் அதிர்ச்சியில் ஏதோ சில வார்த்தைகளை உளறியதும் ஒரு துண்டை எடுத்து வேண்டா வெறுப்பாகக் கட்டிக் கொண்டாள்.
“ நீங்கள் எல்லோரும் ஓடி விட்டீர்கள் என்று நினைத்தேன் ” என்றாள். எழுந்து பார்த்தபோது ராஜைக் காணவில்லையாம். அதனால் அப்படி நினைத்தாளாம்.
“ அப்படி நாங்கள் ஓடியிருந்தால் ... ? உனக்குப் பயமாக இல்லையா ?”
“ ஏன் பயம் ? சேட் தான் இங்கே பெரிய வி.ஜ.பி. போலிருக்கிறதே ? அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கிளம்பியிருப்போம்.”
“ என்ன இருந்தாலும் போலீஸ், கேஸ் என்று ..”
“ எங்கள் மூன்று பேரையும் பார்த்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றா நினைக்கிறாய் ?” என்று கேட்டு என்னையே உற்றுப் பார்த்தாள் ஷ்ரேயா. அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
ரெங்கராஜ்.
மிகுந்த பதற்றத்துடன் இருந்தான்.
அவன் சொன்ன விஷயத்தின் சுருக்கம் இது.
ஷ்ரேயா, செலின், ஷெரின் - மூவரும் பூனா அல்ல. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்ஜினியரிங் பட்டதாரிகளும் அல்ல. ப்ளஸ் டூ மாணவிகள். வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டார்கள்.
தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. சேட்டின் அறைக்கு ஓடினேன். “ இவர்கள் பெண்கள் அல்ல. மனித வெடிகுண்டுகள் ( ‘ லைவ் பாம்ஸ் ’ என்பது அவன் பயன்படுத்திய வார்த்தை) எந்த நேரத்திலும் வெடித்து விடும் ” என்றான் சேட். அதோடு விடவில்லை.
“ உடனே இவர்களைக் கொண்டு போய் ஹைதராபாதுக்கு வண்டி ஏற்றி விடுங்கள். என் அப்பனுக்குத் தெரிந்தால் பேப்பரில் முதல் பக்கத்தில் நியூஸ் போட்டு விடுவான். அதுவும் போட்டோவோடு ” என்று மேலும் புலம்பினான்.
“ எக்ஸாஜெரேட் பண்ணாதே சேட் ” என்றேன்.
“ ஐயோ, உனக்குத் தெரியாது சாரு. எங்கப்பனுக்கு நியூஸ்னா நியூஸ்தான். பெத்த புள்ளைன்னு கூட பார்க்க மாட்டான். மாரலிஸ்ட் வேறு.”
பயத்தில் சேட் ‘ ஒன்னுக்கே ’ போய் விடுவான் போலிருந்தது.
அப்புறம் என்ன நடந்தது ? ரொவால்ட் டாலின் கதையில் கூட அப்படி ஒரு திருப்பத்தைப் பார்க்க முடியாது. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
***
|